கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
டில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஒரு பெண் குழந்தையை தேர்வு செய்து 12ம் வகுப்பிற்கான உதவிதொகை வழங்கவுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ.  மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>ஆகஸ்ட் 30 [August 30]....

  • சர்வதேச காணாமல் போனோர் தினம்
  • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
  • பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
  • இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)

>>>உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்

உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.
இந்தப் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், உணவை வீணடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனர் (பயிற்சி மற்றும் கல்வி) சாதனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாணவர்களுக்கு உணவை வீணடிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும், பள்ளிக்கு கொண்டு வரும் உணவு மீதமானால் அதனைத் தயக்கமின்றி திருப்பி எடுத்துச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>மாணவ, மாணவியர் தற்கொலைகளை தடுக்க உத்தரவு

கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலையைத் தடுக்க, கல்லூரிப் பேராசிரியர்கள், கவுன்சிலர்களாகச் செயல்பட வேண்டும் என, உயர்கல்வித் துறை கூறியுள்ளது.
கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலைகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு, உயர்கல்வித் துறை செயலர், சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள், அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவற்றை உடனடியாகத் தடுக்க வேண்டும். இதற்கு, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் கவுன்சிலர்களாக, பேராசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவரை, கல்லூரியின் கவுன்சிலராக நியமித்து, மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங்கை வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உயர்கல்வித் துறையின் சுற்று அறிக்கையைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டங்கள், முதல்வர் தலைமையில் கல்லூரிகளில் நடந்துள்ளன.
இதுகுறித்து, கல்லூரி ஆசிரியர் வசந்தி கூறியதாவது: உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையில், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் கூற வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
தேர்வில் தோல்வி அடைவதால் ஏற்படும் மனச்சுமை, சக மாணவர்களுடன் ஏற்படும் மோதல்களால் உருவாகும் தனிமை, கல்விச் சுமையால் உண்டாகும் அச்சம், வீட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் தான், மாணவர்கள் அதிகளவில் தற்கொலைகளை நோக்கிப் போகின்றனர்.
இவற்றுக்கு உரிய ஆலோசனைகளை, அவர்களுக்கு வழங்கும் வகையில், மாணவர்களுடன் மனம்விட்டுப் பேசி, பிரச்னைகளை அறிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல், தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து வெளிவர வேண்டும் போன்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வகுப்பு ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களை விட, மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். இந்த விஷயத்தில், அவர்கள் கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு வசந்தி கூறினார்.
மாணவர்களிடையே அதிகமாக இருக்கும் காதல் உறவுகள், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதற்காக, இரு பாலரும் பணத்தைச் செலவழிப்பது, படிப்பில் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்னைகளில் தொடங்கி, கோழைத்தனமான முடிவுக்கு செல்வது வரை, பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு கல்லூரிகளில் கவுன்சிலிங் கொடுப்பது, எந்த அளவுக்கு சாத்தியம்; அதில், ஆசிரியர்கள் பங்கு என்ன என்பது இனித்தான் தெரியவரும். மாணவர்களோடு, பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

>>>10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

>>>சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்

தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன.
மெட்ரிக் பாடத் திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி திட்டம் இல்லை என, குறைபடும் இத்தகைய பள்ளிகள், சமச்சீர் பாடத் திட்டத்தை புறக்கணித்துள்ளன. இது, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆனால், உள்ளூரில் உள்ள கல்வி அதிகாரிகளை, சரிக்கட்டி தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை, முகப்பேரில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பதிலாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, திடீரென பள்ளியில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
அதன்படி, பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட, குழுவைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக, கடந்த 1ம் தேதி, இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை. ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களுடன், கூடுதலாக, சி.பி.எஸ்.இ., கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
8ம் வகுப்பு மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்று, பொதுக்கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி திட்டத்தை பின்பற்றாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை நடத்தி வருவது, மெட்ரிக் பள்ளிகளின் விதிமுறைகளுக்கு முரணானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், விதிமுறையை கடைபிடிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் எனவும், இயக்குனருக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், கடந்த 14ம் தேதியிட்ட இயக்குனரின், "நோட்டீஸ்&' பள்ளிக்கு அனுப்பப்பட்டது.
நேற்று மாலை, பள்ளி நிர்வாகம் இதற்கு பதிலளித்து உள்ளதாகவும்; அதில், செய்த தவறுக்கு உரிய பதிலை அளிக்காமல், பள்ளியின் சாதனைகளை அளந்துள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில், அரசின் ஆலோசனையைப் பெற்று, விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளை பட்டியல் எடுத்து, சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்துள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெடு

இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 1,022 பள்ளிகள், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தொடர் அங்கீகாரம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இத்தகையப் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து, தொடர் அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற, பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இந்தப் பள்ளிகள், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளே, அனைத்திற்கும் பொறுப்பேற்க நேரிடும்.
சிறுபான்மை பள்ளிகளாக இருந்தால், அந்தப் பள்ளி குறித்த ஆவணங்களை, பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே எடுக்கலாம். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், தொடக்கக் கல்வித் துறையின் கீழும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகள் காரணமாக, தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலையில், 700க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், குறைந்த இடப்பரப்பில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளை, மூடவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளின் பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தன் முடிவை விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...