கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> கண்ணீரை வர வைக்கும் காவிரி தண்ணீர்

காவிரியில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும், தமிழகத்தில் முப்போகம் விளைந்தாலும், கர்நாடக மாநிலத்தவர்களே அதிக பலனை அனுபவித்து வருகின்றனர். இதேபோல, ஆந்திரா, கேரளா மாநிலத்தவர்களும், தமிழகம் மூலம் பலனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில், ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறப்பதால், விவசாய தொழில், நாளுக்கு நாள் நசிவடைந்து வருகிறது. ஆண்டுதோறும் பாசன பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2008 -09ம் ஆண்டில், 29 லட்சத்து, 31 ஆயிரம் ஹெக்டராக இருந்த பாசன பரப்பு, 2009-10ம் ஆண்டில் 28 லட்சத்து, 64 ஆயிரம் ஹெக்டராக குறைந்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விவசாய தொழில் செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமாக விளைபொருட்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் காய்கறி உற்பத்தி சராசரியாக இருந்தாலும், அது நமது தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. கரும்பு, நெல், மக்காச்சோளம், பருப்பு வகைகள், தானியங்களை போல அல்லாமல் காய்கறிகள் விலை நிலையற்றதாக உள்ளதால், அவற்றை விவசாயம் செய்வதில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக கருதப்படும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும், நாள்தோறும் கர்நாடகாவிலிருந்து 330 முதல் 400 லாரிகள் வரை பலவகை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இது மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம், பெல்லாரி வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயமும் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது. இவ்வாறு, ஒரு நாளைக்கு சென்னைக்கு மட்டும் சராசரியாக 5,000 டன்கள் அளவிற்கு கர்நாடகாவிலிருந்து காய்கறிகள் எடுத்து வரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சில வகை காய்கறிகள் 200 முதல் 300 டன்கள் அளவிற்கு எடுத்து வரப்படுகிறது. இவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களின் காய்கறிகள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தேவையான காய்கறிகளும், கர்நாடகாவிலிருந்து குறிப்பிட்ட அளவிற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்தால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அவற்றை கொள்முதல் செய்வது குறையும். இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்துதான், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் கர்நாடக அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும், விவசாயிகளும் பாரபட்சம் காட்டி வருவதாக தெரிகிறது. 
அதேநேரத்தில் தமிழகத்தில், ஊட்டியில் விளையும் காய்கறிகள், கேரளா மாநிலத்தின் திருச்சூர், எர்ணாகுளம் சுற்றுப் பகுதிகளுக்கும், கொடைக்கானலில் விளையும் காய்கறிகள் திருவனந்தபுரம், கொல்லம் சுற்றுப் பகுதிகளுக்கும் நாள்தோறும் பல டன்கள் அளவிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளா மாநில அரசு, தண்ணீர் தர மறுத்தாலும், அவர்களின் காய்கறிகள் தேவையை பூர்த்தி செய்வதில் தமிழகத்திற்கு பங்கு உள்ளது.
கர்நாடகா, ஆந்திரா காய்கறிகளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்தாலும், தமிழக காய்கறிகளை, கேரளாவிற்கு அனுப்ப மறுத்தாலும் நமக்கு நஷ்டம் ஏதும் இல்லை. கேரளாவிற்கு அனுப்பும் காய்கறிகளை கொண்டு, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். ஆனால், தமிழகத்திற்கு காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு மூலம் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கே அதிகம் நஷ்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை இம்மூன்று மாநிலங்களின் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் என்று உணர்கின்றார்களோ, அன்றுதான், மாநிலங்களுக்குள் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை தீரும் என்கின்றனர் தமிழக வேளாண்மை துறை அதிகாரிகள். இதை, இம்மூன்று மாநிலத்தவர்களுக்கும் புரிய வைப்பதற்கான அணுகுமுறையை கண்டறிந்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...