கடல்சார் படிப்பான டி.என்.எஸ். (டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்) பட்டயப் படிப்பை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, கடல்சார் பல்கலை துணைவேந்தர் ரகுராம் தெரிவித்தார். துணைவேந்தரின் இந்த கருத்தை, கடல்சார் கல்வி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
நாட்டில் ஒரே ஒரு கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. இது, சென்னை அருகே இயங்கி வருகிறது. கடல் சார்ந்த பல்வேறு படிப்புகளை, இந்த பல்கலை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 85க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், கடல் சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. இதில், நாட்டிக்கல் சயின்ஸ் பிரிவில், டி.என்.எஸ்., பட்டயப் படிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதை படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், 18 மாதங்கள் கப்பலில் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சியைப் பெற்றால் தான், படிப்பை நிறைவு செய்து, பட்டம் பெற முடியும்.
ஆனால், ஆண்டுக்கு 2,500 மாணவர்கள், இந்தப் படிப்பை படிக்கும் நிலையில், வெறும் 300 பேர் அளவிற்குத் தான், கப்பலில் பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால், 2007ல் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கப்பல் பயிற்சியை முடிக்காமல் தவித்து வருகின்றனர்.
கப்பலில் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை, மும்பையில் உள்ள கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களும், கப்பலில் பயிற்சி பெற போதிய கப்பல்கள் இல்லாததும், நேரம் ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்தப் படிப்பை ரத்து செய்து விடலாம் என, ஏற்கனவே கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகம், பல்கலைக்கு தெரிவித்தது.
ஆனால், கடல்சார் பல்கலைக்கும், கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகத்திற்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் காரணமாக, டி.என்.எஸ்., பட்டயப் படிப்பை ரத்து செய்வதில், பல்கலை காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், கடல்சார் பல்கலையின் புதிய துணைவேந்தராக சமீபத்தில் பொறுப்பேற்ற ரகுராம் கூறியதாவது: டி.என்.எஸ்., பட்டயப் படிப்பிற்கு, தற்போதுள்ள வேலை வாய்ப்பு மற்றும் வரவேற்பு குறித்து, ஆய்வு செய்யப்படும். அதில், பிரச்னை இருப்பது தெரிய வந்தால், டி.என்.எஸ்., படிப்பை ரத்து செய்வோம்.
இதுகுறித்து, தற்போது பரிசீலனை நடந்து வருகிறது. மேலும், இந்த பட்டயப் படிப்பிற்கு பதிலாக, நேரடியாக பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்ஸ் பட்டம் வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். கப்பல் பயிற்சி பெறாமல் காத்திருக்கும் மாணவர்கள், இந்த பட்டத்தைப் பெறலாம்.
கடல்சார் முதுகலை சட்டப் படிப்பு மற்றும் எம்.பி.ஏ., (துறைமுகம் மற்றும் கப்பல்) ஆகிய படிப்புகளுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பிரபலப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இவ்வாறு ரகுராம் தெரிவித்தார்.
பிரச்னையில் சிக்கியுள்ள டி.என்.எஸ்., பட்டயப் படிப்பை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்பதாக துணைவேந்தர் கருத்து தெரிவித்திருப்பதை, கடல்சார் கல்வி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.