பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது குறித்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்து 2 வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருதீர்ப்பும், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டன. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள் முடிந்தவுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாகஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்றார்.