கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா?



 பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா???


அதற்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறதா???


வீட்டில் பெரியவர்கள் தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லை. அதனால் குழந்தை புஷ்டியாக மாட்டேங்கிறது.  எனவே லாக்டோஜென் போன்ற மாவுகளை கொடுக்கவும் என்கிறார்களே.  என்ன செய்வது? என்பது பல தாய்மார்களின் கவலையாக இருக்கிறது. 


இந்தக்கட்டுரை வழியாக 

பிறந்த குழந்தை எப்படி உடல் எடை கூட வேண்டும் 


வயதுக்கேற்றபடி எவ்வளவு எடை இருந்தால் நார்மல் என்று பார்ப்போம். 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


 குழந்தையின் பிறப்பு எடை மூன்று கிலோ இருக்கிறது என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் 


குழந்தைக்கு பிறந்த ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கினால் போதுமானது. 

இதை EXCLUSIVE BREAST FEEDING என்று அழைப்போம். 


குழந்தை தனது தாகத்தையும் பசியையும் தாய்ப்பால் மூலமாகவே முதல் ஆறு மாதங்களுக்கு தீர்த்துக்கொள்ளும். 


பிறந்த குழந்தைக்கு முதல் வாரத்தில் நீர் இழப்பு ஏற்படும். இதனால் உடல் எடையில்  பத்து சதவிகிதம் வரை இழப்பு ஏற்படும். 


இந்த உடல் எடை இழப்பை தாய்மார்கள் பார்த்து பயந்து 

தனது குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லையோ என நினைப்பார்கள். 


குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக  கிடைப்பதை உறுதி செய்ய 

அது எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறது என்பதை பார்த்தாலே போதும். 


சரியான கால அளவில் சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக கிடைக்கிறது என்றே பொருள். 


பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு பத்து வரை கூட மலம் கழித்தாலும் நார்மல் தான். 

மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று மலம் கழித்தாலும் நார்மல் தான். 


பிறக்கும் போது மூன்று கிலோ இருந்த குழந்தை முதல் சில நாட்களில் 300 கிராம் வரை எடை குறைவது நார்மல்.


பிறகு மீண்டும் உடல் எடை கூட பத்தாவது நாள் பிறப்பின் போது  இருந்த எடையை அடையும்.


முதல் மூன்று மாதங்களில் நாளொன்றுக்கு 

25-30 கிராம் உடல் எடை கூடும். 


இந்த பருவத்தில் தான் 

குழந்தைகள் நன்றாக புஸ் புஸ் என்று இருக்கும். 

காரணம் உடல் எடையில் ஏற்படும் நல்ல வளர்ச்சி. 


மூன்றாவது மாதத்தில் கழுத்து நிற்கும். 


பால் குடிப்பது - தூங்குவது- சிறுநீர் மலம் கழிப்பது இப்படியாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் ஜாலியான நாட்கள் அவை. 


நான்காவது மாதத்தில் இருந்து குழந்தை தாயைப்பார்த்தும் பிறரைப்பார்த்தும் வாய்விட்டு கெக்கே பெக்கே என்று சிரிக்கத்துவங்கும். 


அதற்குப்பிறகு நான்காவது மாதத்தில் இருந்து ஒரு வயது வரை 

மாதத்திற்கு 400 கிராம் வரை உடல் எடை கூடும். 


அதாவது நாளொன்றுக்கு பத்து கிராம் முதல் பதினைந்து கிராம் என்று உடல் எடை கூடும் வேகம் குறையும். 


ஐந்தாவது மாதத்தில் குப்புறப்படுத்துக்கொண்டு தலையைத்தூக்கும். 


பிறக்கும் போது உங்கள் குழந்தை  மூன்று கிலோ எடை இருந்தால் 


அந்த குழந்தை ஆறு மாதம் எட்டும் போது 

எடை இருமடங்காகி ஆறு கிலோ ஆகியிருந்தால் போதுமானது. ( பிறப்பு எடை × 2) 


எட்டாவது மாதத்தில் தானாக பிடிமானம் இல்லாமல் உட்காரும். 


ஒன்பதாவது மாதத்தில் பிடிமானத்துடன் நிற்கும். இவ்வாறு நிற்பதற்கு ஒரு வயது வரை ஆனாலும் நார்மல் தான். 


15 மாதத்தில் இருந்து நடக்க ஆரம்பிக்கும். 

எனினும் 18 மாதங்கள் வரை குழந்தை நடப்பதற்கு காத்திருக்கலாம். அதுவரை நார்மல் தான். 


குழந்தை ஒரு வயதை எட்டும் போது பிறப்பு எடையில் இருந்து மும்மடங்காக மாறி ஒன்பது கிலோ இருந்தால் போதுமானது.( பிறப்பு எடை × 3) 


ஒரு வயது நிறைவடையும் தருவாயில் 

ஒன்றிரண்டு அர்த்தமுள்ள வார்த்தைகளை பேசும். எனினும் ஒன்றரை வயது வரை குழந்தை பேசுவதற்கு காத்திருக்கலாம். 


குழத்தை இரண்டாவது வயதில் அதனுடைய பிறப்பு எடையில் இருந்து நான்கு மடங்காகி நமது எடுத்துக்காட்டின்படி  பனிரெண்டு கிலோ இருந்தால் போதுமானது. ( பிறப்பு எடை × 4) 


மூன்று வயதில் அதனுடைய பிறப்பு எடையில் ஐந்து மடங்காகி இருந்தால் நார்மல் . 

( பிறப்பு எடை × 5) 

நமது எடுத்தாக்காட்டுப்படி 3 கிலோவில் பிறந்த குழந்தை மூன்று வயதை எட்டும் போது 15 கிலோக்கள் என்பது நார்மல். 


மூன்று வயதை எட்டிய குழந்தை சுயமாக கற்பனையில் விளையாட ஆரம்பிக்கும் . 


மூன்று முதல் ஏழு வயது பருவத்தில் 

வருடத்திற்கு இரண்டு கிலோ வீதம் கூடினால் நார்மல். 


ஏழு வயது முதல் 12 வயது வரை 

வருடத்திற்கு மூன்று கிலோ வீதம் கூடினால் நார்மல். 


மூன்று வயது முதல் 12 வயது ஆன குழந்தைகள் தற்போது நம் மாநிலத்தில் அபரிமிதமான உடல் எடை அதிகரிப்பை சந்திக்கத்துவங்கியுள்ளன. 


இதற்கான காரணம் 

அதீத மாவுச்சத்து / இனிப்பு / உடல் உழைப்பின்மை போன்ற நாகரீக மாற்றங்களே ஆகும். 


பூப்பெய்தும் பருவ காலத்தை எட்டும் போது 

உயரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். 

அப்போது உடல் எடை கூடுவதை ஒப்பிடும் போது உயரம் அதிக அளவு கூடியிருக்கும். அதனால்  உடல் மெலிந்து காணப்படுவார்கள். 

அதுவும் நார்மல் தான். 


மேற்கண்ட கட்டுரையில்  கூறியவை அனைத்தும் குழந்தைக்கு எதுவெல்லாம் நார்மல் என்பது குறித்த கருத்துகள். 


நிச்சயம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மருத்துவர் அதன் வளரும் பருவத்தில் முக்கியமாக ஐந்து வயது வரை 

அதன் வளர்ச்சி மேற்பார்வையாளராக

ஊட்டச்சத்து நிபுணராக  

சிறு நோய் 

ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பவராக 

இருப்பது நல்லது. 


உங்கள் குழந்தைக்கு தாங்கள் செய்யும் உணவியல் 

வாழ்வியல் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் 

குழந்தையின் மருத்துவரிடம் கருத்து கேட்டு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 


இனிய தாய்மார்களே


இனி உங்களை நோக்கி வரும் குழந்தையின் எடை சார்ந்த கேள்விகளுக்கு தைரியமாக பதில் கூறுங்கள். 


குழந்தையின் உடல் எடை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ 

அதே அளவு அது சரியான அளவில்  அதிகரிப்பது முக்கியம். 


உடல் எடையை அதிகரிக்க அதிகமான ஊட்டச்சத்து உணவுகளை ஊட்டி தேவைக்கும் மீறி குழந்தையை குண்டாக்கும் நிகழ்வுகளையும் கடந்து வருவதால் இந்தப்பதிவு அவசியமாகின்றது. 


 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Changes made in UG NEET – 2025 Exam

    UG NEET - 2025 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை Natoinal Testing Agency NTA Public Notice  Changes made in UG NE...