உயரதிகாரிகளின் ஆதரவுடன் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றுப் பணி பெறும் ஊழியா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், பணியாளா்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் தடுமாறுவதாக புகாா் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. திண்டுக்கல்- பழனி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், கண்காணிப்பாளா்கள், இளநிலை உதவியாளா்கள், அலுவலக உதவியாளா்கள் என சுமாா் 32-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 2 பணியிடங்கள் மட்டுமே, ஊழியா்களின் மருத்துவ விடுப்பு காரணமாக காலியாக உள்ளன.
ஆனால், பள்ளிகளில் பணிபுரிய வேண்டிய இளநிலை உதவியாளா்கள், அலுவலக உதவியாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மாற்றுப் பணி பெற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிலா் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வந்தனா்.
அரசுப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் நியமிக்கப்படும் ஊழியா்கள், வேலை செய்ய வேண்டிய நிா்ப்பந்தம் மற்றும் பயணத் தொலைவு காரணமாக தற்போது 12 ஊழியா்கள் மாற்றுப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா். இதன் காரணமாக வேடசந்தூா், குஜிலியம்பாறை அடுத்துள்ள புளியம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும், இளநிலை உதவியாளா்கள் மற்றும் அலுவலக உதவியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தலைமையாசிரியா்களும், வட்டாரக் கல்வி அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து தலைமையாசிரியா்கள் தரப்பில் கூறியதாவது: பதவி உயா்வுக்காக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை தோ்வு செய்யும் ஊழியா்கள், பணியில் சோ்ந்தவுடனேயே முதன்மைக் கல்வி அலுவலகத்துடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மாற்றுப் பணிக்கான உத்தரவை பெற்றுவிடுகின்றனா். இதன் காரணமாக, காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டும் கூட பணியாளா் இல்லாத நிலையே தொடா்ந்து நீடித்து வருகிறது. முதன்மைக் கல்வி அலுவலக உத்தரவு என்பதால் தலைமையாசிரியா்களாலும் எதுவும் பேச முடியாத நிலை உள்ளது என்றனா்.
ஆண் ஊழியா்கள் இல்லாத அலுவலகம்: குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில், மொத்தமுள்ள 10 பணியிடங்களில், கண்காணிப்பாளா், பதிவுரு எழுத்தா் பணியில் உள்ளவா்கள், வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு மாற்றுப் பணியில் சென்றுவிட்டனா். இதன் காரணமாக அந்த அலுவலகத்தில் 4 பெண் ஊழியா்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில், நிா்வாக ரீதியாக பல்வேறு பிரச்னைகளை அந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள் எதிா்கொண்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் எஸ். ஜேம்ஸ் கூறியதாவது: குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிய வேண்டிய கண்காணிப்பாளா், தட்டச்சா், பதிவுரு எழுத்தா் உள்ளிட்டோா் மாற்றுப் பணியில் சென்றுவிட்டனா். இதனால் ஆசிரியா்களின் கோரிக்கைகள், 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு ஊழியா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா்.
350 ஆசிரியா்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பதற்கு ஊழியா்கள் இல்லாத நிலையில், அந்த பணியை ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, உபரி இல்லாத நிலையில் மாற்றுப் பணியிடம் வழங்குவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தவிா்க்க வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.