கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை)

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.


1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.

லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.

முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.

பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.

இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
 
கொசுறு:
 'புத்தகங்கள் நம்மை முன்னேற்றும் செல்வம்’ என்பதற்கு, மைக்கேல் ஃபாரடே ஓர் உதாரணம். தன் 14-வது வயதில் புத்தக விற்பனை மற்றும் பைண்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் ஃபாரடே. விஞ்ஞானம் சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படித்தார். விஞ்ஞானி, ஹம்ப்ரி டேவியின் விரிவுரைகளை நேரில் கேட்க ஆரம்பித்தார். ஒரு முறை டேவியின் விரிவுரையைக் குறிப்பு எடுத்து அவருக்கு அனுப்பினார். அதைப் படித்த டேவி, மைக்கேல் ஃபாரடேயைத் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...