கல்லூரி ஆசிரியர்களுக்கான "ஸ்லெட்" தகுதி தேர்வு முடிவு, மூன்று
மாதங்களாகியும், அறிவிக்கப்படாமல் இருப்பதால், தேர்வு எழுதியோர்
ஏமாற்றத்தில் உள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலை சார்பில், கடந்த, செப்., மாதம் கல்லூரி ஆசிரியர்
தகுதி தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த, 50
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதினர். ஒரு மாதத்தில் முடிவு
அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்கள்
நிறைவடைந்தும், இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
வரும், 30ம் தேதி, "நெட்" என்ற தேசிய தகுதி தேர்வு நடக்கிறது. ஸ்லெட்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நெட் தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால்,
ஸ்லெட், தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படாததால், நெட் தேர்வை, எழுத
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், கல்லூரி
ஆசிரியர் பணிக்கான தேர்வும், விரைவில் நடைபெற, வாய்ப்புள்ளதால், ஸ்லெட்
தேர்வு முடிவை, பல்கலைக்கழகம் விரைவில் வெளியிட வேண்டும் என்பது தேர்வு
எழுதியவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பாரதியார் பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளரை தொடர்பு கொண்டபோது,
அவரது மொபைல் போன், "ஸ்விட்ச் ஆப்" செய்யப்பட்டிருந்தது. திருப்பூரை
சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "இன்னும் 10
நாட்களில், ஸ்லெட் தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது"
என்றார்.