கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது தேர்வாணையம்: தேர்வுக்கு டெண்டர் வெளியீடு

"ஆன்-லைன்' வழி தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று, "டெண்டர்' வெளியிட்டது.

"ஆன்-லைன்' தேர்வு முறையில், வெளிப்படைத்தன்மை, உயர்ந்த தரத்திலான தேர்வு நடைமுறைகள் மற்றும் தற்போதுள்ள காகித பயன்பாடு குறைப்பு, மிக விரைவாக தேர்வு முடிவு வெளியீடு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கேள்வித்தாள், "லீக்' உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் ஏற்படாமல், தரமான முறையிலும், வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும், "ஆன்-லைன்' தேர்வு முறையை அமல்படுத்தப்போவதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியிருந்தார். இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்படும் எனவும், அவர் தெரிவித்திருந்தார். 

"டெண்டர்' வெளியீடு: இதைத் தொடர்ந்து, "ஆன்-லைன்' வழி தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான, "டெண்டர்' நேற்று, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. "டெண்டர்' விண்ணப்பத்தில், தேர்வாணையம் குறிப்பிட்டிருப்பதாவது: சி.பி.டி., (கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட்) முறையில், "ஆன்-லைன்' வழியாக தேர்வை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு, தேர்வாணையம் செல்கிறது. தேர்வாணையத்தில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப பயன்பாடு என்பது மிகவும் குறைவு. பல முக்கியமான பணிகள், ஒவ்வொரு கட்டத்திலும், மனித சக்தியை கொண்டே நிறைவேற்றப்படுகிறது. அனைத்துப் பணிகளும், கணினிமயமாக்கப்படவில்லை. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில், தேவையில்லாமல் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

வெளிப்படைத்தன்மை: "ஆன்-லைன்' வழியிலான தேர்வு முறையில், உயர்ந்த தரத்தில் தேர்வை நடத்துவதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். "ஆன்-லைன்' வழியிலான தேர்வு, தேர்வர் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு கட்டமாகவோ, பல கட்டங்களாகவோ நடக்கும்.

சி.பி.டி., முறையில் தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளில் கூறப்பட்ட அம்சங்கள்: திட்டத்தை உருவாக்குதல், அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, மென்பொருள் (சாப்ட்வேர்), வன்பொருள் (ஹார்டுவேர்) தொழில்நுட்பங்களை அளிப்பது, தேர்வு நடைமுறைகளை மேலாண்மை செய்வது. தகுதி வாய்ந்த நிறுவனம், "டெண்டர்' படிவத்தை பூர்த்தி செய்து, 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

>>>செப்டம்பர் 15 [September 15]....

  • சர்வதேச மக்களாட்சி தினம்
  • இந்திய பொறியாளர்கள் தினம்
  • தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
  • தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு தினம்(1950)

>>>முதன் முறையாக "ஆன்லைனில்' ஆசிரியர்கள் நியமன" கவுன்சிலிங்'

முதன்முறையாக "ஆன் லைன்' மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை நடக்கிறது.
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இவர்களுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் "ஆன்லைனில்' நடத்த, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தகவல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்துள்ளது.

சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், "" நியமன கவுன்சிலிங் சென்னையில் நடத்துவது வழக்கம். பெண்கள் சென்னைக்கு சென்று, வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, முதன் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (செப்.,15) அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.
பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஆன்லைனில் அனுப்பும் காலியிடங்கள், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும். இதை பார்த்து, பிடித்த இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம். உடனே உத்தரவு வழங்கப்படும். இதற்கான தகவல் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

>>>ஆதிதிராவிட மாணவர் கல்விக்கட்டணம் : அரசே வழங்க புதிய திட்டம் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் அனைத்து விதமான படிப்புகளுக்கும், அரசே கட்டணங்களை வழங்குவது தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான கல்விக் கட்டணம் முழுவதையும், அரசே ஏற்றுக் கொள்ளும் திட்டம், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கலை, அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளுக்கும் உரிய கட்டணங்களை, தமிழக அரசின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செலுத்துகிறது. இந்தக் கல்வியாண்டில் இருந்து, மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கும், இத்திட்டம் பயன்படும். சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டணக் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை மட்டும் இவர்கள் செலுத்த வசதியாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இனிவரும் கல்வியாண்டுகளில், பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், மற்றும் சுயநிதி கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லுரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் பட்டியல் மற்றும் அதற்கான கட்டண விவரங்கள் சேகரிக்கப்படும்.
ஆதிதிராவிடர் நல கமிஷனரிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்று, உரிய கல்லூரிக்கு வழங்கப்படும். மாணவ, மாணவியரின் ஜாதி, வருமானச் சான்றுகளை ஆய்வு செய்து அளிக்க, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் இதில் இணைந்து செயல்படுவர். தவிரவும் முதல் தலைமுறை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கான சலுகையும் இதில் பின்பற்றப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, இரண்டாம் நிலை அலுவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்தல் என்பது உள்ளிட்ட, 18 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

>>>பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை

பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன் விபரம்:
அக்., 4 தமிழ்- முதல் தாள்
அக்., 5 தமிழ்- 2ம் தாள்
அக்., 6 ஆங்கிலம்- முதல் தாள்
அக்., 8 ஆங்கிலம்- 2ம் தாள்
அக்., 9 இயற்பியல், பொருளியல்
அக்., 10 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, உணவியல்
அக்.,11 வணிகவியல், மனையியல், புவியியல்
அக்., 12 வேதியியல், கணக்குப்பதிவியல்
அக்., 13 உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்
அக்., 15 தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு (தமிழ்-ஆங்கிலம்)
அக்., 16 தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

>>>டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை "ஆன்-லைன்' வழி நடத்த திட்டம்

""டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்' மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்பட உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார். 
இதுகுறித்து, நடராஜ் கூறியதாவது:
ராஜஸ்தானில், அனைத்துப் போட்டித் தேர்வுகளும், "ஆன்-லைன்' மூலம் தான் நடத்தப் படுகின்றன. சில மாநிலங்களில், "ஆன்-லைன்' தேர்வு முறையும், கேள்வித்தாள் முறையும் உள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட, சில வகை தேர்வுகளை மட்டுமே, "ஆன்-லைன்' மூலம் நடத்துகிறது. பெரும்பாலான தேர்வுகளை, கேள்வித்தாள் முறையில் தான் நடத்துகிறது. இந்த முறையில் தேர்வு நடத்துவதற்கு, அடிப்படையில் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதைச் செய்து, அனைத்து தேர்வுகளையும், "ஆன்-லைன்' மூலம் நடத்தும் திட்டம் உள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' விடப் போகிறோம். தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்து, அந்நிறுவனம் மூலம், "ஆன்-லைன்' தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில், அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்குள்ள கணினிகளை பயன்படுத்தி, தேர்வு நடத்தலாம். விடுமுறை நாளில் தான், தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், பொறியியல் கல்லூரிகளின் கணினிகளை பயன்படுத்துவதில் பிரச்னை இருக்காது. இதன்மூலம், கல்லூரி நிர்வாகங்களுக்கு, தனி வருவாயும் கிடைக்கும். தேர்வு நடக்கும் நாளில், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு தேர்வர் சென்று, கணினி முன் அமர்ந்தால், சரியான நேரத்தில், விடைத்தாள் வெளிப்படும். கணினியிலேயே விடைகளை, "டிக்' செய்தால் போதும். தேர்வு முடிந்ததும், மிக விரைவாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இதற்கான அனைத்து மென்பொருளும், முன்கூட்டியே செய்யப்படும். "ஆன்-லைன்' மூலம் தேர்வை எதிர்கொள்வதில், யாருக்கும் பிரச்னை இருக்காது. எனவே, இத்திட்டத்தை நிறைவேற்றுவதில், முனைப்பாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு நடராஜ் கூறினார்.

புதிய முறையில் குரூப் - 2 கேள்வித்தாள்:
ஆக., 12ம் தேதி நடந்த, குரூப்-2 தேர்வின் கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவ., 4ம் தேதி, மறுதேர்வு நடக்க உள்ளது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை, எப்படி பாதுகாப்பது என்பது குறித்து, தேர்வாணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன் சோதனை முயற்சியாக, சமீபத்தில் நடந்த நூலகர் பணிக்கான தேர்வில், புதிய திட்டத்தை, தேர்வாணையம் அமல்படுத்தியது. தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரம் முன், "ஆன்-லைனில்' கேள்வித்தாளை வெளியிட்டு, தேர்வு மையங்களில் உள்ள கணினியில், ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து, கேள்வித்தாள்கள் "பிரின்ட்' எடுத்து வழங்கப்பட்டன. இதே முறையை, குரூப்-2 தேர்வுக்கும் பயன்படுத்துவது குறித்து, தேர்வாணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, தேர்வாணையம் விரைவில் முடிவு எடுக்கும்.

>>>அரசு கலை கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசு கலை கல்லூரிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால், ஏற்கனவே உள்ள பட்டப் படிப்புகளுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கும் ஆசிரியர் இல்லாததால், வகுப்புகள் நடைபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 51 அரசு கலை கல்லூரிகளில், இளநிலை, முதுநிலை, ஆய்வு படிப்புகள் என, 299 புதிய பட்டப் படிப்புகளும், பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டுள்ளன. தற்போது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கான பணியிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள காலி இடங்கள் என, காலை நேர கல்லூரிகளில், 1,623 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை, கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு நிரப்ப, ஜூலை மாதம், முதல்வர் உத்தரவிட்டார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப காலமாகும் என்பதால், தற்காலிகமாக, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் நிரப்பவும், அவர்கள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் எனவும் அறிவித்தார். இந்நிலையில், அரசு உத்தரவிட்டு இரு மாதங்களாகியும், இதுவரை கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளை எடுக்க, பேராசிரியர் இல்லாத நிலை நிலவுகிறது. இந்த படிப்புகளுக்கு, ஏற்கனவே இருக்கும் பேராசிரியர்களை கொண்டு பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால், புதிய பட்டப் படிப்புகளிலும் கவனம் செலுத்த முடியாமல், தங்களுடைய பாடப்பிரிவிலும், போதிய நேரம் மாணவர்களிடம் செலவிட முடியாத நிலை பேராசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக செயலர் பிரதாபன் கூறியதாவது: ஊரகப் பகுதி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்கு இடமாறுதல் கேட்டு சென்று விடுகின்றனர். இதனால், பேராசிரியர் பற்றாக்குறை கிராமப்புறங்களில் அதிகளவில் உள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தஞ்சாவூர், கும்பகோணம், குடியாத்தம், வாலாஜா, செய்யாறு, திண்டிவனம் நகரங்களில் உள்ள கல்லூரிகளில் போதிய அளவு பேராசிரியர்கள் இல்லை. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, கும்பகோணம் ஆடவர், பெண்கள் மகளிர் கல்லூரியில் தலா, 60 இடங்கள் காலியாக உள்ளன.
வாலாஜா, குடியாத்தம் அரசு கல்லூரிகளில் தலா, 40 இடங்கள் காலியாக உள்ளன. நவம்பர் மாதத்தில், பருவ தேர்வுகள் வரவுள்ளதால், அதற்குள் இப்பணியிடங்களை நிரப்பினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...