மாநில அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு தொடர்பான, சட்டங்கள் குறித்த பாடங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை பாதுகாக்கும் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு நடத்துவதற்காக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான மத்திய குழு தமிழகத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களாக, பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்ற இக்குழுவினர், நேற்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செயலர் ஜீவரத்தினம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து கலந்தாய்வு நடத்தினர்.
கலந்தாய்வு கூட்ட முடிவில், மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 1955ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் 1989ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடந்த 2008ம் ஆண்டுகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ், 17.17 சதவீதத்தினருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வன்கொடுமை தொடர்பாக வரும் புகார்கள் அனைத்தையும் பதிவுசெய்ய வேண்டும்; விசாரணை மற்றும் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியவை உரிய நேரத்தில் நடக்க வேண்டும்; வழக்கில் ஆஜராகும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் செயல்பாடு, வழக்கின் போக்கு ஆகியவற்றை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என, தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், வன்கொடுமை தடுப்பு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு சட்டங்களை அதிக அக்கறையுடன் அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்துவதில், அதிகளவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்; மாநில அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தில் இந்த சட்டங்கள் தொடர்பான பாடங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை மாநில அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.