கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஓ பக்கங்கள் - சில நேரங்களில் சில உறுத்தல்கள்!! - ஞாநி

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி முதன்மையாக எழுத வேண்டிய அவசியம் இருந்தாலும், அதே வாரத்தில் பல விஷயங்கள் மனத்தில் உறுத்தலை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இந்த வாரம் ஒரு சில உறுத்தல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உறுத்தல் 1:

கீழ்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.

1. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக:
அ.முருங்கைத்தழை ஆ. முருங்கைக் கீரை இ. முருங்கை இலை ஈ. முருங்கை மடல்.

2. இடன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
அ. இடைப் போலி. ஆ. ஈற்றுப் போலி. இ. முதற்போலி. ஈ. வினைச்சோல்.

3. நெஞ்சாற்றுப் படை என்னும் பெருமைக்குரிய நூல் எது ?
அ. சிந்தாமணி. ஆ.சிலப்பதிகாரம். இ. குறிஞ்சிப்பாட்டு. ஈ.முல்லைப்பாட்டு.

4. செய்வினைத்தொடரைக் கண்டறிக:
அ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். ஆ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செயப்பட்டது. இ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செய்யப்படும். ஈ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்வர்.

5. ‘அவன் அவன் மொழியை உயர்த்தினால்தான் அவன் நாடு உயரும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்’ - இது எவ்வகை வாக்கியம் என்று சுட்டுக.
அ. எதிர்மறை வாக்கியம். ஆ. அயற்கூற்று வாக்கியம். இ.கலவை வாக்கியம். ஈ.வினா வாக்கியம்.
பதில் சொல்லிவிட்டீர்களா? இது போல இன்னும் பத்துப் பதினைந்து கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் ஏதோ பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழ்ப் பாடத் தேர்வில் கேட்கும் கேள்விகள் அல்ல. ஓர் அரசு வேலைக்கு, சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுபவர் பதில் எழுத வேண்டிய கேள்விகள். எந்த வேலையாக இருக்கும்?

அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வி.ஏ.ஓ எனப்படும் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர் ஆகிய கிராம நிர்வாக அதிகாரி (பழைய முன்சீப்) வேலைக்குத் தேர்வு எழுதுவோருக்கான பொதுத்தமிழ் மாதிரி கேள்வித்தாள் இது.

தமிழ் இலக்கியம் படிப்போர், தமிழைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றுக் கொடுப்போரான தமிழாசிரியர்களுக்கான கேள்வித்தாளில் இப்படிப்பட்ட கேள்விகள் இருப்பது நியாயமானது; இயல்பானது. கிராம அதிகாரி வேலை செய்யப் போகிறவருக்கு ஏன் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்? அதற்கு விண்ணப்பிக்கிறவர்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதும்போது, தமிழ் தவிர இதர பாடங்களின் கேள்வித்தாட்களும் இதே ரீதியில்தான் இருக்கின்றனவா என்று அறிய விரும்புகிறேன். இப்படி கேள்வித்தாள் இருந்தால் நிச்சயம் அவை லீக் ஆனால்தான் ஒருவர் பாஸ் செய்யமுடியும்.

கிராம அதிகாரி வேலைக்கு வர விரும்புபவரிடம் , சிட்டா என்றால் என்ன, அடங்கல் என்றால் என்ன, ஏரிக்கும் கண்மாக்கும் என்ன வித்தியாசம் ( இரண்டும் ஒன்றுதான்!), நத்தம் புறம்போக்கு என்பது என்ன, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருவருக்கு மொத்தம் அதிகபட்சமாக எத்தனை நாள் வேலை தரலாம், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய அடிப்படைச் சான்றுகள் எவையெவை... இப்படியெல்லாம் அல்லவா கேள்விகள் முன்வைக்கப்பட வேண்டும்? தமிழையும் ஆங்கிலத்தையும் பிழையில்லாமல் எழுத முடிகிறதா, புரிந்து கொள்ள முடிகிறதா என்ற அளவில் மட்டும் தானே அவர்களுடைய மொழி அறிவு சோதிக்கப்படவேண்டும்? அன்றாட வேலைக்குப் பயன்படும் அளவில் அவர்களுடைய பொது அறிவு இருக்கவேண்டும் என்பதுதானே முக்கியம்.

எந்த வேலைக்கு ஆளெடுக்கிறோமோ அந்த வேலைக்குத் தேவைப்படும் திறமையும் அறிவும் இருக்கிறதா என்று சோதிக்க உதவக்கூடிய கேள்விகளையே தமிழ், ஆங்கிலம், பொது அறிவு என்று எல்லாத் தேர்வுகளிலும் தயாரிக்கவேண்டும். இந்த அணுகுமுறை இல்லாமல் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர் எப்படி அந்த வேலைகளைத் திறமையாகச் செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

இல்லையில்லை, சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் எந்த வேலைக்காக நடத்தப்படுகின்றனவோ அந்த வேலைக்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்படுகின்றன என்று யாரேனும் எனக்கு நிரூபித்தால் மகிழ்ச்சியடைவேன். ஆனால் டி.என்.பி.எஸ்.சி - வி.ஏ.ஓ தேர்வு மாதிரி வினா விடை என்று தினசரிகளில் வெளிவருபவற்றைப் பார்த்தால் இது உருப்படுமா என்று நிச்சயம் உறுத்தலாகத்தான் இருக்கிறது.

உறுத்தல் 2:



இந்தியாதான் இன்று உலகிலேயே மிகவும் இளமையான தேசம் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதாவது இங்கேதான் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று அர்த்தம்.

ஆனால் அது பாதி உண்மைதான் என்று இப்போது தெரிகிறது. கூடவே இது கிழட்டு தேசமாகவும் இருக்கிறது. அறுபதைக் கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. 2013ல் வெறும் 10 கோடி கிழட்டு இந்தியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் 2030ல் இது ஏறத்தாழ இரு மடங்காகிவிடுமாம்.

மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால் பரவாயில்லை. மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி நான்கு முதியவரில் ஒருவரேனும் மனச்சோர்வில் அவதிப்படுகிறார். மூன்று பேருக்கு ஒருவர் வீதம் மூட்டு வலியில் கஷ்டப்படுகிறார்கள். ஐந்து பேருக்கு ஒருத்தர் வீதம் காது கேட்காதவர்கள்.

முத்த குடிமக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான ஆசிய பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 100 மாவட்டங்களில் முதியோருக்கான க்ளினிக்குகள் தொடங்கவும் உள் நோயாளி வசதியுடன் முதியோருக்கான தனி மருத்துவமனைகள் தொடங்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டி மாநில அரசுகளுக்கு பணமும் கொடுக்க முன்வந்திருக்கிறது.

முதல் வருடத்தில் 91 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் 22 மாவட்டங்களில் மட்டுமே க்ளினிக் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனை அமைத்தது வெறும் 12 மாவட்டங்களில்தான். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. (இங்கே முன்னாள், இந்நாள் முதல்வர்கள், இளைஞர் அணித் தலைவர்கள் எல்லாரும் அறுபதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் பிச்சை எடுக்க விட்டிருக்கிறதோ அது உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கும் சமூகம் என்று பல வருடங்கள் முன்பு ஜெயகாந்தன் எழுதியது நினைவில் உறுத்துகிறது.

பஸ்சில், ரயிலில் கியூ வரிசையில், சாலைகளில் எங்கேயும் முதியோருக்கு முன்னுரிமை தரும் கலாசாரமே நம்மிடம் இல்லை. ‘பெரிசு... பாத்துப் போமாட்டியா’ என்று கூவுகிற இளைய தலைமுறை பெருகிக் கொண்டிருப்பது இன்னும் உறுத்தலாக இருக்கிறது. பல இளைஞர்கள் தாங்கள் ‘பெரிசு’ ஆகாமலே போய்விடுவோம் என்றே நம்புகிறார்கள் போலிருக்கிறது...!

உறுத்தல் 3:

போலீசை வைத்து அடித்து நொறுக்கினாலும் மாதக்கணக்கில் தடை உத்தரவு போட்டாலும், அடிப்படை வசதிகளை முடக்கினாலும், அயராமல் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அமைதியாகப் போராடி அணு உலையை எதிர்க்கிறார்கள். கேரளத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் அச்சுத மேனன் தன் கட்சி நிலைக்கு விரோதமாக அணு உலையை எதிர்க்கிறார். லோக்பாலுக்கு மட்டுமே குரல் கொடுத்தவர்கள் இப்போது இதற்கும் குரலெழுப்புகிறார்கள்.

ஆனால் இது எதுவும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பது பெரும் உறுத்தலாக இருக்கிறது. இந்த வாரம் அறிவித்த 12வது ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் 17 அணு உலைகள் தொடங்க 67 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கிறது. இதுவரை கட்டியதை விட்டுவிடுங்கள், இனி கட்டவேண்டாம் என்று சொல்வோம் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்கள்?

சூரிய சக்திக்கு ஒதுக்கீடு உண்டா? அதைப்பற்றி அலுவாலியாவும் மன்மோகனும் பேசவே இல்லை. போன ஐந்தாண்டுத் திட்டத்தில் பகட்டாக அறிவித்த தேசிய சோலார் மிஷனுக்கு ஒதுக்கியதே வெறும் 4300 கோடி மட்டும்தான்! ஜெர்மனி அடுத்த 10 வருடங்களுக்குள் தன் 24 சதவிகித மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெற முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஏன் நமக்கு வாக்கும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் உணர்ச்சியும் புரிவதில்லை, மாற்றுக் கருத்துகளில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கும் திறந்த மனதும் இல்லை என்பது பெரும் உறுத்தலாக இருக்கிறது. இன்னொரு தலைமுறைத் தலைவர்கள் புதிதாகப் புறப்பட்டு வந்தால்தான் உண்டு போலிருக்கிறது....

உறுத்தல் 4:

ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்த அசீம் திரிவேதி வரைந்த கார்ட்டூன்களுக்காக அவர் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் ஊடகங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கைதைக் கண்டித்தவர்களில் கூட பலர் அசீம், பார்லிமென்ட் கட்டடத்தைக் கழிப்பறை போல வரைந்து இழிவுபடுத்தியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.
எனக்கும் அதே கருத்துதான். ஆனால் காரணம் வேறு. கழிப்பறையை இழிவின் சின்னமாகக் கருதி பார்லிமென்ட்டை அதைப் போல வரைந்தது தவறு என்பதுதான் என் கருத்து. கழிப்பறைகள் இழிவின் சின்னங்கள் அல்ல. அவை இல்லையென்றால் மனித வாழ்க்கையே இல்லை. மனிதன் மீதி நேரம் தூய்மையாக ஆரோக்கியமாக இருப்பதற்கு, கழிப்பறை மிகமிக முக்கியமான காரணம். எனவே பார்லிமென்டை, கழிப்பறையாக வரைந்து கழிப்பறைகளை அசீம் இழிவுபடுத்தியிருக்க வேண்டாம்.

கழிப்பறைகள் இழிவின் அடையாளமாகப் பார்ப்பதற்குக் காரணம் நம் சாதியப் பார்வைதான். கழிப்பறையைச் சுத்தப்படுத்து வோரைக் கீழ்சாதியாக்கி தீண்டாமை மூலம் இழிவுபடுத்தி வைத்திருக்கிறோம். அந்தச் சாதிகளின் உழைப்புடன் தொடர்புள்ள கழிப்பறை, செருப்பு முதலியவை எல்லாம் இழிவின் சின்னங்களாக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி நாம் உறுத்தல் இல்லாமல் இருப்பதுதான் ஆபத்தானது.

மற்றபடி கார்ட்டூன்களுக்காக அரசோ யாருமோ பயப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. அவை சிந்திப்பதற்கும் ரசிப்பதற்குமானவை. அநாகரிகமாக, கண்ணியமில்லாமல் போடும் கார்ட்டூன்களைக் கண்டிக்கலாம். சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி தரக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டதால் எரிச்ச லடைந்த ஒரு சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஜெயலலிதாவையும் மன்மோகன்சிங்கையும் ஆபாசமாக கார்ட்டூன் போட்டார். அந்தப் பத்திரிகை சிங்கள அமைச்சருக்குச் சொந்தமானது. தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடும் ஜெயலலிதா ஏனோ இந்த கார்ட்டூனைக் கண்டு கொள்ளவே இல்லை. நியாயப்படி இந்திய அரசு, இலங்கை அரசிடம் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அசீம்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. கார்ட்டூனிஸ்ட் கைது பற்றிப் பலரும் கண்டனம் தெரிவித்தபோதும் இதைக் கிண்டல் செய்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் அஜீத் நைனன் போட்ட கார்ட்டூன் தான் சூப்பர் (அருகே).

இந்தக் கார்ட்டூன் விவகாரத்தில் எனக்கு இருக்கும் உறுத்தல் ஒன்று உண்டு. அசீம் கைது செய்யப்பட்ட அதே இ.பி.கோ 124 ஏ - பிரிவுதான் கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்டிருக்கிறது. அசீம் கைதையடுத்து அந்தப் பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூவிய ஆங்கில ஊடகங்கள், கூடங்குளம் விஷயத்தில் இதுவரை கண்டிக்கவே இல்லையே ஏன்?

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...