பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் கல்வித் துறை இணைச்செயலர் மீனா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் ''தேன், காளான் ஆகியவை முக்கிய உணவுகள். இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ குணங்கள் உள்ளன. மதிய உணவில் குழந்தைகளுக்கு இவற்றை வழங்கப் பரிந்துரைக்கிறோம். காளானில் ஃபோலிக் ஆசிட் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். தாவர உணவான காளானில் வைட்டமின் பி12, பொட்டாசியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளன. இதில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துகளை அடிப்படையாகக் கொண்டு, காளான் மற்றும் தேனை மதிய உணவில் இணைக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலிக்கலாம். இதனால் தேன், காளான் உற்பத்தியும் அதிகரிக்கும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தேசிய விருது பெற்ற புதுச்சேரி காளான் உற்பத்தியாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், "ஆசிரியர் பணியில் விருப்ப ஓய்வு பெற்று காளான் உற்பத்தியாளருக்காகத் தேசிய விருது பெற்றேன். கொழுப்பு இல்லாத உயர்தர புரதச்சத்து காளானில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும், பல மருத்துவ குணங்களும் அடங்கியது காளான்.
இதைத் தேசிய காளான் ஆராய்ச்சி இயக்குனரகம் உறுதி செய்துள்ளது. குழந்தைகளுக்கு அவசியமாகத் தரவேண்டிய உணவு இது. நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவோடு காளானைத் தருவதால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி" என்று குறிப்பிட்டார்.