கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கற்றது ஒழுகு! - சுகி.சிவம்

''தாத்தா, திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்பிக்கிறேன். சரியா இருக்கான்னு பாருங்க...'' என்று தமிழ் புத்தகத்தை நீட்டினான் பாபு. ''சொல்லு'' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் தாத்தா.

''கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக''

என்று வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடகடத்தான் பாபு. ''இந்த குறளுக்கு என்ன அர்த்தம் சொல்லு?'' என்று தாத்தா இடையில் கேள்வி கேட்டதும், ''இது மனப்பாடப் பகுதி, ஒப்பிச்சா போதும்... அர்த்தம் எல்லாம் கேட்க மாட்டாங்க...'' என்று நழுவினான் பாபு.

''பாபு, எதை கற்றாலும் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சு கத்துக்கணும். அதைவிட முக்கியம், அப்படி கற்ற வழியிலே நடக்கணும். இதுதான் இந்த குறளோட அர்த்தம். இது வெறும் மதிப்பெண்கள் வாங்க மட்டுமல்ல. வாழ்க்கை முழுக்க பயன்படுற திருக்குறள்'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''இப்பதான் நான் ஒரு கதை படிச்சேன். ஏசுவின் தொண்டராய் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தெய்வீக ஊழியரான புனித பிரான்சிஸ் அசிசி என்ற பாதிரியார். அவர் ஒரு துறவியர் இல்லத்தின் தலைவர். பல துறவிகள் அந்த இல்லத்தில் தங்கி, அவரிடம் பைபிள் கல்வி கற்று தொண்டர்களாக தயாராகினார்கள்.

ஒருநாள் இரவு அந்த இல்லத்தின் வாசலில் வந்த ஓர் ஏழைப் பெண், ''பசிக்கிறது, ஏதாவது பிச்சை தாருங்கள்'' என்று அழுதாள். இரக்கம் மிகுந்த புனித பிரான்சிஸ் அசிசியார் தமது இல்லத்திலிருந்த மற்றொரு துறவியிடம், ''அந்த பெண் பசியாற ஏதாவது கொண்டு வந்து தாருங்கள்'' என்றார்.

உள்ளே போய்விட்டு வெறுங்கையுடன் திரும்பி வந்த துறவி, ''இவள் மிகுந்த பாவம் செய்திருக்க வேண்டும். இரவு உணவு முடிந்துவிட்டது. உள்ளே ஒரு சின்ன ரொட்டித் துண்டு கூட மிச்சம் இல்லை'' என்றார்.

''அப்படியானால் அவளுக்கு வேறு ஏதாவது கொடுத்து அனுப்ப முடியுமா பாருங்கள்'' என்றார் புனித பிரான்சிஸ் அசிசி.

கொஞ்சம் எரிச்சலுடன் ''வேறு எதைக் கொடுப்பது? இது துறவியர் இல்லம். இங்கு வேறு என்ன இருக்கும்? வேண்டுமானால் நீங்கள் எங்களுக்கு பாடம் சொல்லுகிற வேத புத்தகம்தான் இருக்கிறது'' என்றார் அந்த துறவி.

''ஆஹா, நல்ல யோசனை! இவள் அதை விலைக்கு விற்றால் நல்ல பணம் கிடைக்கும். பிற ஊழியர்களிடம் கருணைக்காட்டு என்று ஏசுபிரான் உபதேசித்த புத்தகத்தை தினமும் நாம் வாசித்துவிட்டு இரக்கமான செயல்கள் செய்யாமல் இருப்பதைவிட படித்ததை பின்பற்றும் முகமாக இரக்க செயல்கள் செய்வதே நலம்'' என்று வேத புத்தகத்தை அப்பெண்ணுக்கு கொடுத்துவிட்டார் அவர்.

இந்த காலம் போல புத்தகங்கள் அவ்வளவு விலை மலிவாக கிடைக்காத பழைய காலம் அது. அச்சு இயந்திரங்கள் இல்லாததால் வெகு சிரமப்பட்டு கையாலேயே எழுதப்பட்ட நூல் அது. எனவே அது நல்ல விலைக்கு வாங்கப்படும். ஆனால், அதே போன்று இன்னொன்று கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட நூலை கற்பதைவிட கற்ற வழியில் நிற்பது முக்கியம் என்ற நோக்கத்தில் புத்தகத்தை கொடுத்தார் புனித பிரான்சிஸ் அசிசி.

''பாபு, இதையே பாரதியார் புதிய ஆத்திச்சூடியில், 'கற்றது ஒழுகு'என்கிறார். புரிஞ்சுதா'' என்றார் தாத்தா.

குறள் மனப்பாடம் செய்ய மட்டுமல்ல... வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் தான் என்பது பாபுக்கு புரிந்து விட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...