கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மெழுகு பூச்சு தாள் ரசீதுகளால் பிரச்னை: குவிகின்றன புகார்கள்

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கும், மெழுகு பூச்சு விற்பனை ரசீதுகளில் உள்ள விவரங்கள், விரைவில் அழிந்து விடுவது குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தங்களிடம் வாங்கும் பொருட்களுக்கான விற்பனை ரசீதை, மெழுகு பூச்சு தாளில் (Wax Coated Paper) வழங்கி வருகின்றன. பல்பொருள் அங்காடி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம்., மையத்தில் வழங்கப்படும் பரிமாற்ற விவர ரசீது, தொலைதூர மற்றும் மாநகர பேருந்துகளில் வழங்கப்படும் பயணசீட்டு உள்ளிட்டவை, மெழுகு பூச்சு தாளில் தான் வழங்கப்படுகின்றன. கையடக்க கம்ப்யூட்டரில் தரப்படும் ரசீது ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இத் தாளை மாற்றி, சாதாரண வெள்ளைத் தாள் ஆக்குவது எனில், அதற்கு தொழில்நுட்ப முறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றில் பதியப்படும் விவரங்கள், ஒரு வாரம் அல்லது அதிகபட்சமாக, 10 நாட்களுக்குப் பின், மறைந்து, வெற்று வெள்ளைத் துண்டு சீட்டாகி விடுகின்றன. இதனால், சேவை தொடர்பான பிரச்னைகள் எழும்போது, அதுகுறித்து, வாடிக்கையாளர்கள், புகார் அளிப்பதில் சிக்கல் எழுகிறது. அதேசமயம் வீட்டு வரி போன்ற முக்கிய ரசீதுகள் தரும்போது, சில இடங்களில், தாங்கள் தரும் ரசீதுகளை லேசர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். ஆனால், பலரும் தங்கள் வேலை முடிந்ததும், மறந்து விடுகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது: உத்தரவாதத்துடன் ஒரு பொருளை வாங்கும் வாடிக்கையாளருக்கு, விற்பனைக்கான ஆதாரம், ரசீது தான். மெழுகு பூச்சு தாளில் பதியப்பட்டு, விற்பனை ரசீது வழங்குவது, நுகர்வோர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்; இப்பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம், பலமுறை முறையிட்டும், எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பிரச்னை குறித்து, இதுவரை அரசுக்கு எவ்வித புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது புகார்களை பெற்றிருக்கும் நுகர்வோர் அமைப்புகளோ புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதே சமயம் தனியார் முன்னணி நிறுவனங்கள் சில, தங்கள் வாடிக்கையாளர்கள் அதிக அளவு பணம் தந்து வாங்கும் பொருட்களுக்கு அழியாத வகையில் உள்ள பூச்சு கொண்ட ரசீதை வழங்கும் நடைமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இப்பிரச்னை குறித்த புகார்கள் அதிகரிப்பதால், இதற்கு தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

>>>இருக்க வேண்டும் இரும்பு இருதயம்: இன்று உலக இருதய தினம்

 
உடல் உறுப்புகளில் இருதயம் முக்கியமானது. இருதய துடிப்பு இருக்கும் வரைதான், உயிர் துடிப்பும் இருக்கும். உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை, இருதயம் செய்கிறது. இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளால், இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்.,29ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய்களில் 80 சதவீத மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை.
இதுவே அதிகம்:
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம். ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர். இதிலிருந்து இருதய நோயின் பாதிப்பு எந்தளவு உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்.

என்ன காரணம்:
முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, உழைப்பின்மை, நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. அதேபோல், உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்போர், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண்டுக்கு சிறுவர்கள் உட்பட 6 லட்சம் பேர், இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

மாரடைப்பை தடுப்பது எப்படி
* புகை பிடிப்பதை முற்றிலும் கை விடுங்கள். பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி செய்வதற்கு சமம். எனவே, முடிந்தளவுக்கு உடம்புக்கு வேலை கொடுங்கள்.
* உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் பயன்படுத்தாதீர்கள். இதனால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சைக்கிள் ஓட்டுவது நல்லது.
*இனிப்பு வகைகளை சாப்பிட விரும்பினால் சாக்லேட்டிற்கு பதிலாக, மாம்பழம் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
*பெரும்பாலான நேரங்களில், "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப் படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* "பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

>>>செப்டம்பர் 29 [September 29]....

  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)
  • கனடாவின் முதல் செயற்கைகோளான அலூட் 1 ஏவப்பட்டது(1962)

>>>டி.இ.டி. மறுதேர்வு: விண்ணப்பிக்க இன்று இறுதிநாள்

டி.இ.டி., மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 14ம் தேதி நடக்கும் டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதிய தேர்வர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 24ம் தேதி முதல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் நாள், 6,200 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின. நேற்று வரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.
விண்ணப்பம் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், இன்று கடைசி நாள். இன்று மாலை, 5:30 மணிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

>>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி பாடம் நடத்த உத்தரவு

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதை, திடீரென நிறுத்தியது. அங்கு பயிலும், புவனேஸ்வரி என்ற மாணவியின் தந்தை, மீண்டும், கணினி அறிவியல் பாடம் நடத்தக் கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பாடத்தைத் தொடர உத்தரவிட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர், பள்ளி நிர்வாகத்திற்கு, கணினி அறிவியல் பயில, விருப்பக் கடிதம் அளிக்கும் மாணவர்களுக்கு, பாடம் நடத்த உத்தரவிட்டார்.
தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 23 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 20 பேர், சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதற்கு விருப்ப கடிதம் கொடுத்தனர்.
மாணவர்களின் விருப்ப கடிதத்தை பெற்ற பள்ளி நிர்வாகம், மாணவர்களின் நிலை குறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு தெரியப்படுத்தியது.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், கண்ணகி பாக்கியநாதன் கூறுகையில், பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், இனி சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும், என்றார்.

>>>2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இவற்றில் பயிலும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல், மேலதிகாரிகளின் குழந்தைகள் வரை, அனைத்து குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும், கல்வி (சி.இ.ஏ., சென்ட்ரல் எஜுகேஷனல் அலவன்ஸ்) உதவித்தொகை வழங்கப்படுகின்றன. முதல் வகுப்பில் துவங்கி, பிளஸ் 2 வரை, இந்த கல்வி உதவித்தொகையை பெறலாம்.
மொழி, இனப் பாகுபாடின்றி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைவரும், இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றவர். கடந்தாண்டு வரை,12 ஆயிரம் ரூபாயாக இருந்த, கல்வி உதவித்தொகை, தற்போது, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், மாணவ, மாணவியர் மட்டுமே, இந்த கல்வி உதவித்தொகையை பெற முடியும். ஓராண்டில், நான்கு தவணை அல்லது ஆண்டு இறுதியில், ஒரே தவணையாகவும் உதவித்தொகையை பெறலாம்.
பள்ளிக் கட்டணம், சீருடை, டியூஷன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீதுகளை பெற்று, அதை, பணியாற்றும் துறையின் கணக்குப் பிரிவில் சமர்ப்பித்து, அத்தொகையை, ஊழியர் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, பள்ளியின் அங்கீகாரம் மிக முக்கியம்.
கடந்த, 2009ல், அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, தனியார் நர்சரி, பிரைமரி, நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் அனைத்தும், தன் அங்கீகாரத்தை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தின்கீழ், 600 பள்ளிகளும், தொடக்கக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருவதாக, சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கல்வி உதவித்தொகை பெற முடியாத சிலர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த தகவல் தெரியவந்தது.
தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, "சேலம் மாவட்டத்தில், 24 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. புதுப்பிக்க விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறமுடியாத நிலை உள்ளது' என்றார்.
முதன்மைக் கல்வி அதிகாரி ஈஸ்வரன் கூறும்போது, "சங்ககிரி மற்றும் சேலம் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, அதற்கான கோப்புகள் இன்னும் வரவில்லை. வந்ததும், அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, "அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை பாயும்' என தெரிவித்தன.

>>>மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி நிதி: துணை இயக்குனர் ஆய்வு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்டந்தோறும் ஒதுக்கப்படும் கல்வி நிதி, முறையாக செலவு செய்யப்படுகிறதா என, ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி உள்ளடங்கிய கல்வி திட்ட துணை இயக்குனர் சீனிவாசன் குழுக்கள் ஆய்வு செய்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அடங்கிய இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் முன்னேறும் நோக்கில், அரசு பல லட்சம் நிதி ஒதுக்குகிறது. இதன் மூலம் வட்டார வாரியாக மையங்கள் ஏற்படுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கல்வி, சிறப்பு பயிற்சி, மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், நிதி சரியான முறையில் பயன்படுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்டந்தோறும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
திட்ட இயக்குனர் சீனிவாசன் நேற்று சிவகங்கை வந்தார். அவரது தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமையாசிரியர்கள் அடங்கிய தலா 4 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பிளாக்குகளுக்கும் சென்று மாணவர்களிடம் ஆய்வு செய்தனர்.இயக்குனர் சீனிவாசன் கூறுகையில்,"வழக்கமாக நடக்கும் ஆய்வு தான். இத்திட்டத்திற்கு வழங்கும் நிதி முறைகேடு இன்றி முழுமையாக மாணவர்களின் கல்விக்கு செலவு செய்யப்படுகிறதா? என, ஆய்வு நடத்துகிறோம். மாவட்டந்தோறும் இந்த ஆய்வு நடக்கும், என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...