குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாத தேர்வர்கள், அதற்கான உரிய காரணத்தை தெரிவித்து, வரும் 26, 27 தேதிகளில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
நகராட்சி ஆணையர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 நிலையிலான, 3,000 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி எழுத்துத் தேர்வு நடந்தது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை, ஜூன் 20ம் தேதி முதல், வரும் 26ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.
தேர்வருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாள் மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான நாள், நேரம் ஆகியவற்றை ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்தது. எனினும், பல தேர்வர்களுக்கு, நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அறிந்த தேர்வாணையம், நடந்து முடிந்த நேர்முக தேர்வில் பங்கேற்காதவர்கள், அதற்கான காரணத்தை தெரிவித்து, 26, 27ம் தேதியில் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என நேற்று அறிவித்தது.
நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை தெரிவித்து, 26ம் தேதி பிற்பகல் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பிலும், 27ம் தேதி காலை நடக்கும் நேர்முகத் தேர்விலும் பங்கேற்கலாம்.
இப்படி வருபவர்கள், நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிட்டால், மேலும் ஒரு முறை வாய்ப்பு கிடையாது. இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.