மதுரை: விளைபொருட்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மழையில் நனையும் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த சூரிய பிரகாசம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்தியாவில் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை. அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதற்காக டெல்டா பகுதியில் மட்டும் 10 முதல் 15 நாட்கள் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் மழையினால் நெல் ஈரமாகி சேதமடையும் நிலை உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், கொள்முதலுக்கு தாமதம் ஏற்பட்டால், விவசாயிகளுக்கும், விளைபொருளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அரசுத் தரப்பில் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘விவசாயிகள் விளைபொருட்களை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் ரோட்டிலேயே நாட்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். பல விவசாயிகள் வறுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது. எனவே, விவசாயிகளை பாதுகாக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். விளைபொருளை விற்க முடியாமல் தவிக்கும் நிலையில், இதற்காக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனைக்குரியது. அரசு அதிகாரிகள் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.40 லஞ்சமாக தராத விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்வதில்லையாம். இதற்காக பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அதையே அரசிடம் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். முளைத்து வீணாகும் ஒவ்வொரு நெல்மணிக்கும் அதற்கு காரணமான அதிகாரியிடம் உரிய பணத்தை வசூலிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் தொடர்பாக அரசு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். எனவே, தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? நெல் மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.