கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கோபால கிருஷ்ண கோகலே...

 
கோபால கிருஷ்ண கோகலே... இந்திய விடுதலைப் போரட்ட வீரர். வறுமையான சூழலில் பிறந்தவர். அப்பாவை இளம் வயதிலேயே இவர் இழந்துவிட, அண்ணன் வேலைபார்த்து இவரை படிக்க வைத்தார்.

மின்சாரம் இல்லாத அக்காலத்தில் தெரு விளக்கில் ஒண்டி படித்தார். ஒரே டிராயர், சட்டை, ஒருவேளை மட்டும் சாப்பாடு மட்டுமே வாழ்க்கைக்கு வாய்த்தது. அந்த ஒருவேளை சாப்பாட்டையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப் படித்தே பி.ஏ. பட்டம் பெற்றார்.

அரசாங்க வேலைகள் காத்துக் கொண்டிருந்தபொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணினார். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார். வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார்.

நேரடி போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்பது திலகரின் கோஷமாக இருந்தது. குழந்தைத் திருமணத்தை தடை செய்யும் ஆங்கிலேய அரசின் சட்டத்தை இவர் ஆதரித்தார். இந்துக்களின் நம்பிக்கைகளில் தலையிடுகிறார்கள் என அச்சட்டத்தை திலகர் நிராகரித்தார். மோதல் வலுத்தது; இனிமேல் இணைந்து செயல்பட முடியாது என காங்கிரஸ் இரண்டு பிரிவாக உடைந்தது.

மிதவாதிகளின் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார்; சமூகத்தின் சேவகர்கள் எனும் அமைப்பை தொடங்கினார். அதில் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துக்களை நாட்டுக்கு எழுதி வைத்து விடவேண்டும். இந்த அமைப்பு கல்வியறிவை எளிய மக்களுக்கு போதித்தது. நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது. பல பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது.

தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கவும் செய்தார் கோகலே. மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய குரு என இவரைத்தான் வாஞ்சையோடு குறிக்கிறார்; கோகலேவை சந்திக்கும் முன்வரை ஆங்கிலேய அரசின் மீது மிகப்பெரிய மரியாதை அவருக்கு இருந்தது; முதல் உலகப் போரில் ஈடுபட்டு பட்டயம் எல்லாம் பெற்ற காந்தி, கோகலேவை சந்தித்தது திருப்பம்.

மக்கள் இந்த ஆட்சியில் எப்படி இருக்கிறார்கள் என உணர இந்த தேசம் முழுக்க பயணி என அவரின் அறிவுறுத்தலே காந்தியை மகாத்மா ஆக்கியது. மதுரையில் அரையாடை பூண்டார்; தேச விடுதலைக்கு தலைமையேற்றார்.

இருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த அவர் ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் விடாது நாட்டுக்காக உழைத்தார். இங்கிலாந்து போயிருந்த பொழுது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று.

காந்தியின் அரசியல் குருவான அவரை, அவரது நினைவு தினமான இன்று (பிப்.19) நாமக்கல் கவிஞரின் வரிகளோடு நினைவுகூர்வோம்.

'பெருநிலக் கிழவியிந்த பேதையாம் இந்து தேசம்

பலபல துன்பமுற்றுப் பஞ்சையாய் வாடிநிற்க

வெறுமனே யிருந்துநாங்கள் வீணரா யலைந்து கெட்டோம்

வேண்டினோம் தேசபக்தி விமலனார் எமக்குத் தந்த

பெருமானே கோகலே நீ பின்னையும் பிறந்து வந்து

பெற்றதாய் இந்துமாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய்!'

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS Guidelines regarding GPF Loan for all DDOs

 அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF Loan தொடர்பான IFHRMS வழிகாட்டுதல் மதிப்பிற்குரிய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் அவர்களே, ...