கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உலகின் ‘ஏழ்மை’யான அதிபர்!


ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர் என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும்.

ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள் வருணிக்கின்றன.   

உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராமரிக்கிறார். அவருக்கு இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே காவல்.

தனது மாதச் சம்பளமான 12,000 டாலர்களில் 90 சதவீதத்தை தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்குச் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ல் இவரது சொத்து மதிப்பு 1,800 டாலர்கள். இந்த ஆண்டு, தனது மனைவியின் சொத்தில் பாதியைத் தன்னுடையச் சொத்துடன் சேர்த்துள்ளார். இதனால், சுமார் 2 லட்சம் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால், இந்தச் சொத்து மதிப்பு, துணை அதிபரின் சொத்து மதிப்பைவிட மிகவும் குறைவுதான்.

‘‘என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு என்னால் வாழ முடிகிறது’’ என்று சாதாரணமாகச் சொல்லும் இவர், கடந்த 2009-ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உருகுவே ஜனநாயக நாடாவதற்கு முன்பு ஆறு முறை சுடப்பட்டிருக்கிறார்; 14 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கை முறையையை நிர்ணயித்தது சிறை வாழ்க்கைதான் என்று அவர் நினைவுகூர்கிறார்.

‘‘என்னை ஏழை அதிபர் என்கிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மேலும் மேலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என பாடுபடுகிறார்களே அவர்கள்தான் ஏழைகள்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் இந்த அதிபர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ரியோ+20 மாநாட்டில் இவர் நிகழ்த்திய உரையின் சிறுபகுதி இது:

‘‘இந்த மதிய வேளை முழுவதும் நாம் நீடித்த மேம்பாடு பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். வறுமை நிலையைப் போக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், நாம் என்ன நினைக்கிறோம்? வளர்ந்த நாடுகளைப் போலவே மேம்பாடும் நுகர்வும் நமக்கு வேண்டுமா? உங்களை ஒன்று கேட்கிறேன்... ஜெர்மனியில் வீட்டுக்கு ஒரு கார் இருப்பது போலவே இந்தியாவிலும் வீட்டுக்கு ஒரு கார் இருந்தால் என்ன ஆகும்? நமக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் மிச்சம் இருக்குமா?

சரி, 700 கோடி கார்களால் ஏற்படும் கழிவுகளை இந்தப் பூமிதான் தாங்குமா? இதுபோன்ற நுகர்வு கலாசாரம் நம் கிரகத்தையை அழித்துவிடாதா?’’

உலகத் தலைவர்கள் பலரும் நுகர்வுடன் கூடிய வளர்ச்சியை எட்டும் விஷயத்தில் கண்மூடித்தனமாக யோசிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் அதிபர் ஜோஸ் முஜிக்கா.

எளிமையான வாழ்க்கை முறையால் மக்களை வசீகரித்திருந்தாலும், அண்மைக்காலமாக சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார முன்னேற்றங்கள் ஏதும் நாட்டில் இல்லை என்பது இவர் மீதான விமர்சனப் பார்வை.

எனினும், ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, சமகால தலைவர்களுக்கு பாடம் புகட்டுகிறார் என்பதை மட்டும் மறுக்க முடியாது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...