கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிற்றல், குழந்தைத் திருமணம், கரோனா 2-வது அலை, பருவமழை: பள்ளிகள் திறப்பு இப்போது அவசியமா? ஆபத்தா?

 கரோனா தொற்று காரணமாக சுமார் 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகளுடன் மேலும் 1 மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7-ம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகளும் மாணவர் விடுதிகளும் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு தற்போது எதுவும் அறிவிக்கவில்லை. முன்னதாகக் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பால் அம்முடிவு கைவிடப்பட்டது. அதேபோல இரண்டாவது முறையாக நவ.16 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, அதுவும் வாபஸ் பெறப்பட்டது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் ஒரு பகுதியாகப் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. எனினும் கரோனா அச்சத்தால் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது வெறும் 5% மாணவர்கள் மட்டுமே வந்ததை நினைவுகூரலாம்.

அதேபோல் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட 3 நாட்களில் 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 6 நாட்களில் 130-க்கும் அதிகமான மாணவர்கள்  தொற்றுக்கு ஆளானதால் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே கரோனா தொற்றுக்கான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம், பள்ளிகள் திறக்கப்படாததால் விளிம்புநிலைக் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் ஆன்லைன் வழிக் கல்வி கற்க வாய்ப்புகள் இல்லாத சூழலில், கல்வி தடைப்பட்டுள்ளது. மதிய உணவுக்குப் பதில் அரசு உலர் உணவுப் பொருட்களை அளித்தாலும் குறிப்பிட்ட குழந்தையை முழுமையாகச் சென்றுசேர்வதில்லை.

ஊரடங்கு மற்றும் விடுமுறையால் குழந்தைகள், பெண்களுக்கிடையே வன்முறை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் கவலை தெரிவிக்கின்றன. இதனால் இடைநிற்றல், குழந்தைத் திருமணங்கள் பெருக வாய்ப்புகள் அதிகம். எனினும் கரோனா 2-வது அலை குறித்த அச்சம், பருவ மழை ஆகியவற்றுக்கு இடையே பள்ளிகள் திறப்பு இப்போது அவசியமா? ஆபத்தா? என்ற கேள்வியுடன் குழந்தைகள், கல்வி சார்ந்து இயங்கும் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.

ஊரடங்கு தொடங்கிய ஒரு மாதத்துக்குப் பிறகு ஏப்ரல் 24-ம் தேதியில் இருந்து தன்னுடைய பள்ளி மற்றும் சுற்றுவட்டாரக் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கத் தொடங்கியவர் சிவகாசியைச் சேர்ந்த ஆசிரியை ஜெயமேரி. இன்றுவரை தொடர்ந்து 7 மாதங்களாகத் தினந்தோறும் சுமார் 100 குழந்தைகளுக்குத் தன்னார்வலர்கள் உதவியுடன் மதிய உணவளித்து வருகிறார். அன்றாடும் மாணவர்களைச் சந்திக்கும் ஆசிரியர் ஜெயமேரி பள்ளிகள் திறப்பு குறித்து என்ன நினைக்கிறார்?

கண்டிப்பாக விரைவிலேயே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் என மாணவர்கள் கல்வியுடன் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் என் மாணவனுக்கு அவன் பெயரை எழுதுவதையே மறந்துவிட்ட சூழல்தான் நிலவுகிறது. பள்ளிகளில் புத்தகங்கள் கொடுக்கும்போது கையெழுத்துப் போட அவர்கள் திணறுவதைக் கண்கூடாகவே பார்க்கிறேன். அதேபோல உறுதி செய்யப்பட்ட மதிய உணவையும் அவர்கள் இழக்கிறார்கள்.

குடும்பச் சூழலால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் வீட்டுப் பாடங்களையே முடிக்காமல் அடுத்த நாள் பள்ளிக்கு வருவர். அப்படிப்பட்ட சூழலில் 7 மாதங்களாகப் பள்ளிக்கு வராமல் அவர்களால் எப்படிப் படிக்க முடியும்?

அடுத்த ஆண்டுக்கு அவர்களைத் தயார்படுத்த ஆசிரியர்களாகிய நாங்களும் சிரமப்பட வேண்டி இருக்கும். இனி பிறக்கப்போகும் புதுவருடத்திலாவது மாற்றங்கள் ஏற்பட வேண்டும். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்களின் சூழலை முன்னிட்டாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.


பேராசிரியர் மாடசாமி, மூத்த கல்வியாளர்

பள்ளிகள் திறப்புக்கான அவசியமும் உள்ளது. ஆனால், அதில் அச்சமும் இருக்கிறது. பள்ளிகள் திறந்த மாநிலங்கள் அனைத்திலும் தொற்று வேகமாய்ப் பரவியதைக் கவனித்திருக்கிறோம். வேறு எந்தப் பலனும் இல்லை. குழந்தைகளின் உயிர் எதைக் காட்டிலும் முக்கியம்.

ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள்  மதிய உணவுகூட இல்லாமல் தவிக்கின்றனர். ஏராளமானோர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டனர். சிறுமிகள் குழந்தைத் திருமணங்களை எதிர்கொள்கின்றனர். பள்ளிகள், வகுப்பறைகள் இவற்றின் தேவையையும், ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரின் உறவையும் குழந்தைகள் பெரும் ஆதங்கத்துடன் உணரும் தருணம் இது.

இருப்பினும் பள்ளிகள் திறப்புக்கு அவசரப்பட முடியாத நெருக்கடி இருக்கிறது. உரிய பாதுகாப்பை அரசால் வழங்கமுடியுமா என்று தெரியவில்லை. குழந்தைகள் பத்திரமாக இருப்பது முக்கியம். 2021, ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறப்பு  குறித்து யோசிக்கலாம் என்பது என் கருத்து.


செந்தூரன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகத் தலைவர்

ஆன்லைன் வழிக் கல்வி நேரடிக் கற்றல் அனுபவத்துக்கு இணையாக இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கே இணையவழிக் கற்பித்தல் புதிதுதானே? வகுப்பறைகளைப் போல அவர்களைக் கவனித்துக் கற்பிக்க முடிவதில்லை. மாணவர்கள்  ஈடுபாட்டுடன் பாடங்களைக் கற்கிறார்களா என்பதும் தெரிவதில்லை.

அதேநேரம் மாணவர்களிடையே கரோனா குறித்த அச்சமும் விழிப்புணர்வும் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும். பள்ளிக்கு வரும்போதெல்லாம் ஆசிரியர்கள் அறிவுறுத்தினால் மட்டுமே மாணவர்கள்  முகக்கவசம் அணிகின்றனர். உயர் வகுப்பு மாணவர்களும் அப்படித்தான் இருக்கின்றனர்.

இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களும் தங்களின் குழந்தைகள் குறித்துக் கவலைப்படுவதால், திறப்பை அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் பள்ளிகள் திறப்பைத் தள்ளிப் போடலாம். மார்ச் மாதத்தில் நடைபெற வேண்டிய பொதுத் தேர்வை ஜூன், ஜூலை மாதத்தில் நடத்தலாம். எனினும் மருத்துவக் குழுதான் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும்.


நந்தகுமார், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர்

பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்கள் படிக்கவே மறந்துவிட்டார்கள். பெற்றோர்கள் மன உளைச்சலில் உள்ளனர். வீட்டில் செலவுகள் கூடிவிட்டன. தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. அவர்கள் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கின்றனர். அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவே இல்லை.

இப்போது பள்ளிகள் தவிர்த்து, திரையரங்குகள், மால்கள் உட்பட அனைத்துமே திறக்கப்பட்டுவிட்டன. எல்லாமே வழக்கம்போல மாறிவிட்டது. பெற்றோர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கரோனா பரவாதா? இந்த ஓராண்டு தாமதம், 10 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, மழைக்காலம் முடிந்தபிறகு, ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசர, அவசியம். குறைந்தபட்சம் 9 முதல் 12 வரையான வகுப்புகளை மட்டுமாவது திறக்க வேண்டும்.


கருணைதாஸ், அரசுப் பள்ளி ஆசிரியர்

பொதுவாகவே தொழில்நுட்பங்கள் வழியாக மாணவர்கள் கற்பது குறைவுதான். இதில் தனியார் பள்ளி மாணவர்கள் ஓரளவு கற்றாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகமிகக் குறைந்த அளவே கற்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வாங்கும் நிலையிலும் தொடர்ந்து மொபைல் ரீசார்ஜ் செய்ய முடிவதும் இல்லை.

இணையம் வழியே கற்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கற்றல்- கற்பித்தல் முழுமையாகச் சென்றடையவில்லை. எனக்குத் தெரிந்த 12-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவன் தொடர்ச்சியாக மொபைல் பயன்படுத்தியதால், பார்வை நரம்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கிறார். கரோனாவுக்கு மத்தியில் உடல்நிலை, பொதுத் தேர்வு குறித்துக் கவலையில் உள்ளார்.

ஒரு சில மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்த்துவிட்டுக் கணினி மூலம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தேவையில்லாத இணையப் பக்கங்களுக்குச் சென்று நேரத்தை வீணடிக்கின்றனர். கல்வித் தொலைக்காட்சியில் அரசு ஒளிபரப்பும் பாடங்களைக் கற்பவர்கள் குறித்த விவரங்கள் ஏதுமில்லை. எனவே மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் விரைவாகத் திறக்கப்பட வேண்டும்.

தேவநேயன், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்

பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கான முன்தயாரிப்புகள் நடந்திருக்கிறதா? விளிம்புநிலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தண்ணீர் வசதி, பாதுகாப்பான இடைவிலகல், கிருமிநாசினி வசதி செய்யப்படுமா?

பாடத்திட்டம் குறித்து இதுவரை முடிவுசெய்யப்படாதது ஏன்? குறைவான பாடத்திட்டம் இடைநிற்றலைத் தடுக்க வாய்ப்புண்டு. இதுகுறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

பள்ளிகள் திறப்பதற்கு முன் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். பாடம் கற்பிப்பதற்கு முன்னால் மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அதற்குப் பின்பு பள்ளிகளைத் திறந்து வகுப்பெடுக்கலாம். மருத்துவக் குழுவினர் கூடிப் பேசி, ஆய்வு மேற்கொண்டு இதை முடிவெடுக்க வேண்டும். முதல்வர், கல்வி அமைச்சர் என மேல் மட்டத்தில் இருந்து முடிவை அறிவிக்காமல், தரவுகள் மூலம் கீழ்மட்டத்தில் இருந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

மிகப் பெரிய துறையான கல்வித் துறையில் இன்று மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் தாக்கத்தை உடனே உணரமுடியாது. பல்லாண்டுகளுக்குப் பிறகே அதன் பாதிப்பு தெரியும். காமராசர் ஆட்சியில் திறக்கப்பட்ட பள்ளிகள் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். இதை உணர்ந்து இன்றைய ஆட்சியாளர்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும்.

விழியன் - குழந்தைகள் ஆர்வலர், சிறார் எழுத்தாளர்

அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விப் பாதையில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காகவே பள்ளிகள் திறப்பதைப் பலரும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எனினும் ஓரிரு மாதங்களை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செலவிட்டால், அவர்களைக் கல்வியின் பக்கம் மீட்டுக் கொண்டு வந்துவிடலாம்.

முதலில் அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவரையிலான ஆய்வுகளில் குழந்தைகளைக் கரோனா பெரிய அளவில் பாதிக்கவில்லை. அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும் அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அறிகுறிகள் இருந்தாலும் விரைவில் குணமாகிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் மூலம் குடும்பத்தினருக்குத் தொற்று அபாயம் ஏற்படலாம்.

இதனால் பள்ளிகள் திறப்பைக் குழந்தைகள் பாதுகாப்பு என்று மட்டுமல்ல, சமூகப் பாதுகாப்பு என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டும். கரோனா தொற்றின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில், தொடர்ந்து கணிசமாகக் குறைந்த பிறகு, பள்ளிகளைத் திறப்பது குறித்து யோசிக்கலாம்.

எனினும் இதற்கு சுகாதாரத்துறை முதலில் அனுமதி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிடமுடியாது. போதிய அளவில் சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் களத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுத்துவிடமுடியாது. ஏனெனில், எல்லாவற்றையும்விடக் குழந்தைகளின் உயிர் முக்கியம் என்பதை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு:  ramaniprabhadevi.s@hindutamil.co.in

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...