ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...
பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐ.ஐ.டி./ஜே.இ.இ. போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் நெக்ஸ்ட்ஜென் வித்யா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் உடன் இருந்தனர்.
இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப கல்வியை சேர்ந்த ஐ.ஐ.டி./ ஜே.இ.இ. உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தனியாக லாக்-இன் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். இதற்கான பதிவு வருகிற 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கும்.
http://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android
என்ற முகவரியில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.