தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட,
கூடுதல் கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதால், எஸ்.சி., - எஸ்.சி.ஏ.,
பிரிவினரை சேர்ந்த, 33 பேர், மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை
இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 11 தனியார்
மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி
வருகின்றன. இவற்றில், சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளில், 65 சதவீதமும்,
சிறுபான்மை கல்லூரிகளில், 50 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில்
உள்ளது.
இடஒதுக்கீட்டின் கீழ், எம்.பி.பி.எஸ்., சேர விரும்பும் மாணவர்களிடம்
பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை
விட, இரண்டு மடங்கு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்துகின்றன.
இதனால், இடஒதுக்கீட்டின் கீழ், எம்.பி. பி.எஸ்., சேர விரும்பும் மாணவர்கள்,
பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பாக, இம்முறை, இந்நெருக்கடியால், எஸ்.சி., பிரிவினர், 22 பேரும்,
எஸ்.சி.ஏ., பிரிவினர், 11 பேரும், மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை
இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த ராஜன்
என்பவர் கூறியதாவது: எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த என் மகள், பிளஸ் 2வில்,
186.75 "கட்-ஆப்&' மதிப்பெண் எடுத்துள்ளார்.
மருத்துவப் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வில் அவளுக்கு, சென்னை
குன்றத்தூரில் உள்ள, மாதா மருத்துவ கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டின் கீழ்
இடம் கிடைத்தது. அக்கல்லூரிக்கு, எம்.பி. பி.எஸ்., படிப்பிற்கு, கல்விக்
கட்டணமாக, 2.6 லட்சம் ரூபாய் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், 7 லட்ச ரூபாய்
கட்டணம் செலுத்த வற்புறுத்தினர்; ஜூலை, 25ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த,
காலக்கெடுவும் விதித்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு புகார் தெரிவித்தேன்.
அதையடுத்து, இம்மாதம், 12ம் தேதி, குறிப்பிட்ட கல்லூரியில் சேராததற்கான
விளக்கத்தை, அக்கல்லூரியில் இருந்து நேரில் கோரினர். அதற்கு உரிய காரணத்தை
தெரிவித்தும், நேற்றைய இரண்டாம் கட்ட கலந்தாய்வில், உரிய மதிப்பெண்
இருந்தும், என் மகளின் பெயர், தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது
அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு, எஸ்.சி., - எஸ்.டி., அரசு அலுவலர் நலச் சங்கத்தின் மாநில
தலைவர் மகாராஜன் கூறியதாவது: தனியார் மருத்துவ கல்லூரிகளில், இந்த கட்டணக்
கொள்ளை குறித்து, இந்திய மருத்துவ கழகம், தமிழக சுகாதார துறை அமைச்சர்
விஜய், செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர்
வம்சதாரா உள்ளிட்டோருக்கு, முறையாக புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித
நடவடிக்கையும் இல்லை.
இதைக் கண்டித்து, மருத்துவ கல்வி இயக்ககம் முன் இன்று ஆர்ப்பாட்டம்
நடத்த உள்ளோம்; இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும்
ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ
கல்லூரிகளில், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாதது மற்றும் கூடுதல் கல்வி
கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலர்
உறுப்பினர் ஜெயலால் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.