கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் சேர்க்கை: தக்கவைக்க ஆசிரியர்கள் என்ன செய்யலாம்?


தேசிய நல்லாசிரியர் (2019) 

திரு. இரா. செல்வக்கண்ணன், 

 (அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றவர்.)

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 24 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. உயிரிழப்புகள், பல லட்சம் வேலை இழப்புகள், தொழில் நிறுவனங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு என்ற நிலையில், ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்னவெனில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கிய 14 நாட்களில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளதுதான். இந்த வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன் மூலம் ஆசிரியர்- மாணவர் விகிதம் தொடக்கப் பள்ளிகளில் ஓர் ஆசிரியருக்கு 30 மாணவர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 35 பேர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 பேர் என்ற அளவில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வின்போது பல ஆயிரம் ஆசிரியர்களை உபரிப் பணியிடமாக அறிவித்து வெவ்வேறு மாவட்டங்களுக்குப் பணி நிரவல் செய்வது தவிர்க்கப்பட்டுவிடும். புதிதாகச் சேர்ந்துள்ள ஒவ்வொரு லட்சம் மாணவர்களுக்கும் குறைந்தது 2,500 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 என்ன காரணம்?

 2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகள், மாணவர் எண்ணிக்கையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. இந்தச் சூழலுக்கு, பெற்றோர்கள் திடீரென்று அரசுப் பள்ளிகள் மேல் வைத்துள்ள நம்பிக்கை மட்டும் காரணம் அல்ல. பெருநகரங்களில் தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கு வேலையை இழந்து அல்லது தங்கள் சொந்த ஊர் திரும்பிய இடத்தில் மீண்டும் அந்த நகரங்களுக்குச் சென்றால் பெரும் தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் உள்ளூரிலேயே குழந்தைகள் படிக்கட்டும் என்ற எண்ணம் ஒரு காரணம்.

 இரண்டாவதாக வேலை இழப்பின் காரணமாகப் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை, மூன்றாவதாக ஓராண்டு எப்படியும் பள்ளிகள் திறக்கப்படப் போவதில்லை , வீணாக எதற்குக் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்? அரசுப் பள்ளிகளில் சேர்த்தவுடன் பாடநூல்கள் வழங்கப்பட்டுவிடும். ஓய்வில் வீட்டில் இருக்கும் நாம் கற்றலில் வழிகாட்டலாம். அதன் மூலம் இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை மிச்சப்படுத்துவோம் என்ற எண்ணம் ஒருபுறம். இந்த மூன்று காரணங்களால் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களைத் தக்க வைக்கும் பெரும் பொறுப்பு அரசுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் இருக்கிறது.

 தனியார் பள்ளியை நோக்கி...

 நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே நமக்கு முன்னிருந்த ஒரே வாய்ப்பு. மக்களின் பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்து வாங்கும் சக்தி அதிகரித்து, கடந்த 25 ஆண்டுகளில் தனக்குக் கிடைக்காத வாய்ப்பு தன்னுடைய குழந்தைகளுக்காவது கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர்.

 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை பெற்றோரை ஏமாற்றம் அடையச் செய்தன. தனியார் பள்ளிகளில் இருக்கக்கூடிய வானுயர்ந்த கட்டிடங்கள், பிரம்மாண்டமான கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை பெற்றோர்களின் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன.

 உட்கட்டமைப்பு வசதிகள் அவசர அவசியம்

2002-ம் ஆண்டில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டு அதன் விளைவாக அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.

45,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் அனைத்துக்கும் போதுமான அடிப்படைக் கட்டமைப்பை அரசே ஏற்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும். பெருந்தொற்றுக் காலத்தில் அரசுப் பள்ளிகளின் பக்கம் திரும்பிய மாணவர்களின் எண்ணிக்கையினை அடுத்து வரும் ஆண்டுகளில் தக்கவைக்க வேண்டும். இதற்குப் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைப் பள்ளிகளே ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியம்.

 எப்படி சாத்தியம்?

 பள்ளி சார்ந்த சமூகத்தை நாடுவதன் மூலமும், அருகில் உள்ள பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை (சிஎஸ்ஆர்) முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலமும் சாத்தியமாக்கலாம். அத்துடன், பள்ளிகளுக்கு அருகிலுள்ள வங்கிகள், தொழிற்சாலைகள், சுழற்சங்கங்கள், அரிமா சங்கங்கள் ஆகியவற்றை அணுகித் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவு செய்தால் சேர்ந்துள்ள மாணவர்களைத் தக்க வைப்பதுடன், அடுத்து வரும் ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கற்பித்தலில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஈடு இணை எவருமில்லை. அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்கு அதுமட்டும் போதாது. அருமையான சுற்றுச்சூழல், பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிக்கத் தேவையான உபகரணங்கள் அத்தியாவசியத் தேவை.

 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கடந்த ஆண்டு பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் ( Corporate Social Responsibility) திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அவற்றை மேம்படுத்தும் சீரிய திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்மூலம் தற்போது வரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நிதி சேகரிக்கப்பட்டு பல்வேறு அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஒரு சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க போட்டா போட்டி நிலவுகிறது என்பதைப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆண்டும் 200 இடங்களுக்கு 700 பேர் போட்டி என்றும் முதல் நாளில் முதல் வகுப்பில் 100 மாணவர்களைச் சேர்த்த பள்ளிகள் பற்றியும் நாம் படித்தோம். அந்த நிலையை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு வரவேண்டும். இதற்கு அரசும், பள்ளி நிர்வாகமும் அந்த ஊர்ப் பொது மக்களோடு இணைந்து முயற்சி செய்தால் நிச்சயம் சாத்தியமாகும்.

 நன்றி : இந்து தமிழ் திசை...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...