கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது - அன்புமணி இராமதாஸ்...


கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது -  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை .. 


தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.


இந்தியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக  இருந்தது. கடந்த 9 மாதங்களாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,  காவல்துறையினர், பிற முன்களப்பணியாளர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பின் பயனாக தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது  தான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது பாராட்டத்தக்கது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் கூட கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் இது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட  50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 13 நாட்களாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் இரண்டரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.


அண்டை மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அங்கெல்லாம்   கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். கர்நாடகத்தில் கடந்த வாரம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குள்ளாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது உண்மை. சென்னை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் ஐ.ஐ.டி விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு தப்பவில்லை.


இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது மருத்துவ ரீதியில் சரியான முடிவாகத் தோன்றவில்லை. ஒர் வகுப்பில் ஒரு நேரத்தில் 25 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் வரை நெருக்கமாக அமர்ந்து இருக்கும் போது கொரோனா தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கழிப்பறைகள் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு முதன்மைக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவற்றைப் பயன்படுத்தும் போது கொரோனா பரவலுக்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன. இந்த ஆபத்துகளையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கக் கூடாது.


பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது அவர்கள் மூலமாக  வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவக்கூடும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில்  தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதாலும் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை. கல்வியை விட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியமானதாகும்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பது தான் சரியானதாக இருக்கும்  என்று ஒரு மருத்துவராக நான் கருதுகிறேன். எனவே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns