உரிய பயிற்சி அளிக்க உதவுகிறேன்; என்ன உறுதி தருவாய்? ஆசிரியை சபரிமாலா உதவியால் நீட் தேர்வில் சாதித்த ஜீவித்குமார்...
உரிய பாடத்திட்டத்தைக் கொடுத்தால் எங்கள் பிள்ளைகள் சாதிப்பார்கள் என சபதமேற்று அரசுப் பள்ளி மாணவரைத் தேர்வு செய்து அவருக்கு ஓராண்டு பயிற்சி அளித்து அவரை இந்திய அளவில் முதல் மாணவனாக வர உதவி செய்துள்ளார் ஆசிரியை சபரிமாலா. இனி நீட் தேர்வால் ஒரு குழந்தையும் உயிரிழக்கக்கூடாது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அனிதா மரணத்தில் உறுதியேற்ற ஆசிரியை சபரிமாலா கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனான அரசுப் பள்ளி மாணவர் ஒருவரைத் தேர்வு செய்து பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். இதில் பயிற்சி பெற்ற மாணவர் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
நீட் தேர்வு முறை மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் மாநிலக் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் பெரிய அளவில் தோல்வி அடைந்தனர். மாநிலத்தில் பெரிய அளவில் மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றிபெற முடியாத சோர்வில் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் பெரிய அளவில் சோகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது.
மாநிலக் கல்வி வழியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பு வழங்காமல், நீட் தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிட வைப்பதால் சரிசமமான போட்டியில்லாத நிலை ஏற்படுவதால் தகுதியிருந்தும் மாணவர்கள் தேர்ச்சியடையாத நிலை உள்ளது என்பது பெரும்பான்மையான குற்றச்சாட்டு.
வடமாநில மாணவர்களைவிட அறிவு அதிகம் பெற்ற தமிழக மாணவர்களுக்கு உரிய வாய்ப்பைத் தாருங்கள் அப்புறம் பாருங்கள் என ஒரு சாரரும், இந்தியாவிலேயே சிறந்த முறையிலான மருத்துவத் தேர்வை நாம் அமல்படுத்தும்போது நீட் தேர்வு எதற்கு எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசும் பாடத்திட்டத்தில் மாற்றம், பயிற்சி மையம் என ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால், அது எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை என்று கூறப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித் குமார் சாதனை ஓர் உதாரணம். இது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. அனிதாவின் மரணத்தால் எழுந்த ஆசிரியை சபரிமாலாவின் வைராக்கியமும், ஜீவித் குமாரின் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையை எதிர்கொண்டு சாதிப்பது மிகச் சிறந்தது என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது. அதே நேரம் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் இதன் பின்னுள்ள சோகம் ஆகும்.
அனிதாவின் மரணத்திற்குப் பின் நீட் தேர்வைக் கண்டித்து ஆசிரியப் பணியைத் துறந்த சபரிமாலா அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிப்பார்கள். அவர்களுக்குச் சம வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பினார். இதற்காக தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு பயிற்சி இல்லாததால் தோல்வி அடைந்த மாணவர் ஜீவித் குமாரைத் தேர்ந்தெடுத்தார்.
ஜீவித் குமார் அரசுப் பள்ளி மாணவர், அவரை அணுகிய சபரிமாலா, ''ஓராண்டு உன்னைப் படிக்கவைக்கத் தயார். நீ என்ன உறுதி தருவாய்?'' எனக் கேட்டார். ''நான் நிச்சயம் 650 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன்'' என்று ஜீவித் குமார் உறுதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் 664 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து ஜீவித் குமார் சாதனை படைத்தார். இவரது தந்தை கால்நடை மேய்க்கும் தொழிலாளி. இதுகுறித்து மாணவர் ஜீவித் குமாருடன் சேர்ந்து ஆசிரியை சபரிமாலா காணொலி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல், உரிய பாடத்தைக் கொடுத்தால் தமிழகத்தின் கடைக்கோடி மாணவனும் சாதிப்பான் என்பதே.
காணொலியில் சபரிமாலா பேசியுள்ளதாவது:
இப்போது நம்முடன் இருக்கும் சாதனையாளர் ஜீவித் குமார். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களால் சாதிக்க முடியாது, கடந்த 3 ஆண்டுகளில் ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் பயில போக முடியவில்லை என்கிற அவல நிலையில், அன்பு மகள் அனிதாவிற்கு வாக்கு கொடுத்த அடிப்படையில் 3 ஆண்டுகாலமாக களத்தில் நிற்கிறேன். கட்டாயம் இந்த இடத்தில் ஒரு அரசுப் பள்ளிப் பிள்ளையை, கிராமத்துப் பிள்ளையை நான் படிக்க வைப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டுதான் அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன். கடந்த ஆண்டு இதே பள்ளியில், இதே நுழைவாயிலில் இதே இடத்தில் மாணவர் ஜீவித் குமாரிடம் கேட்டேன். ஓராண்டு உன்னைப் படிக்க வைக்க நான் தயார்... நீ என்ன வாக்குறுதி கொடுப்பாய்? என்று கேட்டேன். 650 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன் என்று வாக்குறுதியை இந்த இடத்தில்தான் ஜீவித் குமார் கொடுத்தார். ஓராண்டு நாமக்கல்லில் தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்தோம், அமெரிக்காவில் காட்வின் என்கிற நல்லவர் உதவி செய்தார். அருள் முருகன் என்கிற ஆசிரியர் உதவியால் ஜீவித் குமார் அடையாளம் காணப்பட்டார்.
பாடத்திட்டத்தைக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவேன் என்று சொன்னார் ஜீவித் குமார். இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார். 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் சாதித்துள்ளார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் சாதாரண ஆடுமேய்க்கும் தொழிலாளி குடும்பத்திலிருந்து வந்து ஒரு அரசுப் பள்ளி மாணவர், நீட் தேர்வு மிகப்பெரிய கனவு என்று சொல்லி வைத்துள்ளார்கள் அல்லவா? பல களேபரங்களைச் செய்து வருகிறார்கள் அல்லவா? மிகச் சாதாரணமாக 664 மதிப்பெண்களைப் பெற்று ஜீவித் குமார் இந்திய அளவில் சாதனை செய்துள்ளார் என்றால் என்ன காரணம்?
எங்கள் பிள்ளைகளால், அரசுப் பள்ளி பிள்ளைகளால், கிராமப்புற பிள்ளைகளால் கட்டாயம் முடியும். உரிய பாடத்திட்டங்களைக் கொடுத்துவிட்டு நீங்கள் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் காரணம். பாடத்திட்டங்களைக் கொடுத்துப் பாருங்கள்.
நான் இதே இடத்தில் இருந்து ஜீவித்குமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கான மிகப்பெரிய நம்பிக்கையாக வந்துள்ளாய். அனிதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளாய். ஒரு ஆண் அனிதாவாக வந்துள்ளாய். 18 பிள்ளைகள் உயிர் நீத்துள்ளார்கள் நம்பிக்கையில்லாமல்.
ஆனால் ஜீவித் குமாரை உலகத்துக்கு அறிமுகம் செய்கிறேன். இனி ஒரு பிள்ளை கூட உயிரிழக்கக்கூடாது. உங்களைப்போல ஒரு பிள்ளை சாதித்துள்ளான். இனிமேல் எந்தப் பிள்ளையும் நீட் என்கிற பேரில் தற்கொலை செய்யக்கூடாது. பாடத்திட்டங்களைக் கொடுத்தால் சாதிக்க முடியும் என்பதுதான் இங்குள்ள கருத்து. ஆகவே எந்த வகையான பாடத்திட்டங்களைக் கொடுக்கவேண்டும் என்பதை அரசுக்கும் வலியுறுத்த உள்ளோம்.
இதற்கு உதவி புரிந்த ஆசிரியர் அருள்முருகன், தலைமை ஆசிரியர் மோகன், உதவி செய்த நண்பர்கள், ஊடகத்தினருக்கு நன்றி. நிச்சயம் நமது பிள்ளைகள் வெல்வார்கள்”.
இவ்வாறு சபரிமாலா தெரிவித்துள்ளார்.
சம வாய்ப்பு, சம போட்டி என்பதே அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சரியான பாடத்திட்டம், பயிற்சி மையம் இல்லாமல் தடுமாறும் நிலை காரணமாகவே ஆண்டுதோறும் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. அரசு உரிய பாடதிட்டங்களுடன் அதிக அளவில் பயிற்சி மையங்களை அமைத்து தனியார் பயிற்சி மையங்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
சோதனையை எதிர்கொண்டு சாதிக்கும் மன தைரியம் கொண்ட மாணவர்கள் சாதிக்க உரிய பாடத்திட்டம் மூலம் அவர்களைத் தயார் செய்வதே சரியான ஒன்று என்பது ஜீவித் குமார் விஷயத்தில் வெளிப்பட்டுள்ளது.