‘‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை குழந்தைகளுக்கும் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும், அனைத்து குழந்தைகளுக்கும் எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறும் உரிமை வழங்கப்படுவதாக சட்டம் தெரிவிக்கிறது. இச்சட்டம் கல்வி நிறுவனங்கள் கட்டமைப்பு, பாடத்திட்டங்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்கள் குறித்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் பிரிவு 23 (1) ன் படி, எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படக் கூடிய ஆசிரியர்களின் கல்வித் தகுதி தேசிய கல்வியியல் குழுமம் NCTE ன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசுகள் வரையறுக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் 23.8.2010 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மத்திய அரசுப் பள்ளிகளில் 6.3.2012 க்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தகுதித் தேர்வு கட்டாயம் என கூறப்பட்டு அதற்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள அரசு 20.9.12 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண் 294ன் படி 31.3.2012 க்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது.
கர்நாடக அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அறிக்கை தேதியான 28 .7.2012க்குப் பிறகே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது.
TET நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு உறுதிசெய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுச் செயலாளர்.
நீதிமன்றத்தில் பல்வேறு நீதியரசர்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையிலும், மெட்ரிக் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற நிலையிலும், மாநில அரசுகளை இதுகுறித்த சட்ட நடைமுறைகளில் உரிய முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையிலும் தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு தெளிவான முடிவை எடுக்காததால் ஏற்பட்ட சிக்கலான சூழலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்காலிக தீர்வாக இந்த வகை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு தமிழக அரசு முடிவு எடுக்கும் என கடந்த வருடம் ஒருசில பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளை செயல்படுத்தாத தமிழக அரசு, பாடத்திட்டங்கள் அதற்கான ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் நியமனம், வகுப்பறை கட்டமைப்பு போன்றவற்றை கண்டுகொள்ளாத அரசு ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதும் தொடர்ந்து குழப்பமான பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதும் அரசின் தெளிவற்ற நிலையை காண்பிக்கிறது.
மேலும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு விலக்களித்து அல்லது ஒரு புத்தாக்கப் பயிற்சியை நடத்தி அவர்களை தகுதி பெற்றவர்களாக அறிவிப்பதுதான் தமிழக அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பானதாக அமையும்’’ என்றார்.
2010 க்கும் 2014க்கும் இடையில் தெளிவான அரசாணைகள் இல்லாததால் ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல் ஆனால் மாவட்ட கல்வி அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டு பணியில் உள்ள 1700 ஆசிரியர்கள் நிலை கவலைக்குரியது.16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகளை மையமாக கொண்டு, 16/11/2012 ஆம் தேதிக்கு முன்பு பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுமையாக விலக்கு என்ற நியாயமான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விரைவில் அரசாணை வெளிவிடும் என்று நம்பலாம் .