சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் வேதியியல் பிரிவில் தேர்வானவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களிடம் 2 ஆசிரியர்கள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.