கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஓ பக்கங்கள் - மறுபடியும் ஒபாமா... ஞாநி


அமெரிக்க அதிபராக பாரக் ஹுசேன் ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது இங்கே இந்தியாவில் (நான் உட்பட) பலருக்கும் மகிழ்ச்சி தருவதைப் பார்க்கிறேன். ஒபாமாவால் இந்தியாவுக்கோ எனக்கு தனிப்பட்ட முறையிலோ ஏதோ பெரிய லாபம் கிடைத்துவிடும் என்பதாலா இந்த மகிழ்ச்சி? இல்லவே இல்லை.

ஒபாமாவை சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர்களிலிருந்து எழுந்து வந்து எல்லாருக்கும் சமமான நிலையை அடைந்த சாதனையின் பிரதிநிதியாக நாம் பார்ப்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். ஒரு காலத்தில் நிறவெறியும் அடிமைத்தனமும் நிரம்பி வழிந்த அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவராக முடியும் என்பதை மட்டுமல்ல, அடுத்தடுத்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று ஒபாமா காட்டியிருப்பதே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ஆனாலோ, இந்தியாவில் ஒரு இஸ்லாமியர் பிரதமரானாலோ ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்கு இது நிகரானது.
ஒபாமாவின் இரண்டாம் முறை தேர்தல் வெற்றியில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்த முறை அவர் கறுப்பினத்தவர் என்ற அம்சம் முதல் முறை இருந்தது போல முக்கியத்துவம் பெறவே இல்லை. முதல்முறையும் கணிசமான வெள்ளையர் ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார் என்றாலும், அவர் கறுப்பினத்தவர் என்பதற்கு அப்போது இருந்த அழுத்தம் இப்போது இல்லை. இந்த முறை எல்லா அழுத்தமும், அவரது கொள்கைகள், செயல்பாடுகள், எதிர் வேட்பாளர் முன்வைத்த மாற்றுகள் ஆகியவை சார்ந்தே இருந்தன.

ஒபாமாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று எதிர் வேட்பாளரான குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னிக்கு பெரும் பணக்காரர்கள் நலனில் மட்டுமே அக்கறை காட்டக்கூடியவர் என்ற இமேஜ் ஏற்பட்டதாகும். ரோம்னி வந்தால் பணக்காரர்களுக்கு வரி குறையும்; சலுகைகள் அதிகரிக்கும். ஏழை, நடுத்தர மக்களுக்கு மருத்துவச் செலவு, கல்வி, உணவு போன்றவை எல்லாம் விலை உயர்ந்துவிடும் என்ற பயம் பரவலாக இருந்தது. ஒபாமாவுக்குச் சாதகமாக இருந்த இன்னொரு அம்சம், தீவிர வாதத் தலைவர் பின்லேடனை ஒபாமா ஆட்சியில்தான் கொல்ல முடிந்தது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதம் பற்றி அமெரிக்கர்கள் மனத்தில் உருவான பெரும் பயம், பின்லேடன் சாவில்தான் தணிந்தது என்று சொல்லலாம். இராக், ஆப்கனிஸ்தான் முதலிய வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளை மெல்ல மெல்ல திரும்பப் பெற ஒபாமா உத்தரவிட்டிருப்பது இன்னொரு சாதகமான அம்சம். கட்டாய ராணுவச் சேவை இருக்கும் அமெரிக்கச் சமூகத்தில், தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் சடலப் பெட்டிகள் வீட்டுக்கு வந்து இறங்குவது என்பது சராசரி அமெரிக்கக் குடும்பத்தின் மிக மோசமான கெட்ட கனவுகளில் ஒன்று.

தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் கிழக்குக் கடற்கரை மாகாணங்களில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய சாண்டி புயல், ஒபாமாவுக்குச் சாதகமாக அமைந்தது. ஒபாமா அரசின் துயர் துடைப்பு நடவடிக்கைகள் எதிர்க்கட்சி பிரமுகர்களும் பகிரங்கமாகவே பாராட்டும் அளவில் அமைந்தது இந்தப் பகுதி வாக்காளர்களின் பெரும் ஆதரவை ஒபாமாவுக்குத் திரட்டியது.

ஒபாமா மறுபடியும் ஜெயிப்பாரா என்ற கேள்விக்குறிக்குக் காரணம், அவர் சென்ற முறை ஜெயித்தபோது எழுந்த பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகள்தான். புஷ் ஆட்சியில் ஏற்பட்ட படு மோசமான பொருளாதார சரிவிலிருந்து நாட்டை முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவர்தான் மீட்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அப்போது மிக அதிகமாக இருந்தது. எதையும் ஒரே இரவில் மாற்றிவிட முடியாது என்று ஒபாமா சொல்லிக் கொண்டிருந்தபோதும் அமெரிக்க மக்களுக்கு ஒரு மாஜிக் தீர்வு தேவைப்பட்டது. நான்காண்டுகளில் அது சாத்தியமில்லை என்பது புரிந்துவிட்டது. ஒபாமா எடுத்த நடவடிக்கைகள் அடியோடு நிலையை மாற்றாவிட்டாலும், சரிவிலிருந்து மெல்ல மீள முடிந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்தார்கள். ரோம்னியிடம் இதைவிட சிறப்பான மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

ஜெயித்த பின்னரும் ஒபாமாவுக்கு அடுத்த நான்காண்டுகளில் பெரும் சோதனைகள் காத்திருக்கின்றன. புஷ் ஆட்சியில் அறிவித்த வரிச் சலுகைகள் முடியும் தேதி வருகிறது. அரசின் செலவுகளில் வெட்டுகள் செய்யவேண்டிய கெடுவும் அடுத்த ஆண்டில் வருகிறது. இவற்றால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஒபாமாவுக்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு பலமாக தேவை. ஏனென்றால் சுமார் 30 மாநிலங்களின் (முதலமைச்சர்களான) கவர்னர் பதவிகள் எதிர்க்கட்சி வசம் இருக்கின்றன. அது தவிர செனட்டில் மட்டும் தான் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையில் இருக்கிறது. ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்வில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மை. எனவே அவர்களின் ஆதரவு இல்லாமல் எதையும் ஒபாமா நிறைவேற்ற முடியாது. அதனால்தான் ஜெயித்த உடனே ஒபாமா, தொடர்ந்து ரோம்னியுடன் பேசப் போவதாகவும் அமெரிக்காவை முன்னேற்ற, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எல்லாரும் சேர்ந்து வேலை செய்யவேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்.

ஒபாமாவின் வெற்றி அமெரிக்காவுக்கு நல்லது. ஆனால் உலகத்துக்கு? நமக்கு?

உலகத்தைப் பொறுத்தமட்டில் கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவின் ஆட்சி எங்கேயும் புதிய போருக்கான ஆயத்தங்களில் ஈடுபடவில்லை. அண்மைக்காலத்தில் ராணுவச் செலவைக் குறைத்த முதல் குடியரசுத் தலைவர் அவர்தான். பல நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது உலகம் வரவேற்கும் செயலேயாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒபாமா ஆட்சி பற்றிய மிகப்பெரிய கவலை நம் இளைஞர்களுக்கு அமெரிக்காவிலும் இங்கே இருக்கும் அமெரிக்க நிறுவனங்களிலும் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றித்தான். கடந்த ஒபாமா ஆட்சியிலேயே வேலை பர்மிட்டுகளுக்கான விசாக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான் ஒபாமாவின் கோஷம். எனவே அமெரிக்காவில் இயங்கும் இந்திய கம்பெனிகளும் கூட அமெரிக்கர்களுக்கு அதிக வேலை தரவேண்டிய அவசியம் இருக்கிறது.

இது கவலைக்குரிய பிரச்னை என்றாலும் ரொம்பக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அடுத்த ஆறாண்டுகளில் அமெரிக்காவுக்குத் தேவைப்படும் அறிவியல் பட்டதாரிகளில் சுமார் இரண்டேகால் லட்சம் பேர் பற்றாக்குறை இருக்கிறது. இது அமெரிக்கர்களைக் கொண்டு நிரப்பவே முடியாது. இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்துதான் வரவழைத்தாக வேண்டும்.

இந்தியாவின் பழைய கவலை இப்போது இல்லை. அமெரிக்கா நம்மை விட பாகிஸ்தானையே அதிகம் ஆதரித்து வந்திருக்கிறது என்பதே இந்தக் கவலை. இப்போது பாகிஸ்தானில் தாலிபானை ஒழிப்பதற்காக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் பாகிஸ்தான் அரசை அமெரிக்காவுக்கு எதிராக நிறுத்திவிட்டன. அந்த அரசு தாலிபானுக்கும் அமெரிக்க அரசுக்குமிடையே சிக்கித் தவிக்கிறது.

ஒபாமா இனி அமெரிக்காவின் அயல் உறவுக் கொள்கையில் ஆசியா முக்கிய அச்சாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இங்கே சீனாவைத் தன் எதிரியாகத் தொடர்ந்து ஆக்கிக்கொள்ளாமல் அதே சமயம் தன் நலன்களையும் பாதுகாக்கும் விதத்தில் கையாளுவது எப்படி என்பதுதான் அமெரிக்காவின் அக்கறை. இதில் தனக்கு உதவுவதற்காகவே இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தச் சீனா சார்ந்த கொள்கைப் பார்வைதான் அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் முடிவு செய்யும்.

இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர் பிரச்னையிலும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தமிழருக்கு சாதகமாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு பல ஈழத்தமிழர்களிடையிலும் இந்தியத் தமிழர்களிடையிலும் இருக்கிறது. ஐ.நா மனித உரிமை அமைப்பில் அமெரிக்கா, இலங்கை அரசு மீது கொண்டு வந்த கண்டனத் தீர்மானமே இந்த நம்பிக்கைக்குக் காரணம்.

ஆனால் இந்த விஷயத்தில் பெரிதாக அமெரிக்காவை நம்பமுடியாது என்பதே உண்மை. கடைசிப்போரில் இலங்கைப் புலிகளை முற்றிலும் அழித்து ஒழித்ததில் இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவும்தான் இலங்கை அரசுக்கு உதவியது என்பதை மறக்க முடியாது. செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா அதுவரை புலிகளுக்கு தந்த ஆதரவை நீக்கிக்கொண்ட பின்னர்தான் புலிகள் பலவீனமானார்கள். எனவே இப்போது ஈழத்தமிழர் பிரச்னையை எப்படி இந்தியா இலங்கை - சீன உறவின் அடிப்படையில் அணுகுகிறதோ, அதே போல தொலைநோக்கில் சீனா சார்ந்தே அமெரிக்காவும் அணுகும் வாய்ப்பே அதிகம். எனவே பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை.

கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஒபாமா ஜெயித்தது நமக்குப் பொதுவாக வரவேற்கக்கூடிய ஒன்றானபோதும், ஜெயிப்பது ஒபாமா ஆனாலும் ரோம்னியானாலும், அமெரிக்காவின் சுயநலன்கள் சார்ந்தே அவர்கள் இயங்குவார்கள் என்பதுதான் வடிகட்டிய உண்மை. எல்லா காலங்களிலும் அமெரிக்க அரசுகள் அப்படித்தான் செயல்பட்டு வந்திருக்கின்றன.

இதே போல இந்தியத் தலைவர்களில் யார் ஜெயித்தாலும் இந்திய நலன்கள் சார்ந்தே இயங்குவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் நாம் இருப்பதைத்தான் நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். உண்மையில் எது இந்தியாவின் நலனுக்கானது என்ற வழிமுறைகளைக் கூடக் காரண காரியங்களுடன் தெளிவாகவும் உறுதியாகவும் நமக்குச் சொல்ல முடியாத தலைவர்களையே நாம் பெற்றிருக்கிறோம். ஒபாமாவின் வெற்றியையொட்டி இதை நாம் சிந்திக்கத் தொடங்குவது அவசியம்.

இந்த வாரக் கோரிக்கை:

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவை நீக்கிவிட்டு இன்னும் தெளிவான வரையறுக்கப்பட்ட பிரிவை உருவாக்கவேண்டுமென்பதே இந்த வாரக் கோரிக்கை. காரணம் இப்போதுள்ள பிரிவின்கீழ் யாரோ யாருக்கோ அனுப்பிய ஒரு எஸ்.எம்.எஸ் அல்லது ட்விட் அவதூறானது என்று சொல்லி யாரையும் கைது செய்து 3 வருட சிறை தண்டனை வாங்கிக் கொடுத்துவிடலாம்.

தொழிலதிபர் அரசியல்வாதி கார்த்தி சிதம்பரம் பற்றி புதுவையைச் சேர்ந்த ரவி சீனிவாசன் அனுப்பிய ட்விட் ‘கார்த்தி வத்ராவை விட அதிக சொத்து சேர்த்து விட்டதாக அறிகிறேன்’ என்பதாகும். இது பற்றி கார்த்தி கொடுத்த இ - மெயில் புகாருக்கே ரவி கைது செய்யப்பட்டார். ரவியின் டிவிட்டுகளை மொத்தம் 16 பேர் மட்டுமே பார்க்க முடியும். அதில் 5 பேர் அவரது உறவினர்கள். இந்தியன் பீனல்கோடில் அவதூறு தொடர்பாக இருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு நிகரான புதிய பிரிவுகளையே தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும் வைக்க வேண்டும். இப்போது இருக்கும் 66 ஏ ஆபத்தானது. முறைகேடாக பயன்படுத்தக்கூடியது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes

அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...