"குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை
பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற
நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு
குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாசார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.
வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர். பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.
அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:
குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.
காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தொலைக்காட்சி சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.