கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மனிதருள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதருள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

>>>மாவீரன் செண்பகராமன்...

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்
ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

>>>சுவாமி விவேகானந்தர்

இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
சுவாமி விவேகானந்தர்
Swami Vivekananda

சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர், 1893
இப்படத்தில் சுவாமிகள் வங்காளம், மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியது: “One infinite pure and holy—beyond thought beyond qualities I bow down to thee” - Swami Vivekananda
பிறப்பு சனவரி 12, 1863
கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியாவின் கொடி இந்தியா
இறப்பு சூலை 4 1902 (அகவை 39)
பேலூர், கல்கத்தா, இந்தியாவின் கொடி இந்தியா

வாழ்க்கை

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[1].
  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா[2].
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்[2].
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்[2].
  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
  • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
  • இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
  • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
  • வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
  • சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
  • என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
  • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாசு ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
                                   --விவேகானந்தர் 

நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

கொசுறு:
நரேந்திர நாத் தத்தா என்பது அவனுடைய முழுப் பெயர். எல்லாரும் அவனை நரேந்திரா என்று அழைப்பார்கள். அவனுடைய அப்பா, விசுவநாத தத்தா, வழக்கறிஞர். அம்மா பெயர், புவனேஸ்வரி தேவி.

நரேந்திரனின் அம்மா மிகவும் கண்டிப்பானவர். 'ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்’ என்று சொல்வார். தன் மகனை ஒழுக்கத்தில் சிறந்தவனாக வளர்ப்பதில் கவனமாக இருந்தார். நமது புராணம் மற்றும் இதிகாசங்களில் உள்ள தத்துவக் கதைகளை நரேந்திரனுக்குச் சொல்வார். யோகாப் பயிற்சியையும் அவனுக்கு அம்மாதான் சொல்லிக்கொடுத்தார்.

சின்ன வயதிலேயே நரேந்திரன் அதிகாலையில் எழுந்துவிடுவான். ஆசிரியராகத் தன்னைக் கற்பனைசெய்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதிகாலை நேரத்தில் தன் முன்னால் ஒரு வகுப்பே இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்வான். அவனுடைய ஆசிரியர்போலவே சத்தமாகப் பேசி நடிப்பான். மாலையில் வீட்டுத் தோட்டத்தில் உடல்பயிற்சி செய்வான். மரங்கள் மேலே ஏறுவதும், கிளையைப் பிடித்துத் தொங்கியவாறு தண்டால் எடுப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றான். அங்கே பூசாரியாக இருந்தவர், ஓர் இயந்திரம்போல எந்த உணர்ச்சியும் இல்லாமல் மந்திரம் சொல்லி, அர்ச்சனைசெய்வதைக் கண்டான். நேராக அவர் அருகே சென்று, அந்த மந்திரங்களை ஏற்ற இறக்கத்தோடு சொல்லிக்காட்டினான். அப்போது நரேந்திரனுக்கு ஆறு வயதுதான்.

நரேந்திரனிடம் எந்த அளவுக்குக் குறும்புத்தனமும் விளையாட்டும் இருந்ததோ, அதே அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமும் இருந்தது. பாடப் புத்தகத்துக்கு வெளியேயும் அவனது தேடல் இருந்தது. அவனது அப்பாவிடம் இருந்த பல மேற்கத்தியத் தத்துவப் புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படிப்பான். பள்ளியில் இருந்து வந்ததும் சிந்தனையிலேயே இருப்பான்.

ஒரு நாள், நரேந்திரன் தன் அப்பாவிடம் விதண்டாவாதமாக ஏதேதோ கேள்விகளைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அவன் கேட்ட பல கேள்விகளுக்கு அப்பாவுக்குப் பதில் தெரியவில்லை. அதனால் அவருக்குக் கோபம்வந்துவிட்டது. நரேந்திரனைக் கழிவறைக்கு உள்ளே தள்ளி, கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, 'பாவம் பிள்ளை’ என நினைத்தவாறே கதவைத் திறக்க முயன்றார். ஆனால், நரேந்திரன் உள்ளே தாழிட்டு இருந்தான்.

பயந்துபோன அப்பாவும் அம்மாவும் கதவைத் தட்டினார்கள். ''என்னைத் தொந்தரவு செய்யாதீங்க. நான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கிறேன்.'' என்று உள்ளே இருந்து குரல் வந்தது. தான் தேடிய கேள்விக்குத் தனக்குள்ளேயே பதிலைத் தேடித் திருப்தி அடைந்த பிறகே நரேந்திரன் வெளியே வந்தான். அவனது செயலைக் கண்டு பெற்றோர் வியந்துபோனார்கள்.

கற்பதில் பிடிவாதம், கடும் பயிற்சி, யாருக்கும் எதற்கும் பயப்படாத மனோதிடம் இவைதான் நரேந்திரனைப் பிற்காலத்தில் உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தராக மாற்றியது.

>>>வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு சகோதரிகளும் இருந்தனர்.

அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள் வந்தது.

1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம் ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.

'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
 
 வீரபாண்டிய கட்டபொம்மனைக் கெளரவிக்கும் விதமாக 1999-ல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை!

>>>மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை)

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.


1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.

லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.

முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.

பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.

இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
 
கொசுறு:
 'புத்தகங்கள் நம்மை முன்னேற்றும் செல்வம்’ என்பதற்கு, மைக்கேல் ஃபாரடே ஓர் உதாரணம். தன் 14-வது வயதில் புத்தக விற்பனை மற்றும் பைண்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் ஃபாரடே. விஞ்ஞானம் சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படித்தார். விஞ்ஞானி, ஹம்ப்ரி டேவியின் விரிவுரைகளை நேரில் கேட்க ஆரம்பித்தார். ஒரு முறை டேவியின் விரிவுரையைக் குறிப்பு எடுத்து அவருக்கு அனுப்பினார். அதைப் படித்த டேவி, மைக்கேல் ஃபாரடேயைத் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

>>>ரூசோ

 


உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் ‘பிரெஞ்சு புரட்சி’யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

>>>காரல் மார்க்ஸ்


                                              காரல் மார்க்ஸ் - சிந்தனைத்துளி !!!

  • உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.
  •  மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை. நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.
  • உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி.
  • பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.
  • தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன். 
  • மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.
  • மதம் மக்களுக்கு அபின்.
  • விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.
  • உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.
  • ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்.
  • நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
  • மக்களே கலை, இலக்கியம், மொழி ஆகிய அனைத்துக்கும் வித்தும் வீரியமும் சத்தும் சாரமுமாய் இருக்கிறார்கள். அவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்.
  • நமக்கு முந்தைய தலைமுறை தத்துவ தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவதுதான். 
  • உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவை பொறுத்து. நாடுகளுக்கிடையே உள்ள பகைமையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
  • மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.
காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு

தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.

தாய்: ஹென்ரிட்டா.

பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.

மதம்: யூத மதம்.

சொந்த நாடு: பிரெஞ்சு.

பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.

உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.

பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கீல் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை: ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.

தொழில்:  பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

1.உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யூனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!

எல்லா மக்களும் என் மக்கள்!!

நானோர் உலக மகன்!!!”

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை வறுமை கொலைவெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்

>>>ஆப்ரஹாம் லிங்கன்....

 
ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார். "மிஸ்டர் லிங்கன், உங்களை இங்கு பலர் பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்.” என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார் ஒருவர்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் "நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல, இப்போது உம் செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன். எனக்கு செருப்புத் தைக்கவும் தெரியும்,நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விஷயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்" என்று ஒரு போடு போட்டார்.

இயலாமையோ, வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல. தாழ்வு மனப்பான்மை தவறானது. தாழ்வு மனப்பான்மையைத் தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்.

>>>திரு.சகாயம், இ.ஆ.ப. அவர்கள்... [Mr.Sahayam, IAS]

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயி
ரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...