மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே தீவிரவாதி கசாபுக்கு அவசர அவசரமாக
தூக்குத் தண்டனை நிறைவேற்றியதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. கசாபுக்கு
முன்பே மரண தண்டனை விதிக்கப்பட்ட
அப்சல் குருவை, காங்கிரஸ் அரசு இன்னும் தூக்கிலிடவில்லை. அதற்கும் முன்பே
தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளையும் தூக்கிலிடவில்லை.
கசாபை மட்டும் அவசரமாகத் தூக்கிலிட
பல காரணங்கள் உள்ளன. மும்பை தாக்குதலின் நினைவு நாளையொட்டி கசாப்
தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியில் பலவீன நிலையில் இருக்கும்
காங்கிரஸ் ஆட்சி தன்னைப் போலவே
பலவீனமாக இருக்கும் பி.ஜே.பி.யை வரும் தேர்தலுக்கு முன் மேலும் பலவீனப்
படுத்தினால்தான் தனக்கு லாபம் என்று கருதுகிறது.
கசாபைத் தூக்கில் போடுவதன் மூலம் பி.ஜே.பி.யை ஆதரிக்கக் கூடிய இந்துத்துவ
வாக்குகளைக் கொஞ்சம் தன் பக்கம் திருப்பலாம் என்பதும் ஒரு கணக்கு. தவிர
கசாபைத் தூக்கிலிடுவதால் முஸ்லிம்களின் அதிருப்தி
ஏற்படும் என்ற அச்சத்துக்கும் இடமில்லை. பொதுப்புத்தியில் அனைவர்
மத்தியிலுமே கசாபைத் தூக்கிலிடுவதற்கான ஆதரவு மனநிலைதான் இருக்கிறது. ஆனால்
அப்சல் குருவைத் தூக்கிலிட்டால், கொஞ்சம் இந்துத்துவ வோட்டு வரும்,
ஆனால் முஸ்லிம் வோட்டு எதிராகத் திரும்பிவிடும். அப்சல் குருவுக்கு மரண
தண்டனை விதித்தது தவறு என்ற கருத்து முஸ்லிம்கள்
உட்பட பலரிடமும் இருக்கிறது. அதேபோல ராஜீவ் கொலைக் கைதிகள் விஷயத்திலும்.
அவர்களை இப்போது தூக்கிலிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலை தமிழ்நாட்டில்
அதோகதி. அவர்களைத் தூக்கிலிட்டால், காங்கிரசை அதன் பின்னர்
தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தமிழகத்தில் யாரும்
முன்வரமாட்டார்கள். இந்தக் கணக்கெல்லாம் போட்டுத்தான் கசாபின் தண்டனையை
காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றியிருக்கிறது என்று கருதலாம்.
குடியரசுத் தலைவர் கசாபின் கருணை மனுவை நிராகரித்த பின்னர் அதை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யும் உரிமை கசாபுக்கு உள்ளது. ஆனால் அதை
கசாபுக்குத் தெரிவிக்காமல், தூக்கிலிட்டது சட்ட
விரோதமானது; மனித உரிமை மீறல். உலக அரங்கில் இது பிரச்னையாக்கப்பட்டால்,
இந்தியாவுக்கு தர்மசங்கடம்தான்.கசாப் போன்ற கொடூரமான கொலை காரனைத் தூக்கில்
போட்டால் என்ன தப்பு என்று
பலரும் கேட்கிறார்கள். மரண தண்டனை கூடாது என்று சொல்லும் என்னைப் போன்றோர்
முதலில் சுட்டிக் காட்ட விரும்புவது, குற்றத்தின்
அடிப்படையில் மரண தண்டனையை முடிவு செய்வதானால், கடுமையான கருத்து
வித்தியாசங்கள் இருக்கும் என்பதாகும். எந்தக் குற்றமானாலும் அதிகபட்ச
தண்டனை ஆயுள் சிறையாக மட்டுமே இருக்கலாம்.
ஒருவர் உயிரைப் பறிக்க இன்னொருவருக்கு உரிமை இல்லை என்பதனால்தான் கொலை,
குற்றமாகக் கருதப்படுகிறது. அந்த உரிமை மனிதர்களுக்கு மட்டுமல்ல,
மனிதர்களின்
பிரதிநிதியான அரசுக்கும் கிடையாது.தவிர உலகம் முழுவதும் இருக்கும் புலன்
விசாரணை, சட்ட முறைமைகளில் ஊழலும்
விருப்புவெறுப்புகளும் நிரம்பியுள்ள நிலையில் நிரபராதிகள் தூக்கிலிடப்படும்
வாய்ப்பு இருக்கிறது. இத்தனை காலமாக
மிக அதிகமாக மரண தண்டனையை நிறைவேற்றும் அமெரிக்காவில் இப்போது 17
மாநிலங்கள் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டன. அதிக மரண தண்டனை இருப்பதால்
குற்றம் குறையவும் இல்லை. மரண தண்டனையை
நீக்கிவிட்டதால் குற்றம் அதிகரிக்கவும் இல்லை என்பதே ஆய்வுகளின் முடிவு.
கொலைக் குற்றங்கள், தீவிரவாதங்கள் முதலியவற்றைக் குறைக்க வேறு பல காரணங்களை
அலசித் தீர்வுகள் காணவேண்டும். நிச்சயம் மரண
தண்டனை எதற்கும் தீர்வல்ல.ஆனால் தூக்கிலிடுவதைக் கொண்டாடும் மனநிலை நம்
சமூகத்தில் இருப்பது அச்சம் தருகிறது. இதுதான் பாசிசத்தின் ஊற்றுக்கண்.
திருந்தாத சிவசேனை
சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மறைவையொட்டி மும்பை முழுவதும் கடைகள்
அடைக்கப்பட்டதை விமர்சித்து ஃபேஸ்புக்கில் சாதுவான ஒரு கமென்ட்டை எழுதிய
ஷஹீதாவையும் அந்த கமென்ட்டுக்கு லைக்
போட்ட ரினி சீனிவாசனையும் அராஜகமாகக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் இருவரை
மகாராஷ்டிர அரசு இடைநீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கைக்குக் கூட
காரணம், பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய
கட்ஜு முதல் பல அறிவுஜீவிகள் அந்த அரசைக் கடுமையாக விமர்சித்ததுதான்.
ஆனால் சிவசேனை மட்டும் திருந்துவதாகக் காணோம். போலீஸ் அதிகாரிகளை இடை
நீக்கம் செய்ததைக் கண்டித்து உள்ளூரில் கடை அடைப்பு நடத்திக்
கொண்டிருக்கிறது. சிவசேனை தலைவர் பால் தாக்கரேவுக்குப் புகழஞ்சலிகள் சூட்டிய மன்மோகன் சிங்,
சோனியா, கருணாநிதி எல்லாரும் வழக்கம் போல செலக்டிவ் அம்னீஷியாவில் தான்
இருக்கிறார்கள். இந்தியாவில் மத விரோதத்தைத் தூண்டி தேர்தல்
பிரசாரம் செய்ததற்காக ஆறு வருடங்கள் வோட்டளிக்கவோ தேர்தலில் போட்டியிடவோ
நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி பால் தாக்கரேதான் என்பதை
வசதியாக எல்லாரும் மறந்துவிட்டார்கள். மீடியாவும்தான்.பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்கியதற்குக் காரணம்
அவர் அரசியல்வாதி என்பதால் அல்ல, அவரை ஓர் ஆர்ட்டிஸ்டாக, கார்ட்டூனிஸ்டாக
கௌரவித்திருக்கிறோம் என்று மராட்டிய முதலமைச்சர் புது விளக்கம்
கொடுத்திருக்கிறார்.
உலக அரங்கில் புகழ் பெற்ற மராட்டிய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கருக்கு
இந்த மரியாதையை மராட்டிய அரசு கொடுக்கவில்லை. டெண்டுல்கரும் பால்
தாக்கரேவும் ஆரம்ப நாட்களில் ஒன்றாக ஒரே பத்திரிகையில் வேலை
பார்த்திருக்கிறார்கள். பின்னாளில்
டெண்டுல்கரின் நாடகங்களை சிவசேனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து நாடகமே
நடக்கவிடாமல் எல்லாம் தடுத்திருக்கிறது. கடைசி வரை டெண்டுல்கர்,
பால்தாக்கரேவை விமர்சிப்பதைக் கைவிடவே இல்லை.
பால் தாக்கரேவின் மிரட்டல்களுக்குப் பயப்படாத இன்னொரு கலைஞரும் மும்பையில்
இருந்தார். அவருடைய திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நாங்கள் அதைப் பார்த்து
ஓகே சோல்லியாக வேண்டும் என்று சிவசேனை நிபந்தனை விதித்தது. அவர்
மறுத்துவிட்டார். ஆனால் படம் காட்டப்படவிருந்த அரங்க உரிமையாளருக்கு,
கொட்டகையைத் தாக்கிவிடுவார்களோ என்று அச்சம். எனவே அவர் பால் தாக்கரேவைப்
படம் பார்க்க அழைத்தார். படம் பார்த்து முடிந்ததும் பால் தாக்கரே கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயக்குனரும் அரங்கில் இருக்க வேண்டும் என்று
கெஞ்சினார் கொட்டகைக்காரர். இயக்குனர் மறுத்துவிட்டார். படம் காட்டி
முடிந்ததும் பால்தாக்கரே எங்கே இயக்குனர் என்று கேட்டார். வரவில்லை என்று
சொன்னதும் தாக்கரே எதுவும் சொல்லவில்லை. அப்படி பால்தாக்கரேவைச் சந்திக்க
மறுத்த இயக்குனர் எம்.எஸ். சத்யூ. அந்தப்
படம் இன்றும் உலக அளவில் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘கரம்
ஹவா’. பிரிவினையை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பால்ராஜ் சஹானி
முக்கிய வேடத்தில்
நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகி 38 வருடங்கள் கழித்து
புதுப்பிக்கப்பட்ட பிரின்ட்டாக இப்போது கோவாவில் நடக்கும் உலகப் பட
விழாவில் இந்த வாரம் சிறப்புப் படமாகத் திரையிடப்பட்டது.இன்னொரு பக்கம்
சிவசேனை மனநிலை மாறாமல் இருப்பதும் வோட்டுக்காக எல்லா அரசியல் கட்சிகளும்
அதை ஆதரிப்பதும் ஆபத்தானது.
உச்சமான கட்டப் பஞ்சாயத்து?
காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்னையை கர்நாடக, தமிழ்நாடு முதலமைச்சர்கள்
பேசித் தீர்வு காணும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீரென்று அறிவுரை
சொல்லியிருக்கிறார்கள். கோர்ட் உத்தரவுகளால் பிரச்னை
தீராது என்றும் சொல்லியிருக்கிறார்கள். தன் முன் வரும் வழக்கை விசாரித்து
நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. அவற்றை ஒருமுறை இருமுறையல்ல, பலமுறை ஒருவர் பின்பற்றாமல்
அலட்சியப்படுத்தினால், அவர் மீது அதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க
வேண்டுமே தவிர, அவரோடு பேசுங்கள் என்று பாதிக்கப்பட்ட மறுதரப்புக்கு
அறிவுரை சொல்ல
முடியாது. காவிரி பிரச்னையில் 1970களிலிருந்து 40 வருடங்களாகப் பலமுறை இரு
மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு
கிடைக்காததால்தான் ஆணையத்திடமும் நீதிமன்றத்திடமும் செல்ல வேண்டியே வந்தது
என்பது வரலாறு. இப்போது முதலமைச்சர்கள் சந்தித்துப் பேசினாலும் தற்காலிக தீர்வாக உடனடியாக
சில டி.எம்.சி. தண்ணீர் விடுவதைத் தான் அதிகபட்சம் முடிவு செய்வார்களே
தவிர, நிரந்தரத் தீர்வை அவர்களால் கொண்டு வர முடியாது. அதற்கு
டிரிப்யூனலின் உத்தரவுகளைக்
கறாராகச் செயல்படுத்துவதே ஒரே வழி. இந்தச் சரியான வழியை நீதிமன்றங்கள்
பரிந்துரைக்க வேண்டும்.
ராமதாஸ் பதில்:
தலித்கள் மீதான தர்மபுரி தாக்குதல் பற்றி சென்ற இதழில் நான் மருத்துவர்
ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அவர் தைலாபுரம் தோட்டத்தில்
இருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். ஏற்கெனவே
அவர் அறிக்கையில் சொல்லியிருந்த அதே வாதங்களை என்னிடமும் சொன்னார். இது
காதல் திருமணத்தை எதிர்க்கும் பிரச்னையல்ல. தலித்-வன்னியர் மோதலும் அல்ல.
தொடர்ந்து தலித் இளைஞர்கள் தங்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தால்
பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு
சாதிகளின் எதிர்வினை என்று கூறினார். ஆயிரக்கணக்கான இதர சாதிப் பெண்களை
காதலில் சிக்கவைத்து பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் பல தலித்
இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னதும், அதற்கு ஆதாரம் என்ன என்று
கேட்டேன்.
ஒவ்வொரு ஊரிலும் விவரங்களைத் திரட்டி வருவதாகவும் தொகுத்து வெளியிடப்
போவதாகவும் சொன்னார். சென்னைக்கு வந்ததும் நேரில் தொடர்ந்து விரிவாகப் பேச
விரும்புவதாகவும் தெரிவித்தார். கடந்த காலத்தில் திருமாவளவனுடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து சாதிகளிடையே
பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தவர் இப்போதும் ஏன் அதைச் செய்ய
முன்வரக்கூடாது என்று கேட்டேன். தாம் அதற்கு இப்போதும்
தயார்தான் என்று பதில் சொன்னார். அடுத்த சில தினங்களில் நெய்வேலி அருகே ஒரு
கிராமத்தில் சாதி மோதல் நடைபெற்றிருக்கிறது. காரணம் ஒரு போஸ்டர் என்று ஒரு
செய்தியும், ஒரு பெண்ணை சீண்டியது
என்று இன்னொரு செய்தியும் சொல்கின்றன. உண்மையறியும் குழுக்கள் ஒவ்வொரு
கட்சி சார்பில் போய் ஒவ்வொரு உண்மையைச் சொல்கின்றன. சர்வ கட்சி சேர்ந்து
உண்மையைத் தேடுவதே இல்லை. ராமதாஸும் திருமாவும்
உடனடியாகத் தேர்தல்களை மறந்துவிட்டு சேர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால்,
இத்தகைய சாதி மோதல்கள் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.