கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும்: பெற்றோர் சங்கம் கோரிக்கை...

 



12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும் என்று இந்தியப் பெற்றோர் சங்கம்  பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது.


நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையே சிபிஎஸ்இ வாரியம், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த 12ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தையும் ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.


மேலும் ஜூன் 1ஆம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும், தேர்வு நடத்த ஏதுவான சூழல் இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாகத் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஐசிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்களின் 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையாத சூழலில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


இந்நிலையில் இதுகுறித்து இந்திய அளவிலான பெற்றோர் சங்கம் பிரதமர்  நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’கரோனா இரண்டாவது அலையில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் எச்சரிக்கத் தகுந்த அளவில் அதிகரித்து வருவதால், ஆஃப்லைன் முறையில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது. தற்போதைய சூழலில் இன்னும் சில மாதங்களுக்காவது தேர்வை நடத்த முடியாது.


தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும். அவர்களின் மனதில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்வுகளைத் தாமதிப்பதால் அவர்களின் ஓராண்டும் வீணாகக் கூடும். ஏற்கெனவே மாணவர்கள் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக 12ஆம் வகுப்பைப் படித்து வருகின்றனர்.


இதனால் 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும். மாணவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்களை மதிப்பிடலாம். தேவைப்பட்டால் கல்லூரிகள் திறனறிவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.


வெளிநாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அக மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்கின்றன. அதை இந்தியாவிலும் கடைப்பிடிக்கலாம்’’.


இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...