கரோனா வைரஸுக்கும், ரத்தம் உறைதலுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதன் காரணமாகப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாகவும் கேள்விப்படுகிறோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிலர் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதையும் பார்க்கிறோம். இதற்கான காரணங்கள் என்ன என்பது புரியாமல் குழப்பமாக இருக்கும். கரோனா வைரஸுக்கும் ரத்தம் உறைதலுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ளும்போது, இது விளங்கும்.
இதுகுறித்துத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி.ராமானுஜம் கூறியது:
''கரோனா வைரஸ் உடலைத் தாக்கும்போது நம் உடலின் வெள்ளை அணுக்கள் அவற்றுடன் போராடுகின்றன. இந்தப் போராட்டத்தை அழற்சி (Inflammation) என்கிறார்கள். அப்போது பல வேதிப்பொருள்கள் வெளியேறுகின்றன.
நமது உடலெங்கும் நீண்டு விரிந்து பரந்திருப்பது ரத்தக் குழாய்களின் சாம்ராஜ்யம். ரத்தக்குழாய்களின் சுவர்கள், மெல்லிய Endothelium என்னும் திசுவால் ஆனவை. வைரஸ் தாக்குதல்களின்போது ஏற்படும் மோதலில் இந்த எண்டோதீலியம் ஆங்காங்கே கிழிந்து விடுகிறது. எங்கு ரத்தக் குழாயின் சுவரில் விரிசல் விழுந்தாலும் அங்கு ரத்தம் உறைந்து விடுகிறது (Thrombo embolism). அந்த உறுப்புக்குப் போகும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஆங்காங்கே ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, இரண்டாம் - மூன்றாம் வாரத்தில். நுரையீரல் ரத்தக் குழாய்களில் உறைவு ஏற்படுவது (Pulmonary Thrombo embolism) மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.
நுரையீரலின் சின்னசின்ன ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே ரத்தம் உறைவதே ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. சி.டி. ஸ்கேனில் நுரையீரல் பாதிப்பு என அளவிடுவது, இந்த ரத்த உறைதலால் ஏற்படும் பாதிப்பையே. ரத்தம் உறையாமல் இருக்க வைக்கும் ஹெப்பாரின் போன்ற மருந்துகள் கரோனா சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்த உறைவு, மாரடைப்பை (Heart attack) ஏற்படுத்துகிறது.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் உறைவை பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்குக் கூட இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம் திடீரென்று மாரடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, 40-50 வயதானவர்களுக்கு.
இந்த ரத்த உறைதலைக் கண்டறிய D dimer என்ற ரத்தப் பரிசோதனையை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும். இது கூடுதலாக இருக்கும்பட்சத்தில் ரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகள் தரப்படும் (ஆஸ்பிரின், ஹெப்பாரின்).
கரோனாவால் தீவிர பாதிப்பு ஏற்பட்ட அனைவரும் ஓரிரு மாதங்களுக்கு இதய மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரத்தம் உறையாமல் தடுப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்''.
இவ்வாறு டாக்டர் ராமானுஜம் தெரிவித்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை