தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடரப்பட்ட ‘சரல் பென்ஷன் யோஜனா’ (Saral Pension Yojana) திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரல் பென்ஷன் திட்டம்:
அரசு அலுவலங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது போல தனியார் நிறுவனங்களிலும், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாடு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மூலமாக ‘சரல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டம் மூலமாக குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த தொகைகளை மாதம்தோறும், மூன்று மாதம், ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம். இது தவிர ஒரு ஆண்டுக்கு மட்டும் செலுத்தும் வசதியும் உள்ளது. அதிகபட்சமாக செலுத்தப்படும் தொகையின் அடிப்படையில் ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர வயது வரம்பு 40 முதல் 80 வரை ஆகும்.
இந்த திட்டம் 2 வகைகளாக உள்ளது.
முதல் திட்டம்: இந்த திட்டம் மூலமாக செலுத்தப்பட்ட தொகையின்படி ஒருவரது ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும். அவர் இறந்த பின்னர் மொத்த தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.
இரண்டாவது திட்டம்: இந்த திட்டத்தின் படி ஓய்வு காலத்திற்கு பிறகு காப்பீட்டுதாரருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம், காப்பீட்டுதாரர் மற்றும் நாமினி இருவரும் இறந்த பின்னர் அவரது சட்டப்பூர்வ வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பின்னர் சரண்டர் செய்து ஓய்வூதியம் பெற முடியும். மேலும் இந்த்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படும். ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் அவர்களுக்கு முழு தொகையும் ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது இந்த திட்டம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.