திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நிரப்பிட சென்னை பழங்குடியினர் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலணை, பாபநாசம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - 1 மற்றும் இடைநிலை பணியிடம் - 1 காலியாக உள்ளது. இந்த பணியிடங்களில் பழங்குடியினர் இன பட்டதாரி ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.9,000- ஊதியத்திலும், பழங்குடியினர் இன இடைநிலை ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8,000 ஊதியத்திலும் 10 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பழங்குடியினர் நல அலுவலகத்தை உரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் தொடர்பு கொள்ளலாம். பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சென்னை பழங்குடியினர் நல இயக்குநரால் தேர்வு, நேர்காணல் மற்றும் மாதிரி வகுப்பு நடத்தப்படும். இத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.