கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை 12 - மலாலா தினம். (July 12 - Malala Day)...

  ஜூலை 12 - மலாலா தினம். அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்றும் பெண் கல்விக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்த போராளி. இள வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர்.



தாலிபான் பயங்கரவாதிகளின் தோட்டாக்களை மண்டியிடச் செய்து, மீண்டு எழுந்துள்ள பாகிஸ்தான் போராளிச் சிறுமி மலாலாவைக் கௌரவிக்கும் வகையிலும், உலக அளவில் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை வலுப்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


உலக அளவில் 'மலாலா தினம்' கொண்டாடப்படும் என்பதே அந்த அறிவிப்பு. சர்வதேச அளவில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி, அடிப்படை உரிமை என்பதற்கான அடையாளமாகவே மலாலா திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்,  ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன்.


தற்போது, உலக அளவில் 6 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலையில் வாடுகிறார்கள். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்பு உணர்வை வலுப்படுத்துவதே மலாலா தினத்தின் நோக்கம்.


நாடு, மொழி, மதங்கள் கடந்து தனக்குக் கிடைத்துள்ள ஆதரவில் நெகிழ்ந்து உலகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார், 

இனி மலாலாவின் சரித்திரத்தை நினைவுகூர்வோம்...


தைரிய தேவதை!


வீதிக்கு வருவதே வீரதீரச் செயல், எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அச்சம், 'நாமும் நாளை இப்படித்தான் தெருவில் பிணமாகக் கிடப்போமா?' என்கிற பீதி... 2003 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் சந்தித்த அவலநிலையே இவை.


எல்லாவற்றுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, பெண்களுக்குக் கல்வி கிடைக்காமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்தனர்.


இக்கொடுமைகளை எதிர்த்து நின்றாள். 2009-ல் தன் எழுத்தின் மூலம் தாலிபான்களில் அட்டகாசங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டினாள். ஸ்வாட் பகுதி முழுவதுமே தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு வித்திட்டாள்.


அவள் மலாலா யூசஃப்சாய். அப்போது அவளுக்கு வயது 11. ஆம்,  தாலிபான்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் தீண்டிய 14 வயது போராளிச் சிறுமியைப் பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.


சக தைரியச் சிறுமிகளைப் போலவே யூனிஃபார்ம் அல்லாத சாதாரண உடை அணிந்து, புத்தகங்களை மார்பில் மறைந்து பள்ளிக்குச் சென்று வந்த மலாலாவிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. டைரிக் குறிப்பின் ஒவ்வொரு வாக்கியமும் தாலிபான்கள் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளின் பதிவாகவே இருந்தது. அதை அப்படியே பி.பி.சி. உருது மொழிப் பிரிவுக்கு புனைப்பெயரில் அனுப்பிவைத்தாள் மலாலா. எழுத்தின் வீரியம் உணரப்பட்டதால், உடனடியாக வலைப்பதிவு தொடராக வெளியிடப்பட்டது. அதுவே, ஸ்வாட் பகுதியில் இருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.


அதன்பின், நியூயார்க் டைம்ஸ் ஆவணப் படம் மூலம்தான் தெரியவந்தது, பிபிசி-யில் தன் டைரிக் குறிப்புகளை வழங்கியது 11 வயதுச் சிறுமி மலாலா என்று. முதன்முறையாக மலாலாவின் முகத்தைப் பார்த்த உலகம் வியப்பில் ஆழ்ந்தது. ஹிட்லரின் வெறிச் செயல்களைத் தனது டைரிக் குறிப்புகள் மூலம் வரலாற்றுப் பதிவாக்கிய ஆன்னி ஃபிராங்க்கை நினைவூட்டினாள்.


மலாலாவின் தைரியத்தைக் கொண்டாடியது பாகிஸ்தான். அந்நாட்டின் இளம் அமைதியாளருக்கான முதல் விருதை வழங்கி கௌரவித்தது பாகிஸ்தான் அரசு. பெண் கல்விக்காகப் போராடும் அவளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன.


இவற்றைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்ட தாலிபான்கள், மலாலாவை தங்கள் 'ஹிட்' லிஸ்டில் வைத்து, அவளைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர். மின்கோராவில் உள்ள பள்ளி வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தவளைச் சுட்டனர். கழுத்திலும் தலையிலும் தோட்டாக்கள் துளைக்க, படுகாயத்துடன் விழுந்தாள். அந்தத் தோட்டாக்களுக்கே மலாலாவின் மகத்துவம் தெரிந்திருக்கிறது. ஆம், தோட்டக்கள் அவள் உயிரைப் பறிக்கவில்லை.


உடனடியாக, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாகிஸ்தான் மக்களுக்கு மலாலா குறித்த வருத்தமும், தாலிபான்கள் மீதான கோபமும் மிகுதியானது. உலக நாடுகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பினர். அதேவேளையில், மலாலா உயிர்பிழைக்கப் பிரார்த்தனைகளும் தொடர்ச்சியாக நடந்தன.


இதனிடையே, மலாலா தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியால், பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆயுதக் கலாசாரத்துக்கு எதிராக மக்களிடையே உணர்வலைகள் எழுந்தன. பெண்கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காகவும், மதசார்பற்றவளாக செயல்பட்டு வருவதற்காகவுமே மலாலாவைத் தாக்கினோம் என்ற தாலிபான்களின் விளக்கமும் மக்களின் கொதிப்பைக் கூட்டியது.


பாகிஸ்தான் அரசின் முயற்சியால் மலாலாவுக்கு இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நினைவு இழந்தவளை மீட்க, மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். லட்சக்கணக்கான உள்ளங்களின் வேண்டுதல்களுக்குப் பலன் கிடைத்தது. 


கல்வியில் பின்தங்கி இருக்கும் பாகிஸ்தானில் 'நானும் மலாலா' என்ற முழக்கம், மாணவர்களின் மந்திரச் சொல் ஆனது.


2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.


2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...