கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜாதி சான்றிதழ் வழங்கும் பணி - விண்ணப்பங்கள் ஆய்வு

பள்ளிகளில், ஜாதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக, வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் ஆய்வுப் பணி நடந்து வருகிறது.
சென்னை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. பள்ளி நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்று கோரும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடுவதில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் விண்ணப்பங்களை, உரிய காலத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்ப முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையொட்டி, நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மாணவர்கள் குறிப்பிட்ட சில சான்றிதழ்களை ஏற்கனவே வைத்திருப்பதாக தெரிய வந்தது.
இதனால், சான்று கோரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு அறிவித்த படி, கடந்த 31ம் தேதிக்குள், பள்ளி நிர்வாகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை முழுமையாக அனுப்பி விட்டதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

>>>ஒன்றல்ல... இரண்டல்ல.. நூறு

நூறாவது செயற்கைக்கோளை இன்று (செப்., 9) "இஸ்ரோ' விண்ணில் செலுத்துகிறது. கல்வி, காலநிலை, ஒளிபரப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக இஸ்ரோவால் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சாதனைப் படிக்கட்டுகள்: இஸ்ரோ, 1969 ஆக., 15ம் தேதி துவக்கப்பட்டது. இதன் தலைமையகம் பெங்களூரு. இது உலகின் 6வது பெரிய விண்வெளி ஆய்வு மையம். இஸ்ரோ, முதன் முதலாக 1975 ஏப்., 19ம் தேதி, ஆர்யபட்டா என்ற செயற்கைக்கோளுடன் விண்வெளி பயணத்தை தொடங்கியது. தற்போது, நூறாவது செயற்கைக்கோள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. இதுவரை 62 செயற்கைக் கோள்களையும், 37 ராக்கெட்டுகளையும் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இதைத் தவிர, இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்களையும், வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பப்படும் பி.எஸ்.எல்.வி., - சி21 என்ற ராக்கெட்டில், பிரான்ஸ் மற்றும் ஜப்பானின் தலா ஒரு செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

செயற்கைக்கோள் விவரம்
பெயர் தேதி

1. ஆர்யபட்டா 1975 ஏப்., 19
2. பாஸ்கரா 1 1979 ஜூன் 7
3. ஆர்.டி.பி., 1979 ஆக., 10
4. ஆர்.எஸ் 1 1980 ஜூலை 18
5. ஆர்.எஸ்-டி1 1981 மே 31
6. ஆப்பிள் 1981 ஜூன் 19
7. பாஸ்கரா 2 1981 நவ., 20
8. இன்சாட்-1ஏ 1982 ஏப்., 10
9. ஆர்.எஸ்-டி2 1983 ஏப்., 17
10. இன்சாட்-1பி 1983 ஆக., 30
11. ஸ்ராஸ்1 1987 மார்ச் 24
12. ஐ.ஆர்.எஸ்1ஏ 1988 மார்ச் 17
13. ஸ்ராஸ்2 1988 ஜூலை 13
14. இன்சாட்-1சி 1988 ஜூலை 22
15. இன்சாட்-1டி 1990 ஜூன் 12
16. ஐ.ஆர்.எஸ்-1பி 1991 ஆக., 29
17. ஸ்ராஸ்-சி 1992 மே 20
18. இன்சாட்-2ஏ 1992 ஜூலை 10
19. இன்சாட்-2பி 1993 ஜூலை 23
20. ஐ.ஆர்.எஸ் - 1இ 1993 செப்., 20
21. ஸ்ராஸ்-சி2 1994 மே 4
22. ஐ.ஆர்.எஸ்-பி2 1994 அக்., 15
23. இன்சாட்-2சி 1995 டிச., 7
24. ஐ.ஆர்.எஸ்-1சி 1995 டிச., 28
25. ஐ.ஆர்.எஸ்-பி3 1996 மார்ச் 21
26. இன்சாட்-2டி 1997 ஜூன் 4
27. ஐ.ஆர்.எஸ்-1டி 1997 செப்., 29
28. இன்சாட்-2டிடீ 1998 ஜன.,
29. இன்சாட்-2இ 1999 ஏப்., 3
30. ஐ.ஆர்.எஸ்-பி4 1999 மே 26
31. இன்சாட்-3பி 2000 மார்ச் 22
32. ஜிசாட்-1 2001 ஏப்., 18
33. டெஸ் 2001 அக்., 22
34. இன்சாட்-3சி 2002 ஜன., 24
35. கல்பனா-1 2002 செப்., 12
36. இன்சாட்-3ஏ 2003 ஏப்., 10
37. ஜிசாட்-2 2003 மே 8
38. இன்சாட்-3இ 2003 செப்., 28
39. ரிசோர்ஸ்சாட்-1 2003 அக்., 17
40. எடுசாட் 2004 செப்., 20
41. கார்டோசாட்-1 2005 மே 5
42. ஹம்சாட் 2005 மே 5
43. இன்சாட்-4ஏ 2005 டிச., 22
44. இன்சாட்-4சி 2006 ஜூலை 10
45. கார்டோசாட் 2007 ஜன., 1
46. எஸ்.ஆர்.இ-1 2007 ஜன., 1
47. இன்சாட்-4பி 2007 மார்ச் 12
48. இன்சாட்-4சிஆர் 2007 செப்., 2
49. கார்டோசாட்-2ஏ 2008 ஏப்., 28
50. ஐ.எம்.எஸ்-1 2008 ஏப்., 28
51. சந்திராயன்-1 2008 அக்., 22
52. ரிசாட்-2 2009 ஏப்., 20
53. ஓசன்சாட்-2 2009 செப்., 23
54. ஜிசாட்-4 2010 ஏப்., 15
55. கார்டோசாட்-2பி 2010 ஜூலை 12
56. ஜிசாட்-5பி 2010 டிச., 25
57. ரிசோர்ஸ்சாட்-2 2011 ஏப்., 20
58. யூத்சாட் 2011 ஏப்., 20
59. ஜிசாட்-8 2011 மே 21
60. ஜிசாட்-12 2011 ஜூலை 15
61. மெகா டிராபிக்ஸ் 2011 அக்., 12
62. ரிசாட்-1 2012 ஏப்., 26

ராக்கெட்டுகள் - 37
* எஸ்.எல்.வி., 3 - 4 ராக்கெட்
* ஏ.எஸ்.எல்.வி., - 5 ராக்கெட்
* பி.எஸ்.எல்.வி., - 21 ராக்கெட்
* ஜி.எஸ்.எல்.வி., - 7 ராக்கெட்

>>>அங்கன்வாடி மையங்களில் பேபி டாய்லெட் அமைக்க உத்தரவு

அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து அங்கன்வாடிகளிலும், "பேபி டாய்லெட்" அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், பல அங்கன்வாடி மையங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. இங்கு விட்டுச் செல்லப்படும் குழந்தைகள், தெரு ஓரங்களில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.
பள்ளிகளுடன் இணைந்து செயல்படும், சில அங்கன்வாடி மையங்களில் மட்டும், கழிப்பறைகள் உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாமல் இவை உள்ளதால், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.
எனவே, குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக, "பேபி டாய்லெட்" அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் நவம்பர் மாதத்துக்குள், கழிப்பறை அமைக்கும் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மேலாளர், மணிமேகலை கூறியதாவது: ஒவ்வொரு கழிப்பறையும், 18 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகள் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, தாழ்வான கதவு; குழந்தைகள், உட்புறமாகக் கதவு பூட்டிக் கொண்டாலும், வெளியில் இருந்து எளிதில் திறக்கும் வகையிலான தாழ்ப்பாள்கள் அமைக்கப்பட உள்ளன.
கழிப்பறையின் உட்பகுதியில், வண்ண கார்ட்டூன்கள் வரையவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

>>>செப்டம்பர் 09 [September 09]....

  • வட கொரியா குடியரசு தினம்(1948)
  • ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)

>>>வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க அரசு உத்தரவு

மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், நடத்தப்படும் வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன், அனைத்து மாணவர்களின் கூட்டு வழிபாடு நடைபெறும். இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனால், மாணவர்களின் தனித்திறன் வளர வாய்ப்பில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக தெரிவதும் இல்லை என்ற குறைபாடு உள்ளது.

இதைப் போக்கும் வகையில், வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் கூட்டு வழிபாடு நடத்தவும், மற்ற நாட்களில் வகுப்பறை வழிபாடு நடத்தவும், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூலை 7 முதல் வகுப்பறை வழிபாடு நடத்தப்படுகிறது.
இதில், தினமும் காலையில் ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் தலைமையில், ஐந்து மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு மாணவன் தமிழ்தாய் வாழ்த்து படித்தும், அடுத்த மாணவன் திருக்குறள் படித்தும், மற்ற இரு மாணவர்கள் பழமொழி, நன்னெறி விளக்கம் படித்தும், ஐந்தாவது மாணவன் அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்தும் வருகின்றனர்.
இதே போல், தினமும் வகுப்றை வழிபாடு நடைபெறுகிறதா, என கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

>>>பார்வை பறிபோன மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

வகுப்பறையில் சக மாணவன் பிரம்பை வீசியதால், மற்றொரு மாணவனின் கண்ணில் பட்டு, பார்வை பறிபோன வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வேலூர் மாவட்டம், ஆம்பூரில் இந்து மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சீனிவாசன் என்கிற மாணவன், ஒன்பதாம் வகுப்பு படித்தான். உணவு இடைவேளையின் போது, வகுப்பு ஆசிரியர் வைத்துச் சென்ற பிரம்பை எடுத்து, ஒரு மாணவன் வீசியுள்ளான். அப்போது, வகுப்பறைக்குள் வந்த சீனிவாசனின் கண்ணில், பிரம்பு பட்டது.உடனே, பள்ளி ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாலையில் தான், சீனிவாசனின் தந்தைக்கு, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மகனை, வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தார். இடது கண், பார்வையை இழந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசில் அளித்த புகார், பதிவு செய்யப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவன் விடுதலையானான். சம்பவத்துக்கு காரணம், பள்ளி தான்; மாணவர்களைப் பாதுகாக்க, ஆசிரியர்கள் அக்கறை எடுக்கவில்லை; எனவே, 10 லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என சீனிவாசனின் தந்தை செல்வம், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவு: வகுப்பு ஆசிரியரின் அஜாக்கிரதையால் தான், இச்சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் பிரம்பை அவர் விட்டுச் சென்றுள்ளார். எனவே, பள்ளி நிர்வாகம் தான், நஷ்டஈட்டை வழங்க வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, இரண்டு மாதங்களுக்குள், இந்து மேல்நிலைப் பள்ளி வழங்க உத்தரவிடப்படுகிறது.
மாணவர்களிடம் இருந்து, கல்வி நிறுவனங்கள், கட்டணம் வசூலிக்கின்றன. அந்த மாணவர்களை கவனிக்க வேண்டிய கடமையும், நிர்வாகத்துக்கு உள்ளது. பள்ளியில் மாணவர்கள் இருக்கும் போது, அவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அந்த கல்வி நிறுவனத்துக்கு உள்ளது.
பள்ளிக்கு வந்தது முதல், அங்கிருந்து புறப்படும் வரை, அந்த மாணவனின் மீது, பள்ளி நிர்வாகத்துக்கு பொறுப்பு உள்ளது. தங்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பர் என்கிற நம்பிக்கையில் தான், குழந்தைகளை பள்ளியில் விட்டுச் செல்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை, கல்வி நிறுவனங்கள் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

>>>மருத்துவப் படிப்பு: 17ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 17ம் தேதி துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்பத் தரப்படும் இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கும், இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானோருக்கு, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலின்படி, தகுதியானோர், குறிப்பிட்ட தேதியில், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்கக செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...