ஆததே (TET) : பொய்களை உண்மைகளாக்குவதும், உண்மைகளைப் பொய்களாக்குவதும் எப்புடுறா?
1. அரிஸ்டாட்டிலாக இருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியருக்கான தகுதி பெற முடியாது. இதுதான் 2025 ஆம் ஆண்டின் நீதி!
2. அனுபவமே சிறந்த ஆசிரியர் என்ற உலக உண்மையை ஆசிரியர் பணிக்கு மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர் பணி அனுபவத்தை பணிக் கால அளவு (length of service) என்று மட்டுமே கருத முடியும். ஆனால் பொறியாளர் மருத்துவர், தீர்ப்பளிப்பவர் (நீதிபதி என்ற சொல்லை இனி தவிர்க்கலாம்) ஆகியோருக்கு மட்டும் இது பொருந்தாது.
3. தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியருக்கான 100% தகுதி பெற முடியும். இல்லையென்றால் பணியில் தொடர முடியாது. பதவி உயர்வும் பெற முடியாது.
4. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழுக்கு மட்டுமே வாழ்நாள் முழுதும் செல்லத்தக்க (lifetime validity) சிறப்புத் தகுதி உள்ளது. வேறு எந்த ஆசிரியர் கல்விப் படிப்புத் தேர்ச்சி சான்றிதழ்களும் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது அல்ல. உண்மைத்தன்மை பெற்ற ஆசிரியர் கல்விப் படிப்பு சான்றிதழ்களும் செல்லாதவையே.
5. கல்வி உரிமைச் சட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர் பணிக்கு தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டது. (கல்வி உரிமைச் சட்டம் ஏப்ரல் 1, 2010 இல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 23, 2010ல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 11, 2011 இல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது)
6. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் 2001 இல் ஆசிரியர் பணிக்கு வகுத்த கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். பழைய கல்வித் தகுதி 2010 க்குப் பிறகு செல்லாது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் தற்போது பணியில் உள்ளவர்கள் அனைவரும் பணியில் நீடிக்க, பதவி உயர்வு பெற தகுதி இல்லாத ஆசிரியர்களே!
7. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆகஸ்ட் 23, 2010 வெளியிட்ட அறிவிப்பாணையில் (notification) 2001 மற்றும் அதற்கு முன்னர் வகுத்த குறைந்தபட்சக் கல்வித் தகுதிகளோடு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டோம். இருப்பதை இருப்பதாகக் கூற மாட்டோம்
8. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் (position in service) எப்போது நியமனம் பெற்றிருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எந்த அறிவிப்பும் இன்றுவரை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்போ அல்லது மத்திய மாநில கல்வித்துறைகளோ வெளியிடப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்திலும் அப்படிக் கூறப்படவில்லை. ஆனால் இல்லாததை இருப்பதாகக் கூறுவோம்.
9. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் பிப்ரவரி 11, 2011 இல் வெளியிட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டுதல்களில் (guidelines) ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். (2021 இல் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று அறிக்கப்பட்டது) ஆனால் மற்ற கல்வித் தகுதிகளுக்கு இப்படியான நீட்டிப்பு வழங்க மாட்டோம்.
10. குழந்தைத் திருமணம் செய்து வைத்த மகாத்மா காந்தியின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகளே. இப்போது உயிரோடு இருந்தால் அவர்களுக்கும் தற்போதைய சட்டப்படி தண்டனை உண்டு. எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இப்படி முன் தேதியிட்டு (retrospective) குற்றவாளிகள் ஆக்குவோம். இதைப்போலவே ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களை போலி ஆசிரியர்கள் என்றும் அறிவிப்போம்!
சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.