கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகர் இவ்வளவு தகவல்களா
* "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.
* மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.
* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.
* விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
* விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.
* விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.
* கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
* விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு "மூதண்டக் கஷாயம்' என்று பெயர்.
* விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.
* விநாயகரின் சக்தியாகிய வல்லபை மாரீச முனிவரது புதல்வி.

தோப்புக்கரணம் பிறந்த கதை:
ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.

விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை:
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

எங்கும் இவரது அருளாட்சி:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், ""பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,'' என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப் பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சிதான் நடக்கிறது.

இழந்த பொருளை தரும் விநாயகர்:
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...