கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"ஸ்லெட்' தேர்வு முடிவு எப்போது?

"கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால், "ஸ்லெட்' தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான தகுதித்தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித்தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்டும் என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மூலம் தகுதித்தேர்வு நடத்தி வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான, "ஸ்லெட்' தேர்வு, கோவை பாரதியார் பல்கலை மூலம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும், 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 76 மையங்களில், அக்., 7ம் தேதி தேர்வு நடந்தது; 51 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று, 27 பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு, ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற முடியும். எனவே, "ஸ்லெட்' தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் என, தேர்வெழுதியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்கலை மாணவர் சேர்க்கை, தேர்வு போன்ற வழக்கமான பணிகளுக்கு இடையே, "ஸ்லெட்' தேர்வு விடைத்தாள் திருத்த வேண்டியுள்ளதே, தாமதத்துக்கு காரணம். கம்ப்யூட்டர் பிரிவில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்றார்.

>>>24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல்

"இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்' குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது:

மனித வளத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், நிறுவனங்களில் உள்ள மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின் குறைகளை மட்டும் கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை பார்ப்பவர்களோடு சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக திறமையுடன் செயல்படுவர்களாக இருக்கும் பட்சத்தில், வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், இம்மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ., 4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், வரும்       டிச., 15க்குள் வெளியிடப்படும்.

அரசு பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக, ஓராண்டுக்குள், 24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை செயலர் ஸ்ரீதர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோடீஸ்வர பிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

>>>நவம்பர் 23 [November 23]....

நிகழ்வுகள்

  • 800 - திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
  • 1227 - போலந்து இளவரசன் முதலாம் லெஸ்செக் படுகொலை செய்யப்பட்டான்.
  • 1248 - காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.
  • 1499 - இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
  • 1867 - இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • 1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
  • 1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.
  • 1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
  • 1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
  • 1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
  • 1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
  • 1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1998 - கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
  • 2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.
  • 2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
  • 2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
  • 2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1921 - சுரதா, கவிஞர் (இ. 2006)
  • 1926 - சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி

இறப்புகள்

  • 1973 - வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
  • 1990 - ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)
  • 1990 - லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959)

>>>அசிடிட்டி பிரச்சினையை போக்க...!

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலானவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சிலநேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின்போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசை
களுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி, செய்யலாம். பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் “புரோமிலெய்ன்’ ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம். முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டை கோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம். சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது. முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதே போல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம். குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச்சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்ற வைகளை சேர்த்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்குமுன் இஞ்சி டீ குடிக்கலாம். இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.
 
எதை சாப்பிடக்கூடாது?
அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம். அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம். காபின் நிறைந்த சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஒயின் சாப் பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

>>>மண்படாத வாழ்க்கை! - வெ.இறையன்பு

மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் வாழ்கிற வாழ்வே 'சொகுசான' வாழ்வென்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.

காலில் மண்படாமல், சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வது தான் பாதுகாப்பான வாழ்வென்று நினைத்துக் கொள்கிறோம்.

நம் தட்பவெப்பம், நம் மரபுக் கூறுகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. வெயில் கொளுத்துகிற ஊரில், தாகம் அதிகமெடுக்கும். தண்ணீர் குடிக்கும் தேவை அதிகரிக்கும். உள்ளே போகிற நீர் பெரும்பாலும் வியர்வையாக வெளிவருவதுதான் உடலுக்கு நல்லது. குளிர்சாதன வசதி கொண்டு, வியர்வையைத் தடுத்தால் சிறுநீரகம் அதிகம் உழைக்க, அவை பழுதடைந்துவிடும்.

இயற்கையுடன் இயைந்து வாழ்கிற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை, செறிவான நெறி. மழையில் ஒரு முறையேனும் நனைந்தால்தான் அதன் சுகத்தை உணரமுடியும். வானமே 'ஷவராக' மாற, நம் உடலில் தெளிக்கும் சாரல் ஒரு நிமிடம் நம் இருத்தலையே கரைத்துவிடும் தன்மை பெற்றது. அது ஏறத்தாழ 'மெய்ஞானம்' கிடைத்த அனுபவமாகிவிடும்.

அப்படி நனைந்தால் காய்ச்சல் வருமே என்று கவலைப்படும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முடிதிருத்தகத்தில் சிகையலங்காரத்திற்கு முன்பு தெளிக்கப்படும் நீருக்கே பயப்படுவார்கள். மழையில் நனைவதால் அப்படிக் காய்ச்சல் வந்தால் வரட்டுமே! உயிரா போய்விடப் போகிறது!

மகிழ்ச்சியுடன் செய்கிற எதுவுமே உடல் உபாதையை விளைவிக்காது என்பதே உண்மை. நல்ல வெயிலில் வியர்வை வழிந்தோடும் வரை விளையாடும்போது நம் மனமும், உடலும் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன.

சில நாட்கள் செருப்புப் போடாமல் நடந்து, பூமியின் குறுகுறுப்பை உணர வேண்டும். மாதத்தில் ஒரு நாளாவது மலைச்சாரலில் நடந்து போக நேரிட்டால், நம் உடலின் உண்மையான பலத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

உடல் அளப்பரிய சக்தியுடையது. நல்ல உழைப்புக்குப் பின் ஏற்படுகிற தூக்கமே சொர்க்கம் என்பதை வியர்வையை அனுபவித்தவர்களால் உணரமுடியும்.

இயற்கையின் சக்திகள் அனைத்துமே நமக்கு சகாயமானவை. அவற்றை விநோதமாகக் கருத கருதத்தான் நமக்கு உண்டாகிற நோய்களின் அளவும் அதிகரித்துவிட்டன.

மண்ணில் அழுக்குப் படியாத கால்கள் அவற்றின் படைப்பு நோக்கத்தையே இழந்து விட்டதாகவே கருதமுடியும்.

மண்ணை மதிப்பவர்கள், காற்றை நேசிப்பவர்கள், மழையை விரும்புபவர்கள் அவற்றிடமிருந்து ஓடி ஒளிவதில்லை, மாறாக அவற்றைத் தேடி அலைவதுண்டு.

>>>இணைய வழியில் 6,500 பேர் பணி நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 25 முதுகலை ஆசிரியர், வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை, பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில் சம்பந்தப்பட்டவர்கள் பங்@கற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில் நடக்கும். இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து, அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர் இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

>>>தமிழகபொறியியல் கல்லூரிகள் தரம்:ஏ.ஐ.சி.டி.இ., அம்பலம்

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் இந்திய தொழிற் கூட்டமைப்பு - சி.ஐ.ஐ., ஆகியவை இணைந்து, பொறியியல் கல்லூரி களின் தரம், செயல்பாடுகள் குறித்து, தேசிய அளவில் ஆய்வு நடத்தியது. இதில், தமிழகத்தில், ஆறு கல்லூரிகளுக்கு மட்டுமே, 50க்கும் அதிகமான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. பொறியியல் கல்லூரிகளில், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர், ஐ.டி., எலெக்டரிக்கல், இ.சி.இ., மற்றும் எம்.இ., ஆகிய பாடப் பிரிவுகளில், கல்லூரிகளின் செயல்பாடு, வேலைவாய்ப்பு, பாடத்திட்டம், ஆசிரியர்களின் தரம், அடிப்படை வசதிகள், தொழில்துறையினருடனான செயல்பாடுகள், சேவை, நிர்வாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. நாடு முழுவதும், 17 மாநிலங்களில் இருந்து, 156 கல்லூரிகள், ஆய்வில் பங்கேற்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 41 கல்லூரிகள் பங்கேற்றன. தேசிய அளவில், தென் மாநில கல்லூரிகள், 18.4 சதவீதம் அளவில் பங்கேற்றன. நிர்வாகம், பாடத்திட்டம் என, ஒவ்வொருபிரிவிற்கும், மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப் பட்டது. ஆய்வு முடிவுகள், நேற்று முன்தினம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.அதன்படி, தமிழகத்தில் இருந்து, ஆய்வில் பங்கேற்ற, 39 கல்லூரிகளில், ஆறு கல்லூரிகள் மட்டுமே, 50க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளன; மற்றவை, அதற்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளன. அதிலும், 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள், வெறும், 30 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளன. இதில், பிரபலமான, முன்னணி கல்லூரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சிறப்பான சேவை அளிப்பதிலும், தமிழக கல்லூரிகள் பின்தங்கி உள்ளன.பங்கேற்ற கல்லூரிகளில், பாடத்திட்டம் நன்றாக இருப்பதாவும், தொழில் துறையுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மோசமாக இருப்பதாக,தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

    திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வச...