உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.
இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்களின் பயன்பாட்டுக்கு தக்கவாறான, பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும், ஆக., 13ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் என்பது, இயற்கையிலே ஒருவருக்கு அமைந்து விடுகிறது. சிறு வயதிலேயே மூளை வளர்ச்சியை பொறுத்து, இப்பழக்கம் அமைகிறது.
உலக மக்கள் தொகையில், வலது கை பழக்கம் உடையவர்களே அதிகம் உள்ளனர். இதனால் கார், கம்ப்யூட்டர், பாத்ரூம் குழாய் என அனைத்து தொழில்நுட்ப பொருட்களும் இவர்களுக்கு ஏற்றவாறே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இத்தகைய பொருட்களை பயன்படுத்தும் போது, இடது கை பழக்கம் உள்ளவர்கள், சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இவர்களுக்கு தகுந்தவாறும் பொருட்களை நிறுவனங்களும், அரசும் அமைத்து தர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. மேலும், இவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இடது கை பிரபலங்கள்:முன்னாள் அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், தற்போதைய அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பலர், இடது கை பழக்கம் உடையவர்கள்.