கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓ பக்கங்கள்-ஞாநி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓ பக்கங்கள்-ஞாநி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

>>>ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? - ஓ பக்கங்கள்-ஞாநி

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா? காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும்  பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலில் இதர கட்சிகளில் எது பரவாயில்லை என்று பார்க்கும் சூழலே இருக்கிறது.
எண்பதுகளிலிருந்து வலிமை பெறத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி அடிப்படையிலேயே ஆபத்தான கட்சி என்பது என் தீர்மானமான கருத்து. அதுவும் அதை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் பல்வேறு அவதாரங்களும் எவ்வளவு சாமர்த்தியமாக தங்கள் அசல் முகத்தை மறைக்க விதவிதமான முகமூடிகளை பயன்படுத்தினாலும், என் போன்றோருக்கு அதன் அசல் முகம் நன்றாகவே தெரியும்.
பாரதீய ஜனதா கட்சி அரசியலில் நிலை பெறுவதற்கு முன்னால் நம் சமூகத்தில் அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் இதர வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக சொல்லபடும் ஹிந்து மதத்தினருக்கும் இடையே கடும் உரசல்கள் இருக்கவில்லை. குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய இணக்கமே எல்லா மதத்தினரிடையிலும் இருந்து வந்தது. பாரதிய ஜனதாவின் வருகைக்குப் பின், அதன் தீவிர ஆயுதங்களான இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரீஷத் போன்றவை தீவிரமாக இங்கே இயங்கத்தொடங்கியபின்னர்தான், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் உருவாகத் தொடங்கின. அன்றாட வாழ்க்கையிலேயே குறிப்பிட்ட மதத்தினரை சில பகுதிகளிலேயே குறுக்கி வாழ வைக்கும் கெட்டொவைசேஷன் என்ப்படும் சேரிப்படுத்தலும், முத்திரை குத்தலும் பலமாகி வருகிறது.
எனவே காங்கிரசுக்கு மாற்றாக பாரதிய ஜனதா வளர்வதை விரும்பவே மாட்டேன். சில வருடங்கள் முன்பு வி.பி.சிங் சொன்னதைப் போல டெல்லி அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மத சார்பற்ற அணிகளாக இருப்பது அவசியம்.
இன்றைய நிலையில் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஊழல்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து எடுக்கும் தவறான நிலைகள் எதுவும் எனக்கு உடன்பாடானவையல்லதான்.
ஆனால் பாரதீய ஜனதா இதில் காங்கிரசிலிருந்து வேறுபட்டதே அல்ல. ஆட்சிக்கு வந்தால் அதன் அமைச்சர்களும் பெரும் ஊழல் செய்பவர்கள், சுரங்கத் தொழிலதிபர்களின் தயவில் கட்சி நடக்கும் என்பதெல்லாம் அம்பலமாகிவிட்டது. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் அதன் வெளியுறவுக் கொள்கையும் ராஜபக்‌ஷேவை எதற்கும் நிர்ப்பந்தப்படுத்தாத ஒன்றாகத்தான் இருக்கும். தொண்ணூறுகளிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும் பொருளாதார தாராளமயக் கொள்கை மோடியின் குஜராத் உட்பட பிஜேபி ஆட்சிகளில் எங்கேயும்  மாற்றியமைக்கப்படவில்லை. அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.
காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபிக்கு பதில் உண்மையில் உருவாகவேண்டிய மூன்றாவது அணி என்பது பல்வேறு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பான ஓர் அணிதான். (காங்கிரசும் பிஜேபியும் கூட கள செல்வாக்கைப் பொறுத்தமட்டில் வட்டாரக் கட்சிகள் போலத்தான் இருக்கின்றன. அனைத்திந்தியாவிலும் தெரியப்படுத்தப்பட்ட பிம்பம் உள்ள தலைவர்கள் இவற்றில் இருப்பதால் அவை பெரிய கட்சிகள் போல தோற்றமளிக்கின்றன.)
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழி வாரி தேசிய இனத்தின் பிரதிநிதியான மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் இந்தியாவை நிஜமான கூட்டாட்சி முறையை நோக்கியோ அமெரிக்க பாணி பெடரலிசம் நோக்கியோ அழைத்துச் செல்லவும் முடியும்.
ஆனால் இன்று இருக்கும் முக்கியமான மாநிலக் கட்சிகள் எதுவும் அதற்கான தகுதியுடன் இல்லை. தி.,மு.க, அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் எல்லாமே ஊழல், அராஜக சரித்திரம் உடைய கட்சிகளாகவே இருக்கின்றன. மம்தாவின் திரிணமூல் இன்னும் ஊழல் கட்சியாக அறியப்படவில்லை என்றாலும் அதன் தலைவரின் சர்வாதிகார மனப்பான்மை சரியான திசையில் செல்ல உகந்ததே அல்ல.
ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் மோசமான மாநிலக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு சரியான மாநிலக் கட்சி உருவாகவேண்டியிருக்கிறது. அப்படி உருவானால்தான் இந்திய அரசியல் சரியான கூட்டாட்சியை நோக்கி செல்வதில் அர்த்தம் இருக்க முடியும்.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் பிஜேபி போன்ற மதவாத சக்திகளைத் தடுக்க காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்சியின் பொறுப்பேற்கவரும் ராகுல் காந்தி என்ன செய்ய முடியும்? என்ன செய்யக் கூடும் ?
ராகுலைப் பற்றிய முக்கியமான விமர்சனம் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலின் இன்னொரு பிரதிநிதி அவர் என்பதாகும். இங்கே நாம் ஜவஹர்லால் நேரு, கருணாநிதியைப் போல வாரிசு அரசியலை ஊக்குவித்தவர் அல்ல என்பதை கவனித்தாகவேண்டும். அவருக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரிதான் பிரதமரானார். இந்திராவை நேரு கொண்டு வரவில்லை. இந்திரா காலத்தில் நெருக்கடி நிலையின்போது அவரால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட சஞ்சய் காந்தி இந்திரா, நேருவின் மதச் சார்பற்ற அரசியல் மனநிலையில் வந்தவர் அல்ல. அவருக்கு நெருக்கடி நிலையின்போது முஸ்லிம்களுக்கு எதிரான  அராஜகங்களைச் செய்ய உதவியாக இருந்தவர் ஜக்மோகன். பின்னாளில் பிஜேபியின் கண்மணிகளில் ஒருவரானார். சஞ்சயின் குடும்பமே மேனகா, வருண் இருவரும் – இன்று பிஜேபியில்தான் இருக்கிறது. திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் இந்திராவின் குடும்பத்தில் ஊடுருவினார்கள் என்றே சந்தேகிக்கலாம்.
ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் நுழைந்தவர்தான். அவர் கொல்லப்பட்ட பிறகு, சோனியாவும் உடனடியாக தீவிர அரசியலுக்கு வரவில்லை. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் காங்கிரசுக்குப் பெரும் களங்கம் கற்பிக்கக்கூடிய இரு பெரும் நிகழ்வுகள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ்சும் பிஜேபியும் நடத்திய பாபர் மசூதி இடிப்பு நரசிம்மராவின் ஒத்துழைப்பால் தான் சாத்தியமாயிற்று. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சிபு சோரன் உள்ளிட்ட சில எம்.பிகளுக்கு நரசிம்மராவ் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு, சிபு சோரன் தண்டனையையும்  அனுபவித்தார்.
நேரு, இந்திரா, ராஜீவ் காலங்களில் ஒருபோதும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததில்லை. ராகுல் காந்தியும் அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் அம்மாவுக்கு உதவுவதற்காக வந்தவர்தான். சோனியாவும் ராகுலும் அரசுப் பதவிகளில் அமர்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருந்தபோதும் இதுவரை அவற்றை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். எனவே வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முற்றிலுமாகப் பொருந்தாது.
இரண்டாவதாக ராகுல் மீது சொல்லப்படும் விமர்சனம் இதுவரை அவர் காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்து பெரும் பலத்தை எங்கேயும் ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். இது முற்றிலும் சரியல்ல. உத்தரப் பிரதேசத்தில் 2009 எம்.பி.தேர்தலின் போது 21 எம்.பி. இடங்களைப் பெற அவர் பிரசாரம் உதவியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் உதவவில்லை. சட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்த மட்டில் மக்கள் ஆதரவைப் பெற கட்சிகளுக்கு உள்ளூரில் ஒரு செல்வாக்கான கவர்ச்சியான தலைவரும் தேவை. காங்கிரசுக்கு அது உ.பி.யிலும் இல்லை. குஜராத்திலும் இல்லை. உ.பியில் ராகுல்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.
இப்போது ராகுல் செய்யவேண்டியது என்ன?
மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்புப் பொருளாதாரக் கொள்கைகள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. காங்கிரஸ் இந்தக் கொள்கைகளில் சிவற்றையேனும் கைவிட்டு, மீண்டும் தன் சோஷலிசக் கொள்கைகள் சிலவற்றை மீட்டெடுத்துக் கொண்டு வந்தாலொழிய சாதாரண மக்களின் ஆதரவு பெருகும் வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான கட்சிக் கிளையை உருவாக்க ஏற்ற மாநிலத் தலைவர்கள் இல்லை. சிலரையேனும் பழைய காமராஜ் திட்டம் போல டெல்லி பதவிகளிலிருந்து அனுப்பிவைத்தாக வேண்டும். வலுவான மாநிலத் தலைமைகளை இந்திரா ஒழித்தார். அதுதான் இன்று வரை காங்கிரசின் மிகப் பெரிய பல்வீனமாக இருக்கிறது. இதை ராகுல் திருத்த வேண்டும்.
படித்த நகர்ப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் படிப்பும் வேலையுமில்லாத கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் இன்று மிகப் பெரியது. இவர்களுக்கான சமூக, அரசியல் திட்டம் எதுவும் எந்தப் பெரிய கட்சியிடமும் இல்லை. ஆனால் ராகுல் போன்ற இளம் அரசியல்வாதிகள் இதைத்தான் கவனிக்க வேண்டும்.
ராகுலால் இதையெல்லாம் செய்யமுடியுமா?
இதுவரை அவர் செய்து வந்திருப்பதில் எனக்கு முக்கியமாகப்படுவது ஓரிரு அம்சங்கள்தான். என் குடும்பப் பின்னணியால் நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்படி பின்னணி ஏதும் இல்லாதவர்கள் வருவதற்கு ஒரு சிஸ்டம் வேண்டும், அதை உருவாக்க விரும்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல். அதன்படி இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களை சேர்த்து முறையான வெளிப்படையான உட்கட்சித் தேர்தல் நடத்தி வருவது நல்ல அம்சம். இது வேறு எந்தக் கட்சியிலும் நடைமுறையில் இல்லை. இதை தாய்க் கட்சிக்கும் ராகுல் விரிவுபடுத்த வேண்டும்.
இளைஞர் காங்கிரசுக்கென்று, அரசியலில் இல்லாத படித்த இளைஞர்களின் திங்க் டேங்க் ஒன்றை ராகுல் வைத்திருக்கிறார்.இவர்களின் கள ஆய்வுகளின் உதவியில்தான் விவசாய விளை நிலங்களை வாங்குவது பற்றிய சட்ட வரைவை ராகுலால் தயாரிக்க முடிந்தது. இது இன்னொரு முக்கிய அணுகுமுறை.
தங்கள் கருத்துக்கும் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானவர்களுடன் உரையாடல் நடத்த முன்வருவது இன்றைய முக்கியமான அரசியல் தேவையாகும். இதை மூத்த அரசியல்வாதிகளிட்ம எதிர்பார்க்கமுடியாது. ஆனால் இளைஞர்கள் பொதுவாக திறந்த மனதுடன் பிரச்சினைகளை அணுகுகிறார்கள். அவர்கள் அரசியலில் நுழையும்போது இது சாத்தியப்படும். அவர்களிலும் கூட உணர்ச்சிவசப்பட்டு உணர்ச்சியை தூண்டி அரசியல் நடத்துவோருக்கு இது சாத்தியமில்லை. ராகுல் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகத் தெரியவில்லை என்பது நல்ல அம்சம்.
எனினும் துணைத் தலைவர் பதவி ஏற்புரையின் போது இந்திராவின் காவலர்களுடன் தனக்கு இருந்த உறவை அவர் சொன்னது நெகிழ்ச்சியானது. தனக்கு பாட் மிண்ட்டன் சொல்லிக் கொடுத்து தன்னுடன் விளையாடி வந்தவர்கள் இந்திராவைக் கொலை செய்தது தன்னை மிக கடுமையாக பாதித்தது என்றார் ராகுல். பேரனுடம் அன்பாக விளையாடியவர்களைப் பாட்டியைக் கொல்பவர்களாக ஆக்கிய அரசியல் என்ன, அந்த அரசியலில் யார் யார் என்னென தப்பு செய்தார்கள் என்றெல்லாம் அடுத்து ராகுல் யோசிக்க முடியுமானால், அவரால் இந்திய அரசியலை ஒரேயடியாக மாற்ற முடியாவிட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமான சலனங்களையாவது ஏற்படுத்த முடியும்.
“அதிகாரம் என்பது விஷம்.” என்று அவருக்கு அம்மா சோனியா சொன்னதாகச் சொல்லும் ராகுலுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், அந்த விஷத்துக்கான முறிவு அன்புதான். நம் அரசியலில் அன்புக்கு இடமில்லாமல் இருப்பதால்தான் அதிகாரம் என்பது விஷமாக இருக்கிறது. மக்கள் மீது அன்பு இல்லாத அரசியல் மக்களுக்கே விஷம்தான்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூக்கு மேடையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் தண்டனையைக் குறைக்கும்படி ராகுலால் சொல்ல முடிந்தால், அது அன்பு சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கான ஒரு முதல்படியாக இருக்கும்.
கல்கி 26.1.2013

>>>ஒரு முத்தமும் பல கேள்விகளும்.... ஓ பக்கங்கள்-ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க  கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி,  முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.
பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை  அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.
“நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பை தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் உதவி செய்வது மெழுகுவத்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? டெல்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த பேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன் ?”
இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் பேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை.என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.
இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆனபோது அவர் வயது 15தான். மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்கவைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவளுடைய அம்மா ராதாவுடையதுதான்.
இப்படி வளர் இளம் பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்கவைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்த படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்படவேண்டும்.
அது மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட டெல்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. டெல்லி நிகழ்ச்சியில் குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பது கவனிக்கத்தக்கது. அண்மையில் தமிழ்நாட்டில் பள்ளிச் சிறுவர்கள் பள்ளி வளாகத்தில் மது குடித்ததைக் கண்டித்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் மது குடிக்க பணம் தேவை என்பதற்காக பள்ளிக்கூட மரமேசைகளை உடைத்து விறகாக்கி விற்றுக் குடித்திருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும்பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர்.  “ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்” என்று செய்தி அனுப்பினேன்.“எனக்கும் செய்தி வந்தது. இனி இந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்” என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.
சினிமா சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாகாரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர்களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்கு பதிலாக பலப்படுத்துகின்றன. ஆணுக்கு சேவை செய்ய பெண், பெண் விட்டுக் கொடுத்தால்தான் குடும்பம் உருப்படும்,ஆணின் இச்சைக்கானவள் பெண் என்ற கருத்துகளை திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது சினிமா. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழைய கருத்தை, பொறுக்கியானாலும் காதலன், ரவுடியானாலும், லவ்வர் என்று நவீனப்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண்பிம்பங்கள்  உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில்  ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவ சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில்,எண்பதுகளில் இருந்ததை விட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர் பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சரியமானதுதான்.
இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.
அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.
என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும்போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.
குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.
எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனதில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யூஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை.எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.
பள்ளிப் பருவத்திலிருந்து உடல் நலம் மன நலம் சார்ந்த பாலியல் கல்வியையும் மீடியாவைப் புரிந்துகொள்ளும் பயிற்சியையும் அறிமுகம் செய்யவேண்டும் என்று என் போன்றோர் பல வருடங்களாக வலியுறுத்திவருகிறோம். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுவோர் பாலியல் வக்கிரங்களை படைப்பாக்குவோரைக் கண்டு கொள்வதே இல்லை.
பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில்,  சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உடபடுத்திக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாச்கர்களுக்கும் மட்டுமென்று தனக்கு தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குநரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவத்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.
காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாறவேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாகவேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.
கல்கி 19.1.2013

>>>ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா? - ஓ பக்கங்கள்-ஞாநி

“அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை  விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை.  தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும்  ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள்  தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல  பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.”
ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும்  உணர்ந்து, அடுத்த தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக சொல்லிவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்தபோதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சரானவர். அந்த வாய்ப்பை அன்றே  மகனுக்குக் கொடுத்துவிட்டு தான் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால்,  தேவ கவுடாவுக்கு சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர்  அடைந்திருக்கலாம்.
ஸ்டாலினை தி.மு.கவின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ  தி.மு.க கட்சிக்குள்ளிருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்ததில்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில் வைகோவை ஸ்டாலினுக்கு சமமான தலைவராக்காமல் தனக்கு சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக் கதை.)அப்படியே ஸ்டாலினுக்கு சம்மான தலைவர்தான் ஜெயலலிதா  என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தன்னை ஜெயலலிதாவுக்கு சம்மாக தானே கலைஞர் குறுக்கிக் கொண்டார்.
ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளேயிருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். கட்சித் தலைவராக பல சிக்கல்களை சமாளிக்கத் தெரிந்த கலைஞர் குடும்பத் தலைவராக எப்போதுமே ஒரு ஃபெயிலியர்தான். அவரது மருமகன் முரசொலி மாறன் ஒரு மிடில் க்ளாஸ் வங்கி அதிகாரி குடும்பதில் செய்வது போல தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து பத்திரிகைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து தொழிலதிபர்களாக வருவதற்கு ஊக்குவித்தது போல கருணாநிதி தன் பிள்ளைகளை வளர்க்கவில்லை. முத்து முதல் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு வரை எல்லாரையும் தன் அரசியல் பணிக்கு ஊழியர்களாகப் பயன்படுத்தியதைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை.
எம்.ஜிஆருக்கெதிராக முத்துவை நடிகனாக வளர்த்து எம்.ஜிஆரை ஒழித்துக் கட்ட முயற்சித்தார். முத்துவின் பலம் நடிப்பு அல்ல. இசைதான். பாடுவதுதான். தன் தாய்மாமா இசைச் சித்தர் சிதம்பரம்  ஜெயராமனைப் போல கர்நாடக இசையில் பேர் எடுக்காவிட்டாலும், முத்து சினிமா இசையில் ஒரு பி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா,எஸ்.பி.பி,  வரிசையில்  போல வந்திருக்க முடியும்.  கலைஞர் அவரை எம்ஜிஆரின் க்ளோனாக்க முயற்சித்துத் தோற்றதில் அவர் வாழ்க்கையே வீணாகிப் போயிற்று.
அந்த காலகட்டத்தில் ஸ்டாலினை விட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாக தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால்தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.
ஸ்டாலின்தான் அடுத்த கட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தன் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை.பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.
ஆனால் சொந்த தொழில் முயற்சிகளில் தோற்றுப் போன அழகிரி அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாக சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது.  அழகிரி அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டுமென்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள்ளிருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்ப்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று.
தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை டெல்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்ப்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குள் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தனக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாக சொல்ல முடியாது.  பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று  கணிக்கப்பட்டார். அப்போது அவர் தன்னை டிவி நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராக காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.
ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்துவிட்டார்.  தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்சினைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.
இப்போது ஒரு வழியாக அவரைத்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராகத் தானே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உட்கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும்,  தி.மு.கவில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.
அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.  ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக் அ.தி.மு.கவுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. அழகிரி செகண்ட் சாய்சை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.கவை பலவீனப்படுத்த விரும்பும் டெல்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். ஆனால் அழகிரி எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும்.  குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.
கலைஞர் இனி தன் முடிவை வீட்டு நிர்ப்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதுவரை தன் மரணத்தைப் பற்றி பேசாத அவர் முதன்முறையாக இப்போது பேசியிருக்கிறார்.  அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ “அப்போது நான் உயிரோடு இருந்தால்” ஸ்டாலினையே முன்மொழிவேன் என்று சொல்லியிருக்கிறார்.
தன் காலம் முடிவதற்கு முன் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தான் விடை பெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இது  காட்டுகிறது.
எனவே தி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான்.
இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.கவைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?
“தி.மு.க முடிந்து போன கதை” என்று அண்மையில் ஜெயலலிதா தன் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க முடிந்த கதையாகாது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித ஓட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.
அண்ணா 1949ல் தி.மு.கவை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 40தான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்த கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்துவிட்டிருக்கும்.
இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி.  இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடு வயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.
இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தன்னையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.கவை பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?
கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் – பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வீயூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்துகொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட் அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. கலைஞர் காலத்துக்குப் பின் அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.
எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்கு சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவை சந்திக்க அவர் தயங்கியதில்லை.
தி.மு.க என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டு போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்து பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.
கல்கி 12.1.2013

>>>ஆர் யூ தேர் மேடம் சி.எம் ? - ஓ பக்கங்கள்-ஞாநி

இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்து சொன்னால், வாராவாரம் இந்த சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கலாம்.
டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத் தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன்.எகிப்திலே செய்தார்கள். டெல்லியிலே செய்தார்கள். என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.
“புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும்படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். cmcell@tn.gov.in” என்று ஓர் வேண்டுகோளை பேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.
அதில் கிடைத்த முக்கியமான செய்தி — இந்த சி.எம் செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.
“ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்ற சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சிஎம் செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு….பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூட போறாங்க?” என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி எம் செல்  கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக் இருக்கிறது.
“விபத்தாக சித்தரிக்கப் பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்ப படும் விஷயம் சி.எம்.செல்லுக்கு தான் முதலில் அனுப்பப்பட்டது அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவுலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை.அந்த கேஸ் மூடப்பட்டது. ஒரு வருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவுலகத்திற்கு சென்று கேட்டபோது , அது முடிந்து போன விஷயம் என புகாரையே எடுக்க வில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்து சென்று புகாரை பதிவு செய்தேன் ஒரு வருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது.” என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.
சிஎம்செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.சூளைமேடு மாநகராட்சி பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு.க ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்ம்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சிஎம்செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே !
சென்னை மேயர் சைதை துரைசாமியின் பேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்பொது பார்த்தால் அந்த தளத்தில் எதுவும் உருப்படியாக் நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தன் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாந்கராட்சி, மின்வாரியம் குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களை சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை.எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.
சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும்படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ‘ ரொம்ப வேலை பளு. நேரம் ஒதுக்குவதற்கில்லை ” என்று கூட இன்று வரை அதற்கு பதில் கிடையாது. சமூகப் பிரச்சினையைப் பற்றி தன்னிடம் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தனக்கு டெல்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறார் ! என்ன கொடுமை இது !
சிஎம்செல் வேஸ்ட். சிஎம் ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்…. ? இதோ இன்னொருவர் பேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: “சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்ற சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள் குழந்தைகள் எல்லாரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம்,போரூர்,மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள்,பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது.”
தெருவில் இறங்கிப் போராடினால் போலீசை வைத்து அடி உதை மிரட்டல்…. சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை சொந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத்திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத்தேவையில்லை என்று பதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஒரு அமைச்சரோ அந்த அமைதியான மக்களை சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த புதிதில் வாரவாரம் பத்திரிகையாளரை சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும் யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும் கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது.  இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னைக் குப்பை நகரமாக இருப்பது வரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்கு புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்கு பிரச்சினையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
தன் குடிமக்களுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில்   தன் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்கு தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா?  இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துகொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.
இப்படி தன்னைத்தானே ஒரு இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்கு சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்கு சொல்லவேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தன்னைத்தானே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேவை.
கடந்த ஆண்டில் பல முறை முதல்வருக்கு பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் முதுகெலும்புள்ள எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டி பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.
கல்கி 5.1.2013

>>>மன்னிக்க வேண்டுகிறேன்… - ஓ பக்கங்கள்-ஞாநி

அன்புள்ள…..
உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.
டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.  உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.
உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.
உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.
மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.
படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.
படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.
அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.
உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.
உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.
நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.
பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.
குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.
இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….
படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.
இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.
மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.
அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.
இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.
அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.
அன்புடன்
ஞாநி
சக இந்தியர்கள் சார்பாக.
குமுதம் 26.12.2012

>>>காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ! - ஓ பக்கங்கள்-ஞாநி

தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் தலித்தல்லாத சாதியினரால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு காதல் காரணமா இல்லையா என்ற ஆராய்ச்சி அரசியல் களத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரே அம்சம், நடந்தது வன்முறையா இல்லையா என்ற அபத்தமான தலைப்பு மட்டும்தான்.
தலித் இளைஞனும் வன்னியப் பென்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும் அதில் விரக்தியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதாலும்தான் இந்த தாக்குதல் நடந்தது என்று நானும் கருதவில்லை.தாக்குதல் நடத்துவதற்கான மனநிலை ஏற்கனவே கனன்றுகொண்டிருந்தது. அதற்கு ஒரு சாக்காக இந்த காதல் திருமணம் அமைந்தது என்றே தோன்றுகிறது.  இது இல்லாவிட்டால், இன்னொரு சாக்கு கிடைத்திருக்கக்கூடும்.
காதல் திருமணம்தான் உண்மையான பிரச்சினை என்றால், நடந்த வன்முறையில் காதலர்கள் தாககப்படவில்லை. அவ்வளவு ஏன், எந்த வீட்டிலும் எந்த நபரும் தாக்கப்படவில்லை. தாக்கிய கும்பல்கள் வீடுகளிலிருந்து ஆட்களை விரட்டிவிட்டு, வீடுகளையே தாககி அழித்திருக்கிறார்கள் தங்களை விட மோசமான நிலையில் இருந்த தலித்துகளின் குடும்பங்களிலிருந்து பலர் படித்து வேலை வாய்ப்புகளை அடைந்து நகரங்களில் குடியேறி பொருள் சம்பாதித்து, கிராமத்தில் இருக்கும் குடும்பத்தின் நிலையை மேம்படுத்தி, தங்களை விட வசதியாக தங்கள் கண்ணெதிரே வாழ்வது பற்றிய பொறாமையும் எரிச்சலுமே தாக்குதலின் பின்னால் இருப்பதாகவே தெரிகிறது. அந்தப் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் பின்னால் இருப்பது சுயசாதிப் பெருமையும் சாதிவெறியும்தான். பொருளாதாரத்தில் முன்னேறி சமூக அந்தஸ்தில் அடுத்த படிக்குச் சென்றால் தங்கள் சாதி மேலாண்மை பாதிக்க்ப்படும் என்ற கவலையில் தலித்துகளின் செல்வத்தை, வளத்தை அழித்திருப்பதாகவே தெரிகிறது.
நடந்த தாக்குதல் காதல் திருமணப் பிரச்சினையால் நடக்கவில்லை என்று வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சாதியினர் சொன்னபோதும், இந்த தாக்குதலையொட்டி, சமூக அரசியல் களத்தில், இன்று காதல் திருமணம் என்பது விவாதத்துக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இது இப்படி விவாதத்துக்கு உட்படுவது எனக்கு நல்லதாகவே படுகிறது. எது காதல், எப்படி காதலிப்பது, எப்போது காதலிக்கலாம், எந்தக் காதலை ஏற்கலாம், நிராகரிக்கலாம் என்றெல்லாம் அரசியல் தலைவர்களே பேசவேண்டிய கட்டாயம் வந்திருப்பது நல்லது.
மாற்று சாதிப் பெண்களை மயக்கி தங்களைக் காதலிக்க வைத்து பின்னர் ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் தலித் இளைஞர்கள் ஈடுபடுவதாக டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாகவே புகார் சொல்கிறார்.  திட்டமிட்டு ஒரு பெண்ணை மயக்கிக் கவிழ்த்து பணம் பறிக்கும் கயமையுடையவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுவது மறு சாதிப் பெண்ணை மட்டும் அல்ல, தன் சுய சாதிப் பெண்ணையும்தான். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சிக்கியவர்களைப் பற்றி ஏராளமான செய்திகளை காலம் காலமாகப் படித்து வருகிறோம்.அவர்களை அம்பலப்படுத்தி வழக்கமான கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கமாட்டார்கள். அப்படி பெண்ணை ஏமாற்றுவோர் இந்தக் குறிப்பிட்ட சாதியில்தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுதான் சாதிவெறி. இந்த சாதியினரெல்லாம் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று சில சாதிகளை ஆங்கில ஆட்சியில் வரையறுத்தது போல, இந்த சாதியினர் போலிக் காதலர்கள் என்று புதிய  வரையறையை ராமதாசும அவருடன் அணி சேர்ந்திருக்கும் இதர சாதித்தலைவர்களும் உருவாக்குகிறார்கள்.
ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டுப் பெண்களை மயக்கிவிடுகிறார்கள் என்று ராமதாஸ் சொல்கிறார். காதல் இவ்வளவு ஈசியானதென்று எனக்குத்தெரியாமல் போய்விட்டது. நானும் வயசுக் காலத்தில் ஜீன்ஸ் போட்டுத் திரிந்திருக்கிறேன். அதைப் பார்த்து ஒருத்தியும் என்னைக் காதலிககவில்லை. கூலிங் கிளாஸ் போடமுடியாமல் திக் கண்ணாடி போட்டிருந்ததுதான் தப்போ என்னவோ ?!  இன்று ஜீன்ஸ், கூலிங் கிளாசைப் பார்த்தே மயங்கிவிடும் நிலையில் தங்கள் சாதிப் பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஏன்அப்படி என்றும்,  அதை சரி செய்ய என்ன வழி என்றும்தான் ராமதாசும் இதர சாதித் தலைவர்களும் கவலைப்படவேண்டும்.
எந்தப் புரிதலும் இல்லாமல், கண்டதும் காதல் என்று வெறும் பாலியல் கவர்ச்சியைக் காதல் என்று இன்று பல யுவன்களும் யுவதிகளும்  குழப்பிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ராமதாஸ் சொல்வது போல தலித் இளைஞர்கள் மத்தியில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காதலைப் பற்றிய சரியான புரிதலே இல்லாத  விடலைத்தனம் இருக்கிறது.
காதல் பற்றிய அந்த விடலைத்தனத்துக்கு உரம் போட்டு நீர் ஊற்றி வளர்ப்பது யாரென்று அடையாளம் காணவேண்டும். அது சினிமாதான். ”அறியாத வயசு. புரியாத மனசு . ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம்” என்று ‘காதலை’ கிண்டர்கார்டனுக்கே கொண்டு போனது தமிழ் சினிமாதான். அது காட்டி வருவது காதலே அல்ல. காமப் பசியைத் தான் காதல் என்று சித்திரித்துக் கொண்டிருக்கிறது. விடலை மனங்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்திருக்கும் ஈவ் டீசிங் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளிக் கூடத்துக்கு படிக்கப் போகும் மாணவியின் சைக்கிளை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு என்னை லவ் பண்ணாதான் விடுவேன் என்று மிரட்டும் பொறுக்கியை தமிழ் சினிமா ஹீரோவாகக் காட்டுகிறது சினிமாவில் அந்தப் பெண் ஏழெட்டு முறை மிரட்டலுக்குப் பின் அந்தக் ‘காதலை’ ஏற்றுக் கொண்டு விடுவாள். வாழ்க்கையில் என்ன நடக்கும்? ஒரே சாதிக்காரராயிருந்தால், முதல்முறை டீசிங்குக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஸ்கூலுக்குப் போகாதே என்று நிறுத்திவிடுவார்கள் .எதிரெதிர் சாதியானால் இது சாதிக் கலவரமாக மாறிவிடும். அடுத்த சினிமாவில் குழந்தை உழைப்பை நிறுத்தி கல்வி தரவேண்டிய அவசியம் பற்றி உபதேசிக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கும் தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை, மீடியாவால், பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டவை, விருதுகள் பெற்றவை பொறுக்கிகள், பொறுக்கித்தனம், பெண்ணை வலுக்கட்டாயமாகக் காதலிக்கவைத்தல் போன்ற அம்சங்களையே கதாநாயக அம்சங்களாக உயர்த்திப் பிடித்தவை. விதிவிலக்கான நல்ல படங்கள் மிகச் சில. பெண் உடலுக்கு ஆணும் ஆண் உடலுக்குப் பெண்ணும் ஆசைப்பட்டு ஏங்குவதும் அதை அடைய விதவிதமான வன்முறையில் ஈடுபடுவதையுமே காதல் என்று வணிகப் படங்கள் நம்மை நம்பவைத்து வருகின்றன. இவற்றின் ஒட்டு மொத்த விளைவு என்ன ? காம உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட இளைஞர்கள் தன்னை காதலிக்காத,  தனக்குக் கிடைக்காத பெண்ணை அழித்துவிடும் வெறியுடன் ஆசிட் ஊற்றும் வரை போகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள் காரைக்கால் விநோதினி. ஏழைப்பெண். படித்து வேலைக்குப் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டத்துக்கு வந்த சமயத்தில் விடலை இளைஞன் செய்த ஆசிட் தாககுதலினால் இரு கண்பார்வையையும் இழந்து அவள் உயிருக்குப் போராட,  அவளைக் காப்பாற்றத் தேவையான சிகிச்சைக்கே பல லட்சங்களையும் திரட்ட  அவளுடைய ஏழைப் பெற்றோர் கடுமையாகப் போராடிக் கொண்டிருகிறார்கள்.
இந்த விடலை வக்கிரங்களின் ஊற்றுக் கண்ணான படங்களை எடுத்தவர்கள்- பணம் போட்டவர் முதல் எழுதி இயக்கி நடித்தவர் வரை – பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்தப் படங்களால் மனம் பேதலிக்கும் விடலைகளும் பல சாதிகளிலும் இருப்பவர்கள்தான். இப்படிப்பட்ட படங்களுக்கெதிராக அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்க வேண்டுமே தவிர,  உங்க சாதிப் பையன்கதான் மோசம், எங்க சாதிப் பொண்ணுங்க அப்பாவி என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது.
சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள விடாமல் தடுக்கும் சமூகத்தில், எது காதல் என்ற குழப்பம் ஏற்படுவதே இயற்கை. தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் விடலை வயதில் அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வழியில்லாமல் வளரும் சிறுவரும் சிறுமியும் காம ஈர்ப்பை காதல் என்று மயங்குவதுதான் நடக்கும். படிப்பு, சொந்தக் காலில் நிற்பதற்கான வேலைவாய்ப்பு, சம்பளம் இவற்றையெல்லாம் இருவரும் அடைந்தபின்னர்தான் நாம் சேர்ந்து நமக்கான குடும்பத்தை உருவாக்கமுடியும், ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பரஸ்பர மதிப்பும் அன்பும் நம்மிடையே இருக்கிறதா என்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் உருவாகும் எந்தக் காதலும் உடல்களைத் தாண்டி நீடிக்காது.
நம் சமூகப் பிணிகளில் ஒன்றான சாதியை ஒழிக்க காதல் திருமணங்கள் நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சாதி கடந்த திருமணங்கள் எளிதானவை அல்ல.  பாரதி தன் சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். அது பாரதியின் லட்சியங்களில் ஒன்று. ஆனால் பாரதிக்கு அடுத்த தலைமுறையான புதுமைப்பித்தன் காலத்திலும் சாதி கடந்த கலப்பு மணம் எளிதாகிவிடவில்லை. பாரதியின் லட்சியத்தை புதுமைப்பித்தன் பகடி செய்து ஒரு கதையே எழுதியிருக்கிறார்.  கதைக்கு ஒரு முன்குறிப்பு எழுதும் புதுமைப்பித்தன்,  “கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை” என்று ஆரம்பிக்கிறார். அவர் கதையில் மீனாட்சியால் கோபாலய்யங்காரின் சைவ உணவுமுறைக்கு மாற முடியாத கஷ்டம் சித்திரிக்கப்படுகிறது. புதுமைப்பித்தன் சொல்லும் தீர்வு தம்பதிகள் மது அருந்துவதும், கோபாலய்யங்கார் அசைவ உணவுக்கு மாறுவதும்தான் !.
சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் வெற்றி பெற பல அம்சங்கள்  முக்கியமானவை. உணவுப் பழக்கத்தில் அவரவர் விருப்பத்தை மற்றவர் மதிக்கும் அம்சம் அதில் ஒன்று. சாதி மதம் சார்ந்த குடும்பப் பழக்க வழக்கங்கள் அடுத்தவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் இனிமைக்கு சாதியோ மதமோ பிரதானமானதல்லல /தேவையில்லை என்ற அறிவுடன் இருப்பது முக்கியம். இருபக்க உறவினர்களும் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படாமல் சுயமாக சிந்திக்கவும் அதன்படி செயல்படுவதற்குமான ஆற்றல் தேவை. இதையெல்லாம் அவர்களுக்கு எது தரும் ? சுயசார்பு இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும்.இருவருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அன்பும் மதிப்பும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல் விடலை வயதில் எப்படி சாத்தியம் ? அதுவும் காதல் என்றால் காமம் என்றே நமபவைக்கும் சினிமா சூழலில் ? ஒரு சிறுவனும் சிறுமியும் பேசினாலே   கற்பு பறிபோய்விடும் என்று அஞ்சும் சமூக சூழலில் ?  தன் உடலைத் தானே புரிந்து வசப்படுத்த இயலாத வாழ்க்கை முறையில் ?  இந்தச் சூழலை  மாற்றினால்தான் மெய்யான காதல் தழைக்க முடியும். மெய்யான காதலே சாதி மதங்களைக் கடக்கும் வல்லமையுடையது. அப்படிப்பட்ட காதலர்களை எந்த வயதில் பார்த்தாலும் நம் மனதிலும் காதல் ஊறும் என்பது என் அனுபவம். என் கண்ணெதிரே நான் பார்த்தவர்கள் பாப்பாவும் உமாநாத்தும். கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் !
இந்த வருடத்துப் பொய்:
புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.சமாதியில் வைக்கப்பட்டிருக்கும் வடிவம் இரட்டை இலை சின்னத்தின் வடிவம் அல்ல என்று உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருப்பதுதான் இந்த வருடத்தின் மிகப் பெரிய பொய் ஆக இருக்க முடியும். அது வெற்றியின் சின்னமாம். கிண்டர்கார்டன் குழந்தை கூட அதைப் பார்த்ததும் அது இரட்டை இலை என்று சொல்லிவிடும். அப்படி சொல்லும் குழந்தையை குண்டர் சட்டத்தில் கைது செய்தாலும் இப்படிப்பட்ட் வழக்கறிஞர்கள் நியாயப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதே ரீதியில் போனால், டாஸ்மாக்கில் விற்கப்படுவது மதுவே அல்ல என்றும் அது உற்சாக பானம் என்றும் அரசு தரப்பில் வாதாடும் நிலைக்குப் போய்விடக் கூடும். ஆட்சியாளர்கள் விரும்புவதற்கேற்ப சட்ட வியாக்கியானங்களை படித்தவ்ர்கள் செய்யும் அவலத்தைத்தான் பாரதி ’பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று சொன்னான்.
 இந்த வருட அதிர்ச்சி
 கழிப்பறை இல்லாத வீடு
புத்தம் புதிதாகக் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் வீடு கட்டுகிறவர் அந்த வீட்டில் கழிப்பறையே வைத்துக் கட்டாமல் அதில் குடியேறினால், அவரை அதிபுத்திசாலி என்போமா? படுமுட்டாள் என்போமா?
இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அதைத்தான் செய்திருக்கிறது. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து கட்டியிருக்கும் அணு உலையில் வரப் போகும் அணுக்கழிவுகளை எங்கே வைப்பதென்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்று நீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அணுக்கழிவுகளுக்கான ஏற்பாடு என்ன என்ன என்று திரும்பத் திரும்ப   எதிர்ப்பாளர்களும் நீதிபதிகளும் கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. கைவிடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப்போவதாக முதலில் செய்தி வந்தது. கோலார் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று அரசு மறுத்தது. அப்படியானால் எங்கேதான் அணுக் கழிவை வைக்கப் போகிறீர்கள் என்று நீதிமன்றம் கடைசியாகக் கேட்டதும் இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை என்று அரசு பதில் சொல்கிறது. அடுத்து தற்போது அணுஉலை கழிவுகளில் 3 சதவீதம் 7 ஆண்டுகளுக்கு கூடன்குளத்திலேயே வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, 7 ஆண்டுகளுக்கு பின்னர் அணு கழிவுகளை எங்கே எடுத்து செல்வீர்கள்? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆபத்தான அணுக் கழிவுகளை எங்கே எப்படி வைப்பது என்றே முடிவெடுக்காமல் உலையைக் கட்டி முடித்து இயக்குவதற்கு அவசரப்படும் மன்மோகன் அரசையும் அதன் அணுசக்தித் துறையையும் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பல முறை எதிர்ப்பாளர்கள் இது பற்றிக் கேள்வி கேட்டபோதெல்லாம், ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொன்னதெல்லாம் பொய் என்று இப்போது தெளிவாகிவிட்டது.  மன்மோகன் அரசு பொய் சொன்னது மட்டுமல்ல, கேள்விகள் கேட்டு அமைதியான வழியில் போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை ஜெயலலிதா அரசு போட்டிருக்கிறது. பத்தடி நடப்பதற்கே தள்ளாடக் கூடிய முதியவரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. அணுக் கழிவை என்ன செய்வது என்று முடிவெடுக்காமலே ஆபத்தான திட்டத்தை மக்கள் மீது திணிக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மீதெல்லாமல்லவா குண்டர் சட்டம் நியாயப்படி பாயவேண்டும் ?
கூடங்குளம் அணுக்கழிவை எங்கே வைப்பதென்று இன்னும் தெரியாமலிருக்கும் அரசு, இதுவரை கல்பாக்கத்திலும் இதர அணு உலைகளிலும் உருவாக்கிய அணுக்கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறது என்ற உண்மைகளை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த வாரக் கேள்வி:
ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதை எதற்காக அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும் ? அடுத்து சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள துப்புரவாளர்களை நியமித்தால் அத்ற்கொரு விழா கொண்டாடுமா ? கடும் மின் பற்றாக்குறை இருக்கும் நிலையில் எதற்காக இந்த விழாக்கள்- வீண் செலவுகள் ?
கல்கி 22.12.2012

,>>>ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் - - -ஞாநி.....

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது நானும் சில நண்பரகளும் சம கருத்துள்ளவர்களுமாக சேர்ந்து ஓ போடு என்ற பிரசார இயக்கத்தை நடத்தினோம். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேர்தலில் ஒரு வாக்காளர் என்ன செய்யலாம் என்பதற்கு நமது சட்டம் அளித்துள்ள வழிமுறைதான் 49 ஓ பிரிவு. இன்றும் அர்த்தமுள்ள முழக்கம் ஓ போடு என்பதாகும். அப்போது வெளியிட்ட பிரசுரத்திலிருந்து இதோ:
ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.
ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.
ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். “எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை,” என்று சொல்லுகிறார்கள்.
அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
அதுதான் 49 ஓ.
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.
ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது ‘இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது’ என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி – 49 ஓ.
ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.
ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
ஓ’ போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.
3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.
4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஓ’ போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.
இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

>>>கல்வியாளர்களுக்கு இரண்டு ப/பாடங்கள்…. ஓ பக்கங்கள் - ஞாநி...

இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்.
ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமீர் கான், ஷாருக் கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்த படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமீர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.
தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இங்கே மல்ட்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரைக் கொட்டகைகள் இன்னும் பரவவில்லை. எனவே அவற்றை மட்டும் நம்பிப் படம் எடுப்பது இயலாது. வெகுஜன அளவில் வித்யாசமான முயற்சிகளை செய்ய முற்படும்போது, வணிகம் சார்ந்த ரசனைக்கும், படத்தின் கருத்து சார்ந்த அழகியலுக்கும் சமரசம் செய்யவேண்டிய சிக்கல் ஏற்படுகிறது. இந்த சமரசத்தைத் தயாரிப்பாளருக்குப் புரியவைத்து படம் எடுக்கச் செய்ய இயக்குநர் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். அப்படி எடுத்த படத்தை பார்வையாளர்களில் எல்லா பிரிவினரும் ஆதரித்தால்தான் வசூலில் தப்பிக்கும் என்ற சிக்கலை சந்தித்தாகவேண்டும். மிக முக்கியமாக இங்கே ஆமீர்கான், ஷாருக் கான்களுக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
இந்தப் பின்னணியில்தான் அண்மையில் வந்த சாட்டை பட முயற்சியை நான் முக்கியமான முயற்சியாகப் பார்க்கிறேன். சமூகத்தின் எரியும் பிரச்சினைகளை படத்தின் கருவாக எடுத்துக் கொள்ள எப்போதுமே தமிழ் சினிமா மிக மிகத் தயங்கும். தண்ணீர் தண்ணீர் மூலம் மறைந்த கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் கொஞ்சம் முயற்சி செய்ததை பாலசந்தர் படமாக்கினார். அதன்பின்னர் அப்படிப்பட்ட படங்கள் கூட அபூர்வமாகிவிட்டன. அண்மையில் அப்படிப்பட்ட முயற்சிகளாக வந்த படங்களில் அங்காடித்தெரு, வாகை சூடவா வரிசையில் சாட்டையை வைக்கலாம்.
சாட்டை இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்பது அது எடுத்துக் கொண்ட பொருளில்தான். பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் என்பான் பாரதி. அவனுடைய மேற்கோளோடே தன் படத்தைத் தொடங்கும் இயக்குநர் அன்பழகன் முதல் படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தை தயாரிக்க முன்வந்த இயக்குநர் பிரபு சாலமன் தன் இயக்குநர் மீது வைத்த நம்பிக்கையும் கொடுத்த ஆதரவுமே இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் செய்யாமல், அந்த மானவர்களின் எதிர்காலத்தையே வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறப்பதில்லை. அந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடமாற்றல் கோரிக்கைகளுக்கும் குரல் எழுப்பும் சங்கங்கள் , அவர்கள் தன் அடிப்படைக் கடமைகளையே செய்யாமல் திரிவதை சரி செய்ய முயற்சிப்பதே இல்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முன்வருவதே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் ஓட்டு பற்றிய பயம்தான். எதிர்காலமே பாழாக்கப்படும் ஏழை மாணவர்களின் குடும்ப ஓட்டுகளை, இலவசங்கள் மூலம் கைப்பற்றிக் கொள்ளலாம்.ஆனால் ஆசிரியர்கள் மீது கை வைத்தால் சிக்கல். ஓட்டுக்கும் ஆபத்து.தேர்தல் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்ற பயம் அரசியல்வாதிகளை ஆட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்பழகனின் சாட்டை வீசப்பட்டிருக்கிறது. குட்டிச் சுவராக இருக்கிற ஓர் அரசுப் பள்ளியை , மனசாட்சியும் கடமை உணர்ச்சியும், சிறுவர்கள் மீது அன்பும் உடைய ஒரு நல்லாசிரியர் எப்படி மாற்றி அமைக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முற்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது அந்த பாத்திரத்தை நடித்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி. கூடவே வெவ்வேறு ஆசிரியர் பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நடிகரும், மாணவர்களாக நடித்த ஒவ்வொரு இளம் நடிகரும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும், கலை இயக்குநரும் கச்சிதமாகத் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். ( இது பட விமர்சனம் அல்ல என்பதால் நான் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் இங்கே எழுதவில்லை.)
படத்தில் சின்னச் சின்னதாகப் பல குறைகள் இருக்கின்றன – பள்ளியின் மொத்த ஆசிரியர்களும் பொறுப்பற்றவர்கள் என்ற மிகை உட்பட. ஆசிரியர்களின் தவறுகளை சொல்லும் படம் அடுத்த நிலையில் அதற்குப் பொறுப்பான கல்வித்துறை, அரசு பற்றி சொல்லவில்லை என்பது ஒரு குறை. வெகுஜன பார்வையாளருக்காக வைத்திருக்கும் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாம் இந்தக் கதைக்கு ஒட்டாமல் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளை நம்பி இன்னமும் வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலை அசலாக இருப்பதை விட சற்றே மேலாக இந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பது ஒரு குறை. இந்தக் குறைகளை மீறிப் படம் எடுத்துக் கொண்ட செய்தியை உரக்க அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கிறது என்பதுதான் முக்கியம்.
இன்று ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வளர் இளம் பருவத்தினரிடையே சினிமாக்களின் தாக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொய்யான காதல் உணர்ச்சி. இயக்குநர் அன்பழகன் அதை இந்தப் படத்தில் சுட்டிக் காட்டி விவாதித்திருக்கிறார். மோதல், சண்டை, ஒருதலைக் காதல், வீட்டார் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு இளம் டீன் ஏஜ் ஜோடியை சேர்த்து வைக்கும் வழக்கமான தமிழ் சினிமா களவாணித்தனத்தை செய்யாமல், படிக்கும் வயதில் படிப்புதான் முக்கியம் என்பதை மாணவர்கள் உணரும் விதத்தில் அன்பழகன் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தை தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் பார்க்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பார்க்க வேண்டும். இதில் காட்டியிருப்பதில் அது தவறு, இது இப்படியில்லை, இது கற்பனை என்றெல்லாம் சொல்லித் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, இந்தப் படம் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை, அவற்றுக்கு முன்வைக்கும் தீர்வுகளை திறந்த மனதுடன் விவாதிக்க முன்வரவேண்டும். ஏனென்றால் இந்தப் படம் முன்வைக்கும் பிரச்சினை, கற்பனை அல்ல. அசலானது. லட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.
சாட்டை படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிடப்படும் பிரச்சினையே ஹிந்தியில் ஒரு முழுப்படமாக வந்திருக்கிறது. அதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ். இது சாட்டை முயற்சியிலிருந்து வேறுபட்டது. மல்ட்டிப்ளெக்ஸ் பார்வையாளர்களை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதே இந்தப் படத்துக்கான பெரிய பப்ளிசிட்டி.
இந்தப் படமும் இயக்குநருக்கு முதல் படம்தான். இயக்குநர் கௌரி விளம்பரப் படங்கள் எடுத்துவந்தவர். அவர் கணவரான தமிழர் பால்கியும் விளம்பரப் பட இயக்குநர். இதற்கு முன் பால்கி எடுத்த இரு படங்களிலும் கௌரியும் பணியாற்றினார். அந்தப் படங்களும் வித்யாசமான கருப் பொருள் உடையவை. சீனி கம், முதிர் வயதில் காதல்வசப்படுவது பற்றியது. அடுத்த படம் ‘பா’ சிறு வயதிலேயே வயது ஏறாமலே உடல் மட்டும் முதுமையாகிவிடும் அபூர்வமான நோயால் தாக்கப்பட்ட சிறுவனைப் பற்றியது. இரண்டிலும் அமிதாப் பச்சன்தான் ஹீரோ. பாதிக்கப்பட்ட சிறுவனாக அமிதாப் அற்புதமாக நடித்திருந்தபோதும் அவருக்கு அதற்காக சிறந்த நடிகர் விருது தரப்பட்டது வட இந்திய அரசியல் என்றும் மம்மூட்டிக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும் என்றும் கேரளத்தில் குரல்கள் எழுந்தன.
கௌரி எடுத்திருக்கும் படத்திலும் அமிதாப் நட்புக்காக இரண்டு சீனில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் அந்த ரோலில் அஜீத். ( நியாயமாக ரஜினி நடிக்க முன்வந்திருக்க வேண்டும்.)
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மேல்தட்டு குடும்பத்தில் ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவி சசியைப் பற்றியது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அவள் மகளே அவமானமாகக் கருதுகிறாள். அம்மா சுவையான லட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்று கணிசமாக பணம் சம்பாதிக்கும் பெருமையை விட அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் மேட்டுக் குடி குடும்பத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
ஒரு முக்கியமான உறவினர் திருமணத்தில் உதவுவதற்காக முன்கூட்டியே சசி தனியாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே சசி நான்கு வாரங்களில் ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் வகுப்பில் ரகசியமாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு திருமண விழாவில் ஆங்கிலத்தில் பேசி தன் கணவன், உறவினர்கள் எல்லாரையும் அதிரவைப்பதுதான் முடிவு.
ஸ்ரீதேவியின் திறமையை ஹிந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் பெருமளவில் வீணடித்திருக்கின்றன என்பதை இந்தப் படம் அதைப் பயன்படுத்தியதன் மூலம் இன்னொரு முறை பளிச்சென்று சொல்ல்யிருக்கிறது. எவ்வளவு நல்ல பாத்திரங்களையெல்லாம் ஸ்ரீதேவிக்கு அவர் இளமையாக இருந்தபோதே கொடுத்திருக்கலாம் என்ற ஏக்கம்தான் வருகிறது. பால்கி தயாரிப்புகள் அனைத்திலும் இருக்கும் செய் நேர்த்தி இந்தப் படத்திற்கும் ஒரு பலம்.
இயக்குநர் கௌரி இந்தப் படத்தில் இரண்டு நுட்பமான விஷயங்களை அலசியிருக்கிறார். மேல்தட்டுக் குடும்பங்களில் ஆங்கில மோகம் எந்த அளவு ஊறியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலம் அறியாத ஒரு பெண்ணின் இதர திறமைகள் என்னவாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவை மதிக்கப்படாததைப் பேசுகிறார். ஒரு பெண்ணுக்கு அன்பு மட்டுமல்ல, மரியாதையும் தரப்படவேண்டும் என்பதே செய்தி.
நம் சமூகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை என்ன என்பதை நாம் விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதவேண்டும். படத்தை எடுத்தவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்த மேட்டுக்குடி பார்வையாளர்களுக்காக இதை எடுத்திருப்பது ஒரு கிண்டல்தான். வெகுஜன அளவிலும் இதே போல இன்னொரு படம் எடுப்பதற்கான அவசியமும் சாத்தியமும் இருக்கிறது. மேட்டுக்குடியல்லாத சாமான்யக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனோ யுவதியோ ஆங்கிலம் தெரியாததால் படும் அல்லல்கள் இன்று நம் சமூகத்தில் நம் கவனத்துக்குரியவை. அந்தப் பற்றாக்குறை அவர்களின் இதர திறமைகள் எல்லாவற்றையும் மறைத்தும் வீணடித்தும் விடுகின்றது. இந்த நிலை எங்கிருந்து தொடங்கி எப்படி மாற்றப்படவேண்டும் என்பதும் நம் கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்களாகும்.
இரண்டு படங்கள் நம் கல்வியாளர்களுக்கான இரண்டு பாடங்களாக வந்திருக்கின்றன. இந்தப் பாடங்களைப் படிக்காமல் விட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான்.
———
உங்களுக்குத் தெரியுமா?
தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்றால் துளிக் கூடப் பதறாமல், போலீசில் புகார் செய்யாமல் இருக்கும் அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் தெரியுமா?
அப்பா பெயர்: மு.க .அழகிரி
தாத்தா பெயர்: கலைஞர் கருணாநிதி
பிள்ளையோ பிள்ளை: துரை தயாநிதி
இந்த வாரப் பூச்செண்டு
கோவில்களை விடக் கழிப்பறைகள் முக்கியம் என்று அதிரடியாக சொல்லி ஒரு முக்கியப் பிரச்சினையை விவாதத்துக்கு கொண்டு வந்ததற்காக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு இ.வா.பூ
இந்த வார வருத்தமும் ஆறுதலும்
அடுத்த சபாநாயகரைத் தேர்வு செய்யும் உரிமை ஆளும் கட்சிக்கு உண்டென்றாலும், எதிர்க் கட்சிகளுடன் ஆலோசிக்கும் ஜனநாயக மரபை முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றாமல் கட்சி விஸ்வாசி தனபாலுக்கு பதவியைக் கொடுத்துவிட்டது வருத்தம். முதல் தலித் சபாநாயகர் என்ற விஷயம் மட்டும்தான் ஒரே ஆறுதல்.
————–
கல்கி 13.10.2012
(பா படத்துக்கு அமிதாபுக்கு விருது தரப்படவில்லை என்று தவறாகக நான் கல்கியில் நான் எழுதியிருந்ததை ஃபேஸ்புக்கர் சந்தோஷ்ராஜ் சுட்டிக் காட்டியதையடுத்து அந்த வரி இங்கே திருத்தப்பட்டுள்ளது.)

>>>வரமா, சாபமா? - ஓ பக்கங்கள் - ஞாநி

செல்போன் இன்று ஏழை எளிய மக்கள் வரை பரவிவிட்டது. மிகக் குறைவான எழுத்தறிவு உடையவர்கள் கூட இன்று சகஜமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த கட்டமாக செல்போன் மூலமே இண்ட்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி வேகமாகப் பரவி வருகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் அனுபவித்திராத தகவல் தொடர்பு வசதிகள் உலகில் இந்த ஐம்பது வருடங்களாக பிரும்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பப் புரட்சி மனிதனுக்கு கிடைத்த வரமா, சாபமா என்பது அவ்வப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கல்யாணப் பத்திரிகை வைக்க வண்டி கட்டிக் கொண்டு ஒரு நாள் பயணம் செய்த மனிதர்கள் இன்று ஒரு நொடியில் ஒரு தகவலை இன்னொருவருக்கு செல்போனில் அனுப்பமுடிவது வசதிதான். அதே சமயம் செல்போன் பேசிக் கொண்டே ரயில் பாதையைக் கடப்பதால் மாதம்தோறும் நூற்றுக் கணக்கில் ரயிலில் அடிபட்டு இறக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை பயமுறுத்துகிறது.
ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் போதாது. அதை தனக்கு எதிராக தானே மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் பக்குவமும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்தப் பக்குவம், மன முதிர்ச்சி இல்லாத சமூகத்தில் அந்த தொழில்நுட்பம் நிச்சயம் சாபமாகத்தான் மாறும்.

>>>கை மேல காசு...! - ஓ பக்கங்கள் - ஞாநி

மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டியதுதான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கி குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் விதத்தில், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51  மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்த திட்டம் ? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதை தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். வெள்ள நிவாரண உதவியையும் ம் இலவச டி.வி.பெட்டியையும் கூச்சமே இல்லாமல் காரில் போய் வாங்கிக் கொண்டு வரக்கூடிய  ‘ஏழைகள்’இருக்கும் தேசம்தானே இது. ரேஷன் அட்டைகளிலும் பல போலிகள் உலவுவதும் நிஜம்தான்.

>>>ஓ பக்கங்கள் - அஞ்ச வேண்டிய அஞ்சு மேட்டர்! - ஞாநி

மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே தீவிரவாதி கசாபுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றியதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. கசாபுக்கு முன்பே மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை, காங்கிரஸ் அரசு இன்னும் தூக்கிலிடவில்லை. அதற்கும் முன்பே தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளையும் தூக்கிலிடவில்லை. கசாபை மட்டும் அவசரமாகத் தூக்கிலிட பல காரணங்கள் உள்ளன. மும்பை தாக்குதலின் நினைவு நாளையொட்டி கசாப் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியில் பலவீன நிலையில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி தன்னைப் போலவே பலவீனமாக இருக்கும் பி.ஜே.பி.யை வரும் தேர்தலுக்கு முன் மேலும் பலவீனப் படுத்தினால்தான் தனக்கு லாபம் என்று கருதுகிறது. கசாபைத் தூக்கில் போடுவதன் மூலம் பி.ஜே.பி.யை ஆதரிக்கக் கூடிய இந்துத்துவ வாக்குகளைக் கொஞ்சம் தன் பக்கம் திருப்பலாம் என்பதும் ஒரு கணக்கு. தவிர கசாபைத் தூக்கிலிடுவதால் முஸ்லிம்களின் அதிருப்தி ஏற்படும் என்ற அச்சத்துக்கும் இடமில்லை. பொதுப்புத்தியில் அனைவர் மத்தியிலுமே கசாபைத் தூக்கிலிடுவதற்கான ஆதரவு மனநிலைதான் இருக்கிறது. ஆனால் அப்சல் குருவைத் தூக்கிலிட்டால், கொஞ்சம் இந்துத்துவ வோட்டு வரும், ஆனால் முஸ்லிம் வோட்டு எதிராகத் திரும்பிவிடும். அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்ற கருத்து முஸ்லிம்கள் உட்பட பலரிடமும் இருக்கிறது. அதேபோல ராஜீவ் கொலைக் கைதிகள் விஷயத்திலும். அவர்களை இப்போது தூக்கிலிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலை தமிழ்நாட்டில் அதோகதி. அவர்களைத் தூக்கிலிட்டால், காங்கிரசை அதன் பின்னர் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தமிழகத்தில் யாரும் முன்வரமாட்டார்கள். இந்தக் கணக்கெல்லாம் போட்டுத்தான் கசாபின் தண்டனையை காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றியிருக்கிறது என்று கருதலாம். 
 

>>>ஓ பக்கங்கள் - சில நேரங்களில் சில உறுத்தல்கள்!! - ஞாநி

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி முதன்மையாக எழுத வேண்டிய அவசியம் இருந்தாலும், அதே வாரத்தில் பல விஷயங்கள் மனத்தில் உறுத்தலை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இந்த வாரம் ஒரு சில உறுத்தல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உறுத்தல் 1:

கீழ்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.

1. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக:
அ.முருங்கைத்தழை ஆ. முருங்கைக் கீரை இ. முருங்கை இலை ஈ. முருங்கை மடல்.

2. இடன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
அ. இடைப் போலி. ஆ. ஈற்றுப் போலி. இ. முதற்போலி. ஈ. வினைச்சோல்.

3. நெஞ்சாற்றுப் படை என்னும் பெருமைக்குரிய நூல் எது ?
அ. சிந்தாமணி. ஆ.சிலப்பதிகாரம். இ. குறிஞ்சிப்பாட்டு. ஈ.முல்லைப்பாட்டு.

4. செய்வினைத்தொடரைக் கண்டறிக:
அ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். ஆ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செயப்பட்டது. இ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செய்யப்படும். ஈ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்வர்.

5. ‘அவன் அவன் மொழியை உயர்த்தினால்தான் அவன் நாடு உயரும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்’ - இது எவ்வகை வாக்கியம் என்று சுட்டுக.
அ. எதிர்மறை வாக்கியம். ஆ. அயற்கூற்று வாக்கியம். இ.கலவை வாக்கியம். ஈ.வினா வாக்கியம்.

>>>ஓ பக்கங்கள் - மறுபடியும் ஒபாமா... ஞாநி


அமெரிக்க அதிபராக பாரக் ஹுசேன் ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது இங்கே இந்தியாவில் (நான் உட்பட) பலருக்கும் மகிழ்ச்சி தருவதைப் பார்க்கிறேன். ஒபாமாவால் இந்தியாவுக்கோ எனக்கு தனிப்பட்ட முறையிலோ ஏதோ பெரிய லாபம் கிடைத்துவிடும் என்பதாலா இந்த மகிழ்ச்சி? இல்லவே இல்லை.

ஒபாமாவை சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர்களிலிருந்து எழுந்து வந்து எல்லாருக்கும் சமமான நிலையை அடைந்த சாதனையின் பிரதிநிதியாக நாம் பார்ப்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். ஒரு காலத்தில் நிறவெறியும் அடிமைத்தனமும் நிரம்பி வழிந்த அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவராக முடியும் என்பதை மட்டுமல்ல, அடுத்தடுத்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று ஒபாமா காட்டியிருப்பதே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ஆனாலோ, இந்தியாவில் ஒரு இஸ்லாமியர் பிரதமரானாலோ ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்கு இது நிகரானது.

>>>ஓ பக்கங்கள் - காடுவெட்டியும் கடலூரும் - ஞாநி

 
காடுவெட்டி (அ) கூட்டணி வெட்டி ?

காடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோம் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.

குருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.

பா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்' இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.

குரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்தான்.

குடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.

வன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா? என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.

அரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.

இதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான்.

தி.மு.க., அதி.மு.க. மட்டுமல்ல.... தமிழகத்தின் எல்லா பிரதான கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற ஞானோதயத்துக்கு இப்போது நான் வந்துவிட்டேன்.

இதிலிருந்து விடுதலையும் விமோசனமும் இன்று பிறந்திருக்கும், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் காலத்தில்தான் சாத்தியம்.

கடலூர் சொல்லும் செய்திகள்..

வருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.

இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.

தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று......... எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.

ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.

என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட.... மன்னிக்கவும் மயிலாட' நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.

கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.

முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?

செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?

செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?

செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.

செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்' என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.
ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த வாரப் பூச்செண்டு

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு மாதக்கசிவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நேப்கின்களை இலவசமாக அளிக்க முடிவு செய்ததற்காக, சென்னை மாநகராட்சிக்கு இ.வா.பூ. இந்த நேப்கின் சப்ளையை பெரும் நிறுவனங்களிடம் தராமல், அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்தால் இன்னொரு பூச்செண்டும் தருவேன்.

இந்த வாரக் குட்டு

எனக்கே. குறைந்தது ஐந்து வாரமாவது தி.மு.க, கலைஞர் தொடர்பான எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என்று கொண்டிருந்த விரதத்தை முறித்ததற்காக இ.வா.குட்டு.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...