கிருஷ்ணகிரி: பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர், போலி சான்றிதழ் கொடுத்து, 21 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தது குறித்து, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52. இவர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சிஅடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றளித்து, 1999ல் ஆசிரியர் பணி பெற்றார்.
தற்போது, காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லிபுதுார் அரசு துவக்கப் பள்ளியில் பணியில் உள்ளார். இவர், போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019ல் குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். இதன்படி, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., முருகன் மற்றும் காவேரிப்பட்டணம், வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில், ராஜேந்திரன், 10ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என தெரிந்தது.மேலும், பணம் கொடுத்து போலியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரிந்தது. இது குறித்து, டி.இ.ஓ., கலாவதி, எஸ்.பி., பண்டிகங்காதரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.