>>>வரமா, சாபமா? - ஓ பக்கங்கள் - ஞாநி

செல்போன் இன்று ஏழை எளிய மக்கள் வரை பரவிவிட்டது. மிகக் குறைவான எழுத்தறிவு உடையவர்கள் கூட இன்று சகஜமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த கட்டமாக செல்போன் மூலமே இண்ட்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி வேகமாகப் பரவி வருகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் அனுபவித்திராத தகவல் தொடர்பு வசதிகள் உலகில் இந்த ஐம்பது வருடங்களாக பிரும்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பப் புரட்சி மனிதனுக்கு கிடைத்த வரமா, சாபமா என்பது அவ்வப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கல்யாணப் பத்திரிகை வைக்க வண்டி கட்டிக் கொண்டு ஒரு நாள் பயணம் செய்த மனிதர்கள் இன்று ஒரு நொடியில் ஒரு தகவலை இன்னொருவருக்கு செல்போனில் அனுப்பமுடிவது வசதிதான். அதே சமயம் செல்போன் பேசிக் கொண்டே ரயில் பாதையைக் கடப்பதால் மாதம்தோறும் நூற்றுக் கணக்கில் ரயிலில் அடிபட்டு இறக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை பயமுறுத்துகிறது.
ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் போதாது. அதை தனக்கு எதிராக தானே மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் பக்குவமும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்தப் பக்குவம், மன முதிர்ச்சி இல்லாத சமூகத்தில் அந்த தொழில்நுட்பம் நிச்சயம் சாபமாகத்தான் மாறும்.

இதைத் தடுக்க வழக்கம் போல மனித சமூகம் சட்டத்தைத்தான் பயன்படுத்துகிறது.ஒவ்வொரு புது தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப ஒரு புதிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறது. இந்த சட்டங்களும் உண்மையில் வரமா , சாபமா என்பது இன்னொரு சர்ச்சைக்குரிய பிரச்சினை.
இந்தக் கேள்வியைத்தான் அண்மையில் நடந்திருக்கும் பாடகி சின்மயி, தொழிலதிபர்-அரசியல்வாதி கார்த்தி சிதம்பரம் புகார்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பலமாக எழுப்பியிருக்கின்றன.
இருவர் புகார்களும் ட்விட்டர் உலகம் சார்ந்தவை. இணைய உலகத்தின் புதிய பிரிவான டிவிட்டர் என்பது என்ன என்று புரிந்துகொள்ள இப்படி எளிமைப்படுத்திச் சொல்லலாம். செல்போனில் மேசேஜ் அனுப்புவதைப் போல இணையத்தின் வழியே அனுப்பும் மெசேஜ்தான் ட்விட். ஒரே ஒரு முக்கியமான் வித்யாசம்- செல்போனில் நாம் அனுப்பும் மெசேஜை யாருக்கு அனுப்புகிறோமோ அவருக்கு மட்டுமே அது சென்று சேரும். ஆனால் டிவிட்டரில் நாம் அனுப்பும் ட்விட்டை விரும்பும் யார் வேண்டுமானாலும் பார்க்க வசதி உண்டு. அப்படிப் பார்ப்பவர்களை அனுமதிக்கவும் தடுக்கவும் வழிமுறை உண்டு.
சின்மயி எழுதும் டிவிட்டுகளை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து சென்று பார்க்கிறார்கள். அதில் பலர் பதில் எழுதுகிறார்கள். விவாதிக்கிறார்கள். அப்படிச் செய்பவர்களில் சிலர் சுமார் இரண்டாண்டுகளாகத் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதத்தில் பாலியல் அவதூறுகளை செய்வதாக சின்மயி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் கழித்து ஜாமீனில் வெளியே விடப்பட்டுள்ளனர்.ஒருவர் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரி ஆசிரியர் சரவணகுமார். இன்னொருவர் அரசு ஊழியர் திருப்பூர் ராஜன். சின்மயி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்ட மற்றவர்கள் யாரும் கைது செய்யப்பட்டவில்லை. தன் பெயர் சம்பந்தமே இல்லாமல் தவறாக சின்மயியால் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் சின்மயிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
சின்மயி பிரச்சினையில் இரு விஷயங்கள் தெளிவாக உள்ளன. இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோர் யார் , மீனவர் கொல்லப்படும் பிரச்சினை, சைவம்-அசைவம் பற்றியெல்லாம் ட்விட்டுகளில் சின்மயி சொல்லிய கருத்துகள் சர்ச்சைக்குரியவை; மேம்போக்கானவை. இந்த விஷயங்கள் பற்றிய ஆழமான புரிதல் இல்லாதவை என்பது முதல் விஷயம். எதிராக டிவிட்டுகள் எழுதிய பலரும் எதிர்க் கருத்து சொன்னதை விட கேலி செய்ததும் பாலியல் சார்ந்த வசவுகளை செய்ததுமே அதிகம் என்பது இரண்டாவது விஷயம்.
இந்தக் கைதுகள் தொடர்பாக இணைய உலகில் கடும் விவாதங்கள் நடந்துவருகின்றன. இதிலும் பரஸ்பர அவதூறுகள் தொடர்கின்றன. இரு தரப்பிலும் எழுதிய ட்விட்டுகள் அழிக்கப்படுகின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. இது ஒரு பிரச்சினையே இல்லை. அழித்தாலும் அவற்றை ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து காவல் துறை நினைத்தால் பெற்றுவிடமுடியும். சின்மயிக்கு எதிராக ராஜன் செய்த பாலியல் அவதூறு என்னென்ன என்று பட்டியலிடமுடியுமா என்ற கேள்வி இதில் ஒன்று. ராஜன் ஜெயலலிதா, கருணாநிதி பற்றியெல்லாம் படு ஆபாசமாக எழுதியிருக்கிறார். ஆனால் சின்மயிக்கு எதிராக அப்படி எத்தனை எழுதினார் என்பதே ராஜன் ஆதரவு தரப்பின் கேள்வி. ஒன்றே ஒன்று எழுதியிருந்தாலும் சரி, மற்றவர்களைப் பற்றி எழுதினாலும் சரி, அந்த மற்றவர்களிடமிருந்து புகார் வராவிட்டாலும், தன்னிச்சையாக காவல் துறை நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறது என்பதே எதிர் தரப்பு வாதம்.
சின்மயி சொன்ன கருத்துகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் தண்டனைக்குரியது என்றும் ஒரு புகார் காவல் துறையிடம் தரப்பட்டுள்ளது. அய்யங்கார் சாதியைச் சேர்ந்த சின்மயி தன்னை ’ஹையங்கார்’ என்று எழுதிக் கொள்வது அபத்தமான அப்பட்டமான மேல் சாதி திமிரானபோதும், தாழ்த்தப்பட்டோர் பற்றிய அவர் கருத்து சட்டப்படி குற்றமாகுமா என்பது கேள்விக்குறிதான்.
சின்மயி ட்விட்டில் சொல்லியிருக்கும் கருத்துகளை அச்சுப் பத்திரிகையில் சொன்னால் நிச்சயம் சர்ச்சை எழும். எதிர் கருத்துகள் நிறையவே வரும். ஆனால், அச்சில் ஒருபோதும் ஆபாசமான, அவதூறான எதிர்வினைகள் வந்தாலும் பிரசுரிக்கப்படாது. ஆனால் ட்விட்டர் உலகில் இந்தக் கட்டுப்பாடோ பக்குவமோ இல்லை. பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றோரின் சமூகப் பார்வையைப் பின்பற்றுவதாக சொல்வோரில் கூட சிலர் இப்படி ஆபாசமாக எழுதுவது அதிர்ச்சியாக இருக்கிறது.நம்முடைய பத்திரிகைகள், சினிமா, டி.வி எல்லாம் ஆபாசமானவற்றை இடைவிடாமல் பரப்பிக் கொண்டிருப்பது இவர்கள் தலைக்குள்ளும் போய் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே இதை நான் பார்க்கிறேன்.
சின்மயி நல்ல பாட்டு மட்டும்தான் பாடினாரா, ஆபாசமான பாடல்கள் பாடவில்லையா என்றகேள்வி ஒரு தொலைக்காட்சி விவாததத்தில் எழுப்பப்பட்டது. ஒருவர் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் அவரை பாலியல் வன்முறை செய்வது தவறு என்பதே சட்டம். எனவே ஆபாசப்பாட்டு பாடியதற்காக சின்மயி மீது ஆபாச வசை பொழியலாம் என்றாகிவிடாது. ஆனால், தான் பாடும் ஆபாசப் பாடல்கள், கேட்பவர் மனங்களை எப்படி சீரழியவைக்கின்றன என்பதையும் அப்படிப்பட்ட மனங்கள் தங்கள் எரிச்சலை ஆபாசமொழியில்தான் பேசும் என்பதையும் இதில் தனக்கும் ஒரு மறைமுகப் பொறுப்பு இருக்கிறது என்பதையும் சின்மயி போன்ற கலைஞர்கள் உணரவேண்டிய அவசியம் இருக்கிறது.
இணைய விவாதத்தில், கைதானோரின் சிறு குழந்தைகளின் அந்தரங்க உரிமையும் பறி போயிற்று. குழந்தையின் படத்தைப் போட்டு இதன் அப்பா அநியாயமாக கைதாகியிருப்பதால் குழந்தைக்கு ஏற்படக்கூடிய ஏக்கம் சொல்லப்பட்டது. இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி வாதம். இதன்படி, சின்மயிக்கும் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இருந்தால், அதன் படத்தைப் போட்டு அம்மாவை ஆபாசமாகத் திட்டுகிறார்களே என்று அது ஏங்குவதாக , எழுதினால் சின்மயியின் மேல்சாதி ஆதிக்கக் கருத்துகள் எல்லாம் நியாயமாகிவிடப் போவதில்லை.
கருத்துகளை அச்சமின்றி சுதந்திரமாகச் சொல்ல வாய்ப்பிருக்கும் தளம் இணையம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கருத்து மட்டுமல்ல, அவதூறு, வசை, கருத்துத் திரிபு, தனி நபர் தாக்குதல் என்று எதையும் அச்சமின்றி சுதந்திரமாகச் சொல்லவும் அங்கே இடம் இருப்பதுதான் சிக்கல். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா, ராகுல், சிதம்பரம், நாராயணசாமி என்று பலரைப் பற்றி படு கேவலமாகவும் ஆபாசமாகவும் எழுதப்பட்டவற்றுக்காக நடவடிக்கை எடுத்தால், இணையத்தை உபயோகிப்பவர்களில் 25 சதவிகிதம் பேர் சிறையில்தானிருப்பார்கள். இதற்கு முன்பு அரசியல் மேடைகளில் ஆபாசமாக தரக் குறைவாக பேசுவோர் இருக்கவில்லையா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அது வேறு. அவர்களெல்லாம் அதிகபட்சம் ஒரு ஆயிரம் பேர் கேட்ட கூட்ட்டத்தில் பேசினார்கள். அதற்காக அவதூறு வழக்குகளை சந்தித்தோரும் மன்னிப்பு கேட்டோரும் உண்டு. அந்த ஆபாசப் பேச்சை எந்தப் பத்திரிகையும் பிரசுரித்து லட்சக்கணக்கானோரிடம் கொண்டு சென்றதில்லை. ஆனால் இணையத்தில் ஒரு நொடியில் உலகெங்கும் லட்சக்கணக்கானோரிடம் இந்த ஆபாசமும் அவதூறும் பரப்பப்படுகின்றன.
நையாண்டி எனப்படும் சடையருக்கும் சீண்டல் அவதூறுக்கும் இடையே இருப்பது மெல்லிய கோடுதான். அந்தக் கோடு இணையத்தில் கண்ணுக்கே தெரிவதில்லை.
இந்த இடத்தில்தான் சட்டம் மூக்கை நுழைக்கிறது. அத்துமீறல்கள், முறைகேடுகள், கண்ணியமில்லாத கருத்துகள், அவதூறுகள் ஆகியவற்றை தண்டிக்க இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டத்தின் கீழ் 66 ஏ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் இது மிகவும் தெளிவில்லாமல், பொத்தாம்பொதுவாக இருக்கிறது. (கீழே பார்க்கவும்) செல்போன் மெசேஜ் முதல் டிவிட் வரை எதற்காகவும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். மூன்று வருடசிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
இந்தப் பிரிவும் ஒரு வரமா சாபமா என்பதே இன்னொரு முக்கியமான பிரச்சினை. தொழிலதிபர்-அரசியல்வாதி கார்த்தி சிதமபரம் கொடுத்த ஈமெயில் புகாரின் பேரில் புதுவையை சேர்ந்த் சிறு தொழிலதிபர் ரவி சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையில் பல விசித்திரங்கள் உள்ளன. ரவி எழுதும் ட்விட்டரைப் படிக்க சின்மயி, ராஜனுக்கெல்லாம் இருப்பதைப் போல லட்சக்கணக்கானோர் இல்லை,. வெறும் 16 பேர்தான். அதில் 5 பேர் அவருடைய நெருங்கிய உறவினர்கள். அவர் கார்த்தியைப் பற்றி எழுதிய ட்விட்டுகள் இரண்டுதான். அதில் ஒன்று ராபர்ட் வாத்ராவை விட அதிகமாக கார்த்தி சொத்து சேர்த்துவிட்டார் என்று அறிகிறேன்.என்பதாகும். இதற்காகப் புகார் செய்யவேண்டுமா என்பது வேறு. கருத்துச் சுதந்திரத்துக்காக ஒரு தளத்தை கனிமொழியுடன் இணைந்து நடத்திய கார்த்தி,ஏதோ தலை போகும் அவசரம் போல வெளிநாட்டிலிருந்து ஈமெயில் மூலம் புதுவை போலீசுக்கு புகார் அனுப்புகிறார். ஈ மெயில் புகார் அடிப்படையில் ரவி கைதாகிறார்.
இந்த விவகாரம் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல ட்விட்டர்கள் இதே போல கார்த்தி பற்றிய கருத்தை எழுதியிருக்கிறார்கள். இன்னும் கடுமையான மொழியில் கூட சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது புகார் தராத கார்த்தி ஏன் புதுவை ட்விட்டரைத் தேர்வு செய்தார்? அங்கே அவர் கட்சி ஆட்சி இருப்பதாலா? ட்விட்ட்டர் ரவி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஊழலுக்கெதிரான இந்தியாவின் உறுப்பினர் என்பதாலா? ஈமெயில் புகார்கள் மீது புதுவை போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கும் முறை அங்கே சட்டப்படி அமலில் இருக்கிறதா?
ஒரே சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட இரு விவகாரங்களிலும் ஏன் புதுவையில் உடனே ஜாமீன் வழங்கப்படுகிறது ? ஏன் தமிழ்நாட்டில் ஒரு மாதமாகிறது ? தமிழ்நாட்டில் சின்மயிக்கு முன்னர் காவல் துறையில் இது போன்று பாதிக்கப்பட்ட பிறர் கொடுத்த புகார்களில் ஏன் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை ? சின்மயி, கார்த்தி இருவரும் பிரபலங்கள், செல்வாக்கு உடையவர்கள் என்பதால் மட்டுமே காவல் துறைகள் சுறுசுறுப்பாகின்றனவா ?
இந்தப் பிரச்சினைகளின் விளைவாக, இணையத்தைப் பயன்படுத்தும் ( நான் உள்ளிட்ட) பலருக்கும் வேறு ஒரு கவலை எழுந்திருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் கருத்துச் சுதந்திரமே இதனால் அரசாங்கக் கெடுபிடிகளால் பாதிக்கப்படும் ஆபத்து உருவாகிவிட்டதா? கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்பில்லாமல் இருப்பது அல்ல. அந்தப் பொறுப்புணர்ச்சி சுயக் கட்டுப்பாட்டால் மனப்பக்குவத்தால் வரவேண்டும். இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்பதை சின்மயி-ராஜன் மோதல் காட்டிவிட்டது. எனவே சட்டம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படும் ஆபத்தை கார்த்தி- ரவி பிரச்சினை காட்டிவிட்டது.
எனவே சட்டத்தை தெளிவாக வரையறுத்து உருவாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதுள்ள 66 ஏ எந்த அதிகாரியும் தன் இஷ்டப்படி அர்த்தப்படுத்தக் கூடிய சட்டப் பிரிவாக இருக்கிறது. இ.பி.கோவில் இருக்கும் அவதூறு தொடர்பான சட்டங்களைப் போலவோ அவற்றுக்கான நீதிமன்றத் தீர்ப்புகள் போலவோ இதில் தெளிவு இல்லை. எனவே 66ஏவை நீக்கிவிட்டு ஒரு புதிய தெளிவான பிரிவை அமைக்க வேண்டும். இணைய உலகம் என்பது அரசு தொடர்பானது மட்டுமல்ல. எனவே அரசு நலனுக்காக் மட்டும் சட்டம் போட கூடாது. இணையத்தைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரின் நலனையும் மனதில் கொண்டே சட்டம் இயற்றப்படவேண்டும்.
சின்மயி, ராஜன், சரவணகுமார், கார்த்தி சிதம்பரம், ரவி எல்லாரும் நடந்தனவற்றிலிருந்து என்ன பாடம் கற்கிறார்களோ, இல்லையோ, அரசு கற்கவேண்டிய பாடம் இதுதான் : 66 ஏவை மாற்றியமைக்கவேண்டும்.
————————————————————-
66A.Punishment for sending offensive messages through communication service, etc.: Any person who sends, by means of a computer resource or a communication device,-
(a) any information that is grossly offensive or has menacing character; or
(b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device,
(c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages, shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine.
‘Explanation.- For the purpose of this Section, terms “electronic mail” and “electronic mail message” means a message or information created or transmitted or received on a computer, computer system, computer resource or communication device including attachments in text, images, audio, video and any other electronic record, which may be transmitted with the message.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...