கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பாடப் புத்தக சுமை போனாலும் நோட்டு புத்தக சுமை போகவில்லை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு, புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும்; ஒட்டுமொத்த கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையிலும், முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்தியது. ஜூன் மாதம் முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இத்திட்டம் அமலுக்கு வந்தது.
ஆனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமே பலன் பெற்று, எடை குறைந்த புத்தகப் பையை எடுத்துச் செல்கின்றனர். அதேசமயம், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகச் சுமை குறைந்தாலும், நோட்டுப்புத்தகச் சுமை குறையவில்லை.
பள்ளி நிர்வாகங்கள் தரும் நோட்டுப் புத்தகங்களில், 60 சதவீதம் மட்டுமே பயன்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நோட்டுப் புத்தகங்களை, மாணவர்கள் பயன்படுத்துவதில்லை.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம், சமீபத்தில் ராமநாதபுரத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்தியபோது, 30 கிலோ எடையுள்ள மாணவரின் பையில், 10 கிலோ எடையுள்ள நோட்டுப் புத்தகங்கள் இருந்தன. அன்றைய நாளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் தானா என, ஆய்வு செய்ததில், பாதி நோட்டுப் புத்தகங்கள் தேவையற்றது என தெரிய வந்தது.
அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியருடைய, பிள்ளையின் பையை, இணை இயக்குனர் சோதனையிட்ட போது, அன்றைய பாட வேளைகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் மட்டும் இருந்தன. அவற்றின் எடை, 3.5 கிலோ இருந்தது.
இதுகுறித்து விசாரித்ததில், அந்த ஆசிரியர், தினமும் காலையில், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் வைப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தேவையற்ற நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு மாணவர்களை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என, பள்ளி நிர்வாகத்திடம் இணை இயக்குனர் கண்டிப்புடன் கூறினார்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துச் செல்வது போல், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகங்கள் கூற வேண்டும். இதுகுறித்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...