கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல இந்தியர்கள் திணறுவதற்கான காரணம் என்ன…?

 
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2வது இடத்தில் உள்ள இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்ல படிப்பு, குடும்ப கவலை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல தடைக்கற்களை தாண்ட வேண்டியுள்ளது. இவைகளைத் தாண்டி வரும் இந்திய விளையாட்டு வீரர்களால் மட்டுமே சர்வதேச அளவில் பதக்கங்களை பெற முடிகிறது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது. சீனா தனது மக்கள் தொகையை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரம் முதல் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேபோல விளையாட்டு துறையிலும் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைக்கிறது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே குதிரை கொம்பாக உள்ளது. தகுதி பெற்றவர்கள் பதக்கம் வெல்வது என்றால் அது அதிசயமாக கருதப்படுகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சாதிக்க பல தடைக்கற்கள் உள்ளன.

ஊக்கமின்மை:

சீனாவில் சிறு குழந்தையாக இருக்கும் போது, அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தை அறிந்து அதற்கு ஏற்ப விளையாட்டு போட்டிகளில் பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. 5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி துவங்குவதன் மூலம் அவர்கள் டீன் ஏஜ் வயதை அடையும் போது சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களாக உருவாகிவிடுகின்றனர்.

ஆனால் இந்தியாவின் நிலை தலைகீழ். பள்ளி பருவத்தில் தான் குறிப்பிட்ட நபருக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பது கண்டறியப்படுகிறது. அதன்பிறகு அவருக்கு பயிற்சி அளித்து ஒரு சிறந்த விளையாட்டு வீரராக உருவாகி வருவதற்குள் இளம்வயதை கடந்துவிடுகிறார். மேலும் வயது அதிகரிப்பதால் சிறப்பாக செயல்பட உடல்நிலை அனுமதிப்பதில்லை.

படிப்பு:

இந்தியாவில் என்ன தான் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் குறிப்பிட்ட படிப்பு இல்லாவிட்டால் எந்த பயனும் இல்லை. இதனால் குழந்தைகளை படிப்பில் அதிக கவனம் செலுத்த பெற்றோர் உற்சாகப்படுத்துகின்றனர். விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் படிப்பு சுமை, பயிற்சி இன்மை மற்றும் ஊக்கமின்மை காரணமாக பாதியிலேயே விளையாட்டு துறையில் இருந்து விலகும் நிலை ஏற்படுகிறது.

குடும்ப கவலை:

விளையாட்டுத் துறையில் ஜொலிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் குடும்ப நபர்களால் ஏளனமாகப் பார்க்கப்படுகின்றனர். மேலும் விளையாட்டு பயிற்சிகளுக்கு அதிகம் செலவாகிறது. இதில் பயந்து போகும் சில வீரர்கள் தங்களின் விளையாட்டு ஆர்வத்திற்கு முழுக்கு போட்டு விடுகின்றனர்.

அதேபோல டீன் ஏஜ் வயதை கடக்கும் வீராங்கனைகளுக்கு வீட்டில் திருமணம் முடிக்க தயாராகி விடுகின்றனர். எனவே அதன்பிறகு குடும்ப கவலை காரணமாக தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

குழப்பும் பெற்றோர்:

தங்களின் குழந்தைகளின் ஆர்வத்தை அறியாத சில பெற்றோர், குழந்தைகள் ஆல்-ரவுண்டராக வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதற்காக பல விளையாட்டுகளின் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். விடுமுறை நாட்களில் கால்பந்து, கிரிக்கெட், நீச்சல், ஜிம்னாஸ்டிக்,கராத்தே பாட்மிண்டன், டென்னிஸ், செஸ் என்று ஏராளமான பயிற்சிகளுக்கு செல்லும் குழந்தைகள், விளையாட்டு என்றால் வெறுக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

மேற்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு சிறு வயது முதலே குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஆர்வம் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் சீனாவை போல இந்தியாவும் ஒருநாள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ள முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:பெருமை குற...