“பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்காத பதிவுதாரர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்க முடியாது,” என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
கடந்த மாதம், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதிவுதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங், குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் நடந்தது. இதில், 500 பேர், ‘ஆப்சென்ட்’. இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம், கடந்த மாதம் கடைசி வாரத்தில் நடந்தது.
இதிலும் பல பதிவுதாரர்கள் கோட்டை விட்ட நிலையில், இரண்டு நாட்களாக, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.
டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு நேற்று ஏராளமானோர் வந்து, தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதேபோல், டி.இ.டி., தேர்வுக்கு தேர்வு செய்யப்படாத ஆசிரியர்களும் அதிகளவில் வந்தனர். மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, தேர்வு மைய எண்ணை சரிவர குறிப்பிடாததால், பல தேர்வர்களுக்கு, வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாகவும், பலர் டி.ஆர்.பி.,க்கு வந்தனர்.
இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியதாவது:விடுபட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடையாது. டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 71 பேர் மட்டும் விடுபட்டுள்ளனர். என்ன காரணத்தால், இவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டனர் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். டி.இ.டி., தேர்வு மையப் பிரச்னையில், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தேர்வர்கள், எந்த தேர்வு மைய எண்ணை குறிப்பிட்டார்களோ, அதன்படி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிமேல், தேர்வு மையத்தை மாற்றினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.