கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம்

 
மதுரையில் கிரானைட் கற்களை அளவெடுக்கும் பணியில், அண்ணா பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின், "ஆளில்லா விமானம்' ஈடுபட்டு வருகிறது. இதை விவசாயம், தீயணைப்பு, அளவீடு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த, கிரானைட் முறைகேடு தொடர்பாக, கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்து வருகிறது. குவாரிகளில் உள்ள, "ஸ்டாக் யார்டு' பகுதியில் ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இப்பணியை எளிமைப்படுத்தும் விதமாக, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா முயற்சியால், சென்னை அண்ணா பல்கலையின் விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்த, "தக்ஷா' எனும் பெயர் கொண்ட "ஆளில்லா குட்டி விமானம்' வரவழைக்கப்பட்டது. "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் இந்த விமானம் மூலம், இடையபட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமானம், குவாரிகளில் உள்ள கிரானைட் கற்களால் ஆன ரகசிய அறைகள், பதுங்கு குழியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியது. இதன் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
100 கி.மீ., சுற்றளவை படம் பிடிக்கும்:
ஆளில்லா விமானத்தை, அளவீடுகள் மட்டுமல்லாமல் விவசாயம், தீயணைப்பு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும் என்கிறார், அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார். அவர் கூறியதாவது: 1.8 கி., எடையுள்ள ஆளில்லா விமானத்தை எளிதாக தூக்கிச் செல்லலாம். இதில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., இணைக்கப்பட்டுள்ளது. "ரிமோட்' மூலம் இயக்கப்படும் இந்த விமானம் அனுப்பும் வீடியோ படத்தை, "லேப்-டாப்'பில் பார்க்கலாம். 5 கி.மீ., சுற்றளவிற்கு பறக்கும். 1 கி.மீ., உயரம் பறக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் பறக்கும். 1 கி.மீ., உயரத்தில் பறக்கும் போது, பூமியின் 100 கி.மீ., தொலைவை துல்லியமாக படம் பிடித்து அனுப்பும். இப்படத்தை அடிப்படையாகக் கொண்டு கற்களின் நீளம், அகலம், உயரத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் துல்லியமாகக் கணிக்க முடியும். இதனால், கால விரயம் ஏற்படாது. அளவெடுக்கும் பணியை, அமர்ந்த இடத்தில் இருந்தே முழுமையாகக் கணக்கிட முடியும் என்றார்.

அமெரிக்க ராணுவம் பாராட்டு:
பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், நான்கு மாணவர்கள் ஆளில்லா விமானத்தை ஆறு ஆண்டுகள் முயற்சிக்கு பின் கண்டுபிடித்தனர். இக்குழுவினரை அமெரிக்க ராணுவம் வரவழைத்தது. அங்கு, ஆளில்லா விமானத்தின் செயல் திறனை பார்த்து அமெரிக்க ராணுவம் வியந்துள்ளது. தங்களது ராணுவ தேவைக்கு இக்குழுவினரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள அண்ணா பல்கலையில் அனுமதி கோரியுள்ளது. ஆகஸ்ட் 15ல், அண்ணா பல்கலை வந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முன்னிலையில், இதன் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இக்குழுவை அப்துல்கலாம் பாராட்டினார். இதை நாட்டிற்காக விரைவில் அர்ப்பணிக்கும்படி கேட்டு கொண்டார்.

பறந்து வந்து தீயை அணைக்கும்!
ஆளில்லா விமானத்தில், குறிப்பிட்ட அளவு பூச்சிகொல்லி மருந்தை வைத்து, 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது, 10 நிமிடத்தில் தெளிக்கலாம். சொட்டு நீர் பாசனம் முறையில் எந்த பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்பதை கண்டுபிடித்து, அங்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தீ விபத்து ஏற்படும் பகுதியில் ஆட்கள் செல்ல முடியாதபோது, ஆளில்லா விமானத்தை சற்று உயரமாக பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயன பொடியை செலுத்தி துரிதமாகவும், முழுமையாகவும் அணைக்க முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு முழுமையாக உதவத் தயார் என்கிறார் பேராசிரியர் செந்தில்குமார். அவரது, இ-மெயில், kskmit@rediffmail.com மற்றும் kskmit@annauniv.edu என்ற முகவரியை தெரிவித்துள்ளார்.

குட்டி விமானத்தின் கோடி பயன்கள்:
ஆளில்லா விமானத்தில் "ரேடார்' கருவியை பொருத்தி பூமிக்குள்ளும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். "ரேடார்' மூலம் ராணுவத்தின் உளவு பிரிவினர், விமானத்தில் சென்று வானத்தின் மேகக்கூட்டங்களில் மறைந்து கொண்டு, பூமியில் நடக்கும் சம்பவங்களை ரகசியமாக கண்காணித்து வீடியோ படம் பிடிப்பர். இதை தேசத்தின் நலன் கருதி ராணுவத்தினர் மட்டுமே மேற்கொள்ள முடியும். அண்ணா பல்கலை மாணவர்கள் தங்களது ஆளில்லா விமானத்திலும், 15 லட்சம் ரூபாய் செலவில், "ரேடார்' கருவியை பொருத்தி பூமியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும். ஆராய்ச்சிக்காக என்பதால் மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்கின்றனர். இதற்கான முயற்சிகளும் நடக்கிறது. பல்துறையில் இதன் மூலம் சாதனை படைக்க முடியும். ஆளில்லா விமானத்தில் அதற்கான, "சாப்ட்வேர்' மட்டும் மாறுபடும்.

"தக்ஷா' பெயர்க்காரணம் என்ன?
ஆளில்லா விமானத்திற்கு, "தக்ஷா - இந்தியா' என்ற பெயர் வைத்தது குறித்து பேராசிரியர் செந்தில்குமார் கூறுகையில், ""சமஸ்கிருதத்தில் "தக்ஷா' என்றால் (ஏர்-சுப்ரிரியர்) "காற்றின் ராஜா' எனப்பொருள். "தக்ஷா' மூலம், முதல்முறையாக மதுரையில் கிரானைட் குவாரிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலை உதவியுடன், விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக பல்கலை மாணவர்களுக்கு உதவும் வகையில் எங்களது ஆராய்ச்சி அமையும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...