கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கலந்தாய்வு மூலம் 143 தலைமை ஆசிரியர் நியமனம்

பள்ளிக் கல்வித்துறை, நேற்று நடத்திய பதவி உயர்வு கலந்தாய்வில், 143 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். காலியாக உள்ள, 143 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை இணையதளம் வழியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், நேற்று கலந்தாய்வு நடந்தது. இதில், பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, 171 பேர், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 28 பேர், பதவி உயர்வை மறுத்து விட்டனர். மீதமுள்ள, 143 பேர், பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரின் பதவி உயர்வு உத்தரவு கடிதங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தர்மபுரி, நாகை, ராமநாதபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தான், அதிக காலிப் பணியிடங்கள் இருந்தன. சென்னையில், இரு பணியிடங்கள் இருந்தன. இதற்கு, 10 பேர் அழைக்கப்பட்டனர். ஐந்து பேர், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்தனர். மீதமுள்ள ஐந்து பேரில், ஒருவர், ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தார். மற்றொரு காலி பணியிடத்தை, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு செய்ததாக, முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறையில், சமீப காலமாக, பல்வேறு கலந்தாய்வுகள், "ஆன்-லைன்' வழியாக நடந்து வருகின்றன. சமீபத்தில், 1,200 முதுகலை ஆசிரியர் நியமனம், ஆன்-லைன் வழியாக நடந்தது. இந்த முறையால், ஆசிரியர்கள் அலைச்சலின்றியும், அவர்களின் போக்குவரத்து செலவு, துறை சார்பில் நடக்கும் இதர ஏற்பாடுகள் என, பல்வேறு பண விரயம் தடுக்கப் பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>குரூப்-2 தேர்வு :தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம்

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, 3,472 பேருக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று துவங்கியது. முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்களில், மூன்று பேர், சார்பதிவாளர் பதவியையும், இருவர் நகராட்சி கமிஷனர் பதவியையும் தேர்வு செய்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர், வணிகவரி உதவி அதிகாரி, சார்பதிவாளர் உள்ளிட்ட, 6,692 பதவிகளை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, கடந்த ஜூனில் வெளியானது. இதில், 6,949 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து, ஜூன் இறுதியில் துவங்கி, ஜூலை இறுதி வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. ஆகஸ்ட் முதல் வாரத்தில், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மொத்த பணியிடங்களில், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 3,472 பணியிடங்கள், நேர்முகத்தேர்வை உள்ளடக்கியது. மீதமுள்ள, 3,220 பணியிடங்கள், நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள். நேர்முகத்தேர்வு கொண்ட பணியிடங்களில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, துறை ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று துவங்கியது. நேற்று, 600 பேர் அழைக்கப்பட்டனர்.மதிப்பெண் அடிப்படையில், முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்களுக்கு, தேர்வாணைய தலைவர் நடராஜ், துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
முதலிடம் பெற்றவர்கள் : மதுரையைச் சேர்ந்த ஷேக் முகைதீன் முதலிடம் இடம் பிடித்து, சார்பதிவாளர் பதவியை தேர்வு செய்தார். பொறியாளரான இவர், படிப்பை முடித்த கையோடு, ஒரே முயற்சியில் வெற்றிபெற்று, சாதனை படைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாவேந்திரன், நகராட்சி கமிஷனர் பதவியை தேர்வு செய்தார். மூன்றாவது இடம்பெற்ற இந்துநேசன், நான்காம் இடம் பெற்ற கடலூர் பாலாஜி ஆகியோரும், சார்பதிவாளர் பதவியை தேர்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம், அங்கேரிப்பாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் பதவியை தேர்வு செய்தார். 3,472 பேரில், ஐந்தாவது இடம் என்றாலும், பெண்களில், முதலிடம் என்ற பெருமையை, மகேஸ்வரி பெற்றார். பி.காம்., பட்டதாரியான இவர், 340க்கு, "கட்-ஆப்' 295.5 மதிப்பெண் எடுத்தார். சமீபத்தில் வெளியான குரூப்-4 தேர்விலும், இவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். மகேஸ்வரி கூறுகையில்,""கணவர் ஆனந்தராஜ், கோவையில், "பார்மசிஸ்ட்'டாக வேலை பார்க்கிறார். மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது; அவள், இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். கடினமாக உழைத்தால், எதையும் சாதிக்க முடியும். நகராட்சி கமிஷனர் வேலையில் சேர்வதை நினைத்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார். இவர்கள் ஐந்து பேருக்கும், துறை வாரியான பணி ஒதுக்கீட்டு ஆணைகளை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வழங்கினார். தொடர்ந்து, 20ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது. துறை வாரியான காலி பணியிடங்கள் விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பல்வேறு பதவிகளின், காலி எண்ணிக்கையின் நிலவரங்களை, அவ்வப்போது தேர்வர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இணையதளம் வழியாக, பெரிய திரையில் காட்டப்பட்டது. இது, கலந்தாய்வுக்கு வந்தவர்களுக்கு, பயனுள்ளதாக இருந்தது.

>>>சாப்பிடுவதற்கு முன் கைகழுவும் பழக்கம் இந்தியாவில் 38 சதவீதத்தினரிடமே வழக்கம் : யுனிசெப் ஆய்வாளர் தகவல்

"இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், கை கழுவும் பழக்கத்தை வெறும், 38 சதவீதத்தினர் வழக்கமாக கொணடுள்ளனர்,'' என, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் தபோல் தெரிவித்தார்.
"உலக கை கழுவும் தின'த்தை முன்னிட்டு, யுனிசெப் மற்றும் இந்திய செய்தி நிறுவனத்துடன், பள்ளி குழந்தைகள் இணைந்து, கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். சோப்பு போட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள்; கை கழுவும் பழக்கத்திற்கு மக்களை எப்படி மாற்றுவது, கை கழுவுவதற்கு சரியான வழிமுறை எது; கை கழுவும் பழக்கத்தால், உயிர் பலி வாங்கும் நோய்களிலிருந்து எப்படி காப்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை, பாடல்கள் மூலமாகவும், நாடகங்கள் நடத்தியும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். இதுகுறித்து, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் கூறியதாவது: இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், வெறும் 38 சதவீதத்தினர் மட்டுமே கை கழுவுகின்றனர். சமைக்கும் முன் கை கழுவும் பழக்கம், 30 சதவீதம் பேரிடம் உள்ளது என, பொது சுகாதார குழுமம் தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு வயிற்று போக்கும், சுவாச கோளாறும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கையை, வரும், 2015ம் ஆண்டுக்குள் மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு, சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். இவ்வாறு அருண் கூறினார்.

>>>உணவு ஒரு கனவா: இன்று உலக உணவு தினம்

உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: "உலக உணவு உற்பத்திக்கு வழி' என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
மூன்று கோடி:
உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இதை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரிக்கின்றன.அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம்.
உணவு கிடைக்குமா:
வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசியால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது, கடினமான விஷயமாகிறது. உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், உ<லகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச விருது:
உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

>>>அக்டோபர் 16 [October 16]....

  • சர்வதேச உணவு தினம்
  • சிலி ஆசிரியர் தினம்
  • பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
  • வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
  • பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)

>>>ஒரு மாதத்தில் டி.இ.டி., மறுதேர்வு முடிவுகள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள், ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த, இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், முதன்முறையாக, ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்தது. இதில், தேர்வு எழுதியவர்கள், 6.71 லட்சம் பேர். இந்த தேர்வில் பங்கேற்றவர்களில், வெறும், 2,448 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 0.36 சதவீதம் மட்டுமே. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்த, 17 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.16 லட்சம் பேருக்கு, நேற்று மறுதேர்வு நடந்தது. தேர்வுக்காக, 1,094 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த, 6.16 லட்சம் பேரில், 1.40 லட்சம் பேர், பங்கேற்கவில்லை.
நேரம் அதிகரிப்பு
காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. முந்தைய தேர்வில், தேர்வர்களுக்கு தேர்வு எழுத, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. ‘இந்த நேரம் போதாது’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக உயர்த்தி, டி.ஆர்.பி., அறிவித்தது.
22 ஆயிரம் இடங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர். தேர்வில், முதல் தாள் எளிதாகவும், இரண்டாம் தாளில், கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஒரு சில கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்ததால், அவற்றிற்கு விடையளிப்பதில் சிரமம் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். முந்தைய தகுதித் தேர்வு முடிவை வெளியிட, ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆனது; ஆனால், இந்த முறை தேர்வு முடிவை, ஒரே மாதத்தில் வெளியிடத் தேவையான நடவடிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்துள்ளது.

>>>உண்டு, உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

தமிழகத்தில் உள்ள, பல்வேறு உண்டு உறைவிடப் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள், சமவெளிப் பகுதிகளுக்குச் சென்று கல்வி கற்பது சாத்தியமில்லை. அதே சமயம், அருகில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல, 10 கி.மீ., செல்ல வேண்டும். பழங்குடியின மாணவர்கள் வாழ்க்கை, கல்வித் தரம் உயர வேண்டும் என்பதற்காக, உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. மாணவர்கள், பள்ளியிலேயே கல்வி கற்று, உண்டு, ஓய்வெடுக்க, இப்பள்ளிகள் உதவின. தமிழகமெங்கும் உள்ள, 297 உண்டு உறைவிடப் பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். தற்போது, இதில் பெரும்பாலான பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, பல்வேறு பழங்குடியினர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
நல அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:
மாணவர்கள், உண்டு ஓய்வெடுப்பதற்கான இடமாக மட்டுமே, பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், கல்வி கற்க இயலாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த தேர்ச்சி சதவீதம், இந்த ஆண்டு இல்லை. சமவெளிப் பகுதிகளில், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன், ஆசிரியர்கள் இருப்பதால், மலைப் பகுதிகளுக்குச் செல்ல மறுக்கின்றனர். இதுவே, ஆசிரியர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். தற்போது, அதே பகுதிகளில் வசிக்கும், படித்த பட்டதாரிகள், வேலையின்றி இருக்கின்றனர். அவர்களில் பலர், உறைவிடப் பள்ளிகளில் சேவை செய்ய, விருப்பத்துடன் இருக்கின்றனர். காலியாக உள்ள பணியிடங்களில், ஆசிரியர் நியமிக்கும் வரை, அவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தலாம். இதனால், உடனடி தீர்வு கிடைப்பதுடன், பள்ளியிலிருந்து விலகிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இதுகுறித்து, பழங்குடியின நலத்துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது, ‘விரைவில், இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்’ என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...