இருசக்கர வாகனங்கள் பராமரிப்பு - கவனத்தில் கொள்ள வேண்டியவை...
🏍🏍🏍🏍🏍
பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் பைக்கை முறையாக பராமரிக்காவிட்டால், பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்கு பங்கம் வந்துவிடும். வாரத்தில், மாதத்தில் சில மணி நேரங்களை ஒதுக்கினாலே பைக் எந்த பிரச்னையும் கொடுக்காது. செலவும் வைக்காது. அதுபற்றிய பராமரிப்பு விவரம் இங்கே....
#வாரம் ஒருமுறை சுத்தம்: (cleaning)
வாரம் ஒருமுறையாவது பைக்கை சுத்தம் செய்வது அவசியம். சர்வீஸ் ஸ்டேஷன் சென்றுதான் வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாதது. பைக்கில் சேறு படிந்திருந்தால், வீட்டிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன்ஸ் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா என்பதை கவனிக்க முடியும். பேட்டரியில் டிஸ்டில்டு வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். இரண்டு வீல்களிலும் காற்று சரியான அளவு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும். இது, மைலேஜ் டிராப் ஆகாமல் இருக்க உதவும்.
#இன்ஜின் ஆயில்Engine oil):
ஆயிலின் மசகு (lubrication) தன்மைதான் இன்ஜினை அதிகம் சூடாக்காமலும், உராய்வில் தேய்ந்து போகாமலும் காக்கிறது. எனவே, வாகன தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கி.மீ தூரம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (எது முந்துகிறதோ அதன்படி) இன்ஜின் ஆயில் மாற்றுவது இன்ஜினின் ஆயுளை நீட்டிக்கும். பரிந்துரைத்த கிரேடு ஆயில் பயன்படுத்துவது முக்கியம். ஆயில் குறைந்துவிட்டது என்பதால், வேறு ஏதாவது ஆயிலை ஊற்றுவது தவறு.
#எலெக்ட்ரிக்கல்: (Electrical):
முடிந்தவரை மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பைக்கை பாதுகாத்தால் எலெக்ட்ரிக்கல், பெயின்ட் போன்றவற்றில் பிரச்னை வராது. ஹெட்லைட் பல்பை அதிக வெளிச்சம் தருவதுபோல மாற்றுவதாக இருந்தால் அல்லது அதிக சத்தம் தரும் ஹாரன் பொருத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட வாட்ஸ் அளவுள்ளதுதான் பொருத்த வேண்டும். மாற்றிப்பொருத்தினால், எலெக்டரிக்கல் பாகங்கள் பாதிப்பதுடன், எலெக்ட்ரிக் ரெகுலேட்டரும் சேதமாகும். எனவே, எலெக்டரிக்கல் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.
#ஏர் ஃபில்ட்:டர் (Air filter):
ஏர் ஃபில்ட்டர் அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம். இன்ஜினுக்குள் செல்லும் காற்றை சுத்தமாக்கி அனுப்பும் வேலையை செய்யும் இது சேதம் அடைந்திருந்தாலோ அல்லது நீண்ட நாள் பயன்படுத்தியதால் தூசு அதிகம் சேர்ந்திருந்தாலோ பிரச்னைதான். காற்றில் உள்ள தூசு இன்ஜினுக்குள் சென்றால், சிலிண்டரில் ஸ்க்ராட்ச் ஏற்படும். இதனால், இன்ஜின் விரைவாக தேயும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஏர் ஃபில்ட்டரை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏர் ஃபில்ட்டரையே மாற்றுவது அவசியம்.
செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?(self start):
காலையில், முதல் தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனெனில், இரவு முழுவதும் சும்மா நின்றிருந்த இன்ஜின் குளிர்ந்திருக்கும். அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். மேலும், செல்ஃப் ஸ்டார்ட்டரை ஒருமுறை பயன்படுத்தும்போது, பேட்டரியின் பெருமளவு சக்தி செலவாகிறது.
அது மீண்டும் சார்ஜ் ஆவதற்கு, குறைந்தது 20 கி.மீ தூரமாவது பயணிக்க வேண்டும். அதனால், குறைவான தூரம் பயணிப்பவர்கள் அடிக்கடி செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்துவதில் கவனம் கொள்வது நல்லது. அதேபோல், காலையில் ஸ்டார்ட் செய்தபிறகு, ஒருசில நிமிடங்களாவது ஆயில் இன்ஜின் முழுவதும் பரவ ஐடிலிங்கில் ஓட அனுமதியுங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். அப்படி செய்தால், இன்ஜின் பாதிக்கப்படும்.
#செயின் ஸ்பிராக்கெட்: (chain sprocket):
இன்ஜினையும், வீலையும் இணைக்கும் செயின் ஸ்பிராக்கெட், மிக முக்கியமான பாகம். இதன் செயின் அதிக இறுக்கமாகவோ அல்லது மிக தளர்வாகவோ இருக்கக்கூடாது. ஓட ஓட தேயும் செயினை மாதம் ஒருமுறை சோதித்து அட்ஜஸ்ட் செய்வது அவசியம். செயினில் தூசு இருந்தால் சுத்தம் செய்து, ஆயில் விட்டு பராமரிப்பது நீண்ட நாள் உழைக்க வழிவகுக்கும். நேக்கட் பைக் சிலவற்றில் செயின் வெளியே தெரியும்படி இருக்கும்.
இதில், ஆயிலுக்கு பதில் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். மேலும், ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பற்கள் தேய்ந்துபோகாமல் இருக்கிறதா என கவனிப்பதும் அவசியம். அட்ஜஸ்ட் செய்ய முடியாத அளவுக்கு தேய்ந்திருந்தால் செயின் ஸ்பிராக்கெட்டை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக, செயின் ஸ்பிராக்கெட் 30,000 முதல் 35000 கி.மீ வரைதான் உழைக்கும்.
#வீல்:
சரியான காற்றழுத்தத்தை எப்போதும் கடைபிடித்தால் வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். வீல் பஞ்சர் ஆனது தெரியாமல் பைக்கை ஓட்டும்போதுதான் பெரும்பாலும் வீல் பெண்ட் ஆகிறது. அலாய் வீல் சுலபத்தில் பெண்ட் ஆகாது என்றாலும், பெண்ட் ஆனால் சரிசெய்ய முடியாது. ஸ்போக் வீலை சரி செய்யலாம் என்றாலும், கவனமாக இருப்பது நல்லது, பெண்ட் ஆன வீலுடன் வாகனத்தை ஓட்டினால் செயின் ஸ்பிராக்கெட் பாதிக்கப்படும். டயர் ஏறுக்கு மாறாக தேயும். பைக்கின் பெர்ஃபாமென்ஸ், செயல்பாடு என ஓட்டுமொத்தமாக பாதிக்கும்.
#கார்புரேட்டர்:
காற்றும், பெட்ரோலும் கலக்கும் இடம் கார்புரேட்டர். இதில், பல ஸ்க்ரூ&க்கள் இருக்கும். சில சமயங்களில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், இதில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்க்ரூவை திருக்குவது சிலருக்கு பழக்கமாக இருக்கிறது. அப்படி செய்யவே கூடாது. ஏனெனில், காற்றும், பெட்ரோலும் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, இந்த ஸ்க்ரூ&க்கள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இதில், ஏதாவது ஒன்றை திருகினால், ஏறுக்குமாறாக மாறிவிடும்.
இதில், கைவைக்காமல் சுத்தமாக பராமரிப்பது மட்டுமே சிறந்தது. இதில் உள்ள சோக்கை அதிகாலை நேரத்தில் ஸ்டார்ட் செய்யும்போது அல்லது ஸ்டார்ட்டிங் டிரபுள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற சமயத்தில் சோக் ஆன் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டுவது நல்லது. ஏனெனில், சோக் அமைப்பு அதிக பெட்ரோல், குறைவான காற்று இன்ஜினுக்கு செல்வதுபோல வடிவமைக்கப்பட்டது. கவனிக்காமல் ஓட்டினால், டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் காலியாகிவிடும்.
#டயர்:
பொதுவாக, இருசக்கர வாகனங்களின் டயர்கள் 35,000 கி.மீ முதல் 40,000 கி.மீ தூரம் வரை மட்டுமே உழைக்கும். சில பைக்குளில் 20 ஆயிரம் கி.மீ.லேயே மாற்ற வேண்டிவரும். அடிக்கடி பஞ்சர் ஆவதுதான் டயர் பலவீனமடைந்து விட்டது என்பதற்கான அறிகுறி. டயர்களின் பட்டன் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஓட்டுவது ஆபத்து.
பட்டன்களின் ஆழம் குறைந்ததுமே மாற்றிவிடுவதுதான் பாதுகாப்பு. ஏனெனில், வளைவுகளில், மணற்பாங்கான சாலைகளில், வழுக்கும் தன்மைகொண்ட இடங்களில் தேய்ந்துபோன டயர் வாகனத்தை ஸ்கிட் ஆக்கிவிடும். மேலும், பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆவதுடன், பைக் தாறுமாறாக வளைந்து, நெளிந்து சுழல்வதும் நடக்கும். அதேபோல், குறிப்பிட்ட தூரத்தில் பைக் நிற்காது. எனவே, டயர் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
#கிளட்ச்:
கிளட்ச் லீவரை கியர் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது கிளட்ச் லீவரை லேசாக பிடித்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. இது, நல்லதல்ல. இதன்மூலம், இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுமையாக வீலுக்கு செல்லாமல் விரயகுமாகும். இதனால், மைலேஜ் பெருமளவு குறையும்.
கிளட்ச் பிளேட் தேய்மானம் ஆகும். இதற்கு ஏற்ப லீவர் கேபிள் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டியது அவசியமாகிவிடும். இதை மாதம் ஒருமுறை செக் செய்வது நல்லது. தேய்ந்துபோன கிளட்ச்சை தொடர்ந்து பயன்படுத்துவது பெட்ரோல் விரயத்துக்கு வழி வகுப்பதுடன், கியர்பாக்ஸை பாதித்து, செலவை எகிற வைத்துவிடும். மேலும், டிராஃபிக் சமயங்களில் நம்மை தள்ளாட வைத்துவிடும்.
#ஸ்பார்க் பிளக்:
இன்ஜின் இயங்க மிக முக்கியமான பாகம் ஸ்பார்க் பிளக். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யும்போது தவறாமல் இதையும் மெக்கானிக் சோதித்து பார்ப்பார் என்றாலும், அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. சரியாக தீப்பொறி வராத ஸ்பார்க் பிளக்கால் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோலும் வீணாகும். மேலும், எப்போதும் ஒரு ஸ்பேர் ஸ்பார்க் பிளக் உங்கள் பைக்கிலேயே வைத்திருங்கள். 50 ரூபாய் முதல் 100 ரூபாய் விலை கொண்ட இது பழுதடைந்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். இரீடியம் ஸ்பார்க் பிளக் என்னும் வகை ஒன்று உண்டு. இது விலை அதிகம் என்றாலும், நீண்ட நாள் உழைப்பதுடன் சீராக இயங்கி நல்ல பெர்ஃபாமென்ஸ் அளிக்கும்.
#பிரேக்:
பிரேக்கில் கால் வைத்துக்கொண்டே அல்லது பிரேக் லீவரை பிடித்தவாறு பைக் ஓட்டுவது தவறு. அப்படி ஓட்டினால், பிரேக் பேட் விரைவில் தேய்ந்து போகும். மேலும், பிரேக்கை அழுத்தியவாறு ஓட்டுவதால், அதிக வெப்பம் உருவாகும். இதனால், பிரேக் ட்ரம் தேய்ந்துவிடுவதுடன், மைலேஜூம் கணிசமாக குறையும். எனவே, தேவை ஏற்படும்போது மட்டுமே பிரேக் பெடலில் கால் வைப்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
மேலும், இன்ஜினும் ஒரு பிரேக்தான் என்பது பலருக்கு புரிவது இல்லை. அவசரமாக பிரேக் பயன்படுத்தும்போது, கிளட்ச்சையும் பயன்படுத்துவது தவறு. கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜின் ஆஃப் அகி விடாதா என கேள்வி எழும். கிளட்ச்சையும் சேர்த்து பிடிக்கும்போது, பைக் ஸ்டெபிளிட்டி பாதிக்கப்படும். மேலும், பைக் நிற்கும் தூரமும் அதிகரிக்கும். கிளட்ச் பிடிக்கவில்லையென்றால், இன்ஜினும், வீலும் நேராக இணைந்திருக்கும். ஆக்ஸிலரேட்டர் குறைவதும் பிரேக் பெடல் அழுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, நீங்கள் திட்டமிட்ட தூரத்துக்கு முன்பாகவே பைக் நின்றுவிடும்.
அதேபோல், முன் & பின் இரு பிரேக்குகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்க் பிரேக்கை பொறுத்தவரை அதில் நாமாக செய்ய எதுவும் இல்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், பிரேக் ஃப்ளுயிட் லெவல் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். அளவு குறைந்தால், உடனே சர்வீஸ் சென்டருக்கு கொண்டுசெல்வது நல்லது. அதேபோல், பிரேக் டிஸ்க்கில் சேறு படியாமல் சுத்தமாக பராமரித்து வரவேண்டியது அவசியம்.
#சஸ்பென்ஷன்: (suspension):
வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையை ஏற்றினால், முதலில் பாதிக்கப்படுவது சஸ்பென்ஷன்தான். சஸ்பென்ஷன் பழுதடைந்தால், பைக்கின் பெர்ஃபாமென்ஸ், பிரேக், செயல்பாடு, மைலேஜ் என அனைத்துமே பாதிக்கும். மேலும், சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி வர வாய்ப்பு உண்டு. எனவே, சஸ்பென்ஷன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனுக்குடன் சரிசெய்வது நல்லது.
ஷாக் அப்ஸார்பரை பொறுத்தவரை ரீகண்டிஷன் செய்து பொருத்த கூடாது. புதிதாக மாற்றுவதே நல்லது. முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பழுதடைந்து ஆயில் கசிந்தால் உடனே சரிசெய்வதுதான் நல்லது. ஏனெனில், அதில் உள்ள ஆயில் முழுவதும் வெளியேறி ஆயில் இல்லாத நிலையில் இயங்கினால், ஃபோர்க் வளைந்துவிடும். ஃபோர்க்கை சரிசெய்வது என்பது நன்றாக இருந்த கையை உடைத்து மாவுக்கட்டு போடுவது போன்றதுதான்.