கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்த கோரி வழக்கு

 
பால் தாக்கரே மறைவு குறித்து, சமூக வலை தளமான,"பேஸ்புக்'கில் விமர்சித்த இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது.தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், இதுதொடர்பான சட்டப் பிரிவில் திருத்தம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
கடைகள் அடைப்பு
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சமீபத்தில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்துக்காக, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மும்பையை சேர்ந்த, இரண்டு இளம் பெண்கள், சமூக வலைதளமான, "பேஸ்புக்'கில் கருத்து தெரிவித்திருந்தனர்.அதில், "நாட்டில், தினமும் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். அவர்களுக்காக, கடைகள் அடைக்கப்படுவது இல்லை. பால் தாக்கரே மறைவுக்காக, கடைகள் அடைக்கப்பட்டதற்கு, அவர் மீது உள்ள மரியாதை காரணமல்ல; சிவசேனா கட்சியினர் மீது உள்ள, பயமே காரணம்' என, கூறியிருந்தனர். இந்த விவகாரம், மும்பையில் பரபரப்பு ஏற்படுத்தியதால், இருவரும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் கைதுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த மாணவி, ஷ்ரேயா சிங்கால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், அவர் கூறியுள்ளதாவது:
"தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 - பிரிவு 66ஏ, மிகவும் விரிவாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது. எந்த நோக்கத்திற்காக, இந்த சட்ட விதி இயற்றப்பட்டதோ, அதை பூர்த்தி செய்ய முடியாததாக உள்ளது. அதனால், சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து. அத்துடன், இந்த சட்ட விதியால், அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை உரிமைகள் மீறப்படும் அபாயமும் உள்ளது. பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு, சிக்கல் உண்டாக்குவதாகவும் இருக்கிறது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின், இந்த பிரிவில், திருத்தங்களை மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்தமஸ் கபீர் தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:சமீபத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களையும், இந்தச் சட்டப் பிரிவின் கீழ், சிலர் கைது செய்யப்பட்டதையும், கோர்ட் கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின், குறிப்பிட்ட அந்தப் பிரிவை எதிர்த்து, ஏன் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வியப்பாக உள்ளது. அதனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம்.தற்போது, இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், சமூக வலை தளங்களில், கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு எதிராக, அரசு தரப்பினர், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; அதனால், அதிரடியாக எந்த தடை உத்தரவும், இப்போது பிறப்பிக்க தேவையில்லை. வழக்கின் விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகனவதி, சுப்ரீம் கோர்ட்டிற்கு உதவ வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழிகாட்டி குறிப்பு வெளியீடு
தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின், பிரிவு, 66ஏ-வை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டப் பிரிவு தொடர்பாக, வழிகாட்டிக் குறிப்பு ஒன்றை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:சமூக வலைதளங்களில், யாராவது ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தால், அந்த நபருக்கு எதிராக, அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த, போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியோ அல்லது இன்ஸ்பெக்டரோ, "தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000' பிரிவு, 66ஏ-ன் கீழ், தற்போது வழக்கு பதிவு செய்யலாம்.

மூன்றாண்டு சிறை
இந்தச் சட்டப் பிரிவு, ஜாமினில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்றாலும், குற்றம் நிரூபணமானால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.ஆனால், இனி, இந்தச் சட்டப் பிரிவின் கீழ், யார் மீதாவது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனில், கிராமப்புறங்களில், ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரியிடமிருந்தும்; நகரங்களில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரியிடமிருந்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி, அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே, யார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இந்த புதிய வழிகாட்டிக் குறிப்புக்களை, அனைத்து மாநில அரசுகளும், கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு வழிகாட்டிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வழக்கு: கைவிட மகா., போலீஸ் முடிவு
மும்பை பால்தாக்கரேயின் இறுதி ஊர்வலம் தொடர்பாக, ஆட்சேபகரமான கருத்துக்களை, "பேஸ் புக்கில்' வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட, இரு பெண்களுக்கு எதிரான வழக்குகளை கைவிட, மகாராஷ்டிரா போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, மகாராஷ்டிரா மாநில போலீஸ், டி.ஜி.பி., சஞ்சீவ் தயாள் கூறியதாவது:தாக்கரேயின் இறுதி ஊர்வலத்தின் போது, கடைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளமான பேஸ் புக்கில், கருத்துக்களை வெளியிட்ட, ஷாகீன் ததா, ரினு ஸ்ரீனிவாசன் என்ற, இரு பெண்கள், கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.மும்பையை சேர்ந்த இந்த இரு பெண்களுக்கு எதிராக, எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான வழக்கை கைவிட, மகாராஷ்டிரா போலீஸ் முடிவு செய்துள்ளது. வழக்கை முடித்துக் கொள்வது தொடர்பான அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சஞ்சீவ் தயாள் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...